ஸ்ரீ நரசிம்மர் திருத்தலங்கள் – விசித்திர வடிவ நரசிம்மர்!
தென்காசியில் இருந்து கிழக்கில் பாவூர்சத்திரம் அருகில் சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 2 கிமீ தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ள கீழப்பாவூர் உள்ளது.
கீழப்பாவூர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர். 16 திருக்கரங்களுடன் திரிபங்க நிலையில் கண்களை மூடி தவக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார்.
இரண்யனை மடியில் கிடத்தி இரண்டு கரங்களால் தாங்கிப் பிடிக்க, இரண்டு கரங்களால் குடலை உருவ, இதர கரங்களில் சக்கரம், சங்கு தாரியாய் ஆயுதங்களுடனும், வாழ்த்தும் கரங்களுடனும் ஹிரண்ய வதத்தோற்றம் கொண்டுள்ளார்.
இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.
கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும் போன இந்த ஜென்பத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். உலகியலான இன்பமும் கிடைக்கும்.
வேடசந்தூரில் மனித வடிவ காட்சி தரும் நரசிம்மர்:
திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூரில் சிம்ம முகம் இல்லாத அர்ச்சாவதார (மனிதர்களின் வழிபாட்டிற்குரிய வடிவம்) வடிவத்துடன் இவர் அருள் பாலிக்கிறார்.
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார்.
அதன்படியே பக்தர்கள் கோயில் எழுப்பினர். பக்தரின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, சிங்க முகம் இல்லாமல், மனித முகத்துடன் காட்சி தந்ததால், பக்தர்கள் அதே அமைப்பிலேயே சிலை வடித்தனர். பத்ம விமானத்தின் கீழ் சுவாமி, சங்கு, சக்கரத்துடன் அபயவரத முத்திரைகள் காட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள ஒரு தூணில் புடைப்புச்சிற்பமாக சிவலிங்கம் உள்ளது. குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம். இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒளியும். உடல்நலம் உண்டாகும்.
பஞ்ச பாண்டவர் வழிபட்ட தலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது அய்யாவாடி என்ற ஊர். இங்கு தர்மசம்வர்த்தினி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னிதியில் பிரத்யங்கராதேவி அருள்பாலிக்கிறார். பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டதால் முதலில் ‘ஐவர்பாடி’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது. தேவியின் சன்னிதியில் அமாவாசை தோறும் ‘நிகும்பலா யாகம்’ நடத்தப்படுகிறது. எதிரிகளை அழிக்கும் சக்தியை அருளும் யாகம் இது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகள் பயம் நீங்கும் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.
