அன்பே ஆன்மீகம் – உணர்த்திய கதை!
கடவுளை பழித்துப் பேசும் ஒருவர் இருந்தார். ஒரு கட்டத்தில், வாழ்வின் சுமையைத் தாங்க முடியாமல் கோயிலுக்கே சென்று விட்டார். கடவுளை தரிசித்து விட்டு அங்கிருந்த துறவியைச் சந்தித்தார். “”சுவாமி! இவ்வளவு காலம் அறியாமல் இருந்து விட்டேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று வேண்டினார்.
அப்படியே ஆகட்டும்” என்றார் துறவி. துறவியின் சீடன் ஒருவன் இதைத் தடுத்தான்.
“”வேண்டாம் குருவே! கடவுளை இகழ்ந்த இவனை ஏற்பது கூடாது. செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பது தான் சரி. அவன் வாழ்வில் துன்பப்படத் தான் வேண்டும்” என்றான். துறவி சிரித்தார். “”இதோ பாரப்பா! கடவுள் “இல்லை’ என்று மறுப்பதற்கு எந்த சிந்தனையும் தேவையில்லை. “உண்டு’ என்று சொல்வதற்கு தான் அறிவும், அனுபவமும் தேவைப்படுகிறது.
சிலர் இவரைப் போல “எடுப்பார் கைப்பிள்ளை’யாகி வாழ்வில் தவறான முடிவுக்கு ஆளாகிறார்கள். மனம் வருந்தி கடவுள் பக்கம் திரும்பிய இவரையும் நம்மோடு சேர்த்துக் கொள்வது தான் ஆத்திகம். அனைவர் மீதும் அன்பு காட்டுவதே ஆன்மிகத்தின் அடிப்படை. பிறர் துன்பம் தீர்ப்பது தான் கடவுளுக்குச் செய்யும் தொண்டு,” என்று விளக்கம் அளித்தார். அன்பே ஆன்மிகம்.
நாத்திகவாதி கதை:
ஒரு சமயம் வாரியார் சுவாமிகளிடம் ஒரு அன்பர் கேட்டார் சுவாமி நாத்திகர்களுக்கு இறைவன் அருள் புரிவாரா? இறைவனை யார் எல்லாம் சிந்திக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இறைவன் அருள் புரிவார். ஆகையால் நாத்திகனுக்கும் அருள் புரிவார்…. புரியவில்லையே சுவாமி… நீ ஆத்திகன் தானே… ஆமாம் சுவாமி… உன்னை விட அதிகமாக இறைவனை சிந்திப்பவன் யார் தெரியுமா? நாத்திகன்தான்.. எப்படி சுவாமி?.. உன்னை விட சுவாமியைப் பற்றியும், சுவாமியுடைய செயல்களையும் அதிகம் படித்து, சிந்தித்து தெரிந்து வைத்திருப்பவன் நாத்திகன்.
ஒரு நாத்திகன் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு அவன் போக்கில் போகமாட்டான். இறைவன் சம்பந்தப்பட்ட நூல்களை உன்னை விட அதிகமாக படித்து சிந்திப்பவன் நாத்திகன்தான். ஏன் தெரியுமா? கடவுளை நம்புகிறவனையும் தன் பக்கம் இழுக்கவேண்டும். நீ கேட்கும் இறைவன் சம்பந்தமான கேள்விகளுக்கோ, செய்திகளுக்கோ மறுப்பு சொல்லி அது மூட நம்பிக்கை என்று சொல்ல வேண்டும். அதற்காகத்தான் அவன் இறைவன் பற்றிய நூல்களை அதிகமாகவே படித்து சிந்திக்கிறான்.
அவனும் ஏதோ ஒரு வகையில் இறைவன் சிந்தனையிலேயே இருப்பதால் அவனுக்கும் இறைவன் அருள் புரிவார். நம் சமயம் நாத்திகத்தையும் ஏற்றுக் கொள்ளும் சமயம். அப்படிப் பட்ட நாத்திகர்களில் பலர் கடைசி காலங்களி ஆத்திகராக மாறிய வரலாறும் உண்டு கண்ணதாசன் மாதிரி. சைவ சமயம் எல்லோரையுமே அரவணைக்கும் மதமாகும்.
நாம் பகவான் என்று சொல்லுவதை நாத்திகன் இயற்கையின் பிரம்மாண்டமான சக்தி என்று சொல்கிறான். இவ்வாறு சொல்லிவிட்டு மேலும் கூறுகிறார். இந்த உலகத்தை இயக்க அறிவுள்ள ஒரு பொருளால்தான் முடியும். அதைத்தான் அறிவுள்ள பொருளாக நாம் இறைவன், கடவுள், பரமன் என்று பார்க்கிறோம். அவன் சொல்லுகிற இயற்கைக்கு அறிவு கிடையாது. அதனால் .அறிவு இல்லாத ஒரு பொருளால் உலகை இயக்க முடியாது. நான் இப்படிச் சொல்வதை நாத்திகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள், அவர்கள் வழியில் போகட்டும். நாம் நம் வழியில் போவோம்.
