எந்த மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? பௌர்ணமி விரத ரகசியங்கள்!!

212

சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயமே! பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். சில விஷயங்கள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. ஆன்மீகமோ? அறிவியலோ? இரண்டில் எதுவாக இருந்தாலும் பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப் படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். எந்த மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்று இப்பதிவில் இனி காணலாம் வாருங்கள்.

உலகத்தை படைத்த உலக நாயகியான அம்பிகையை பௌர்ணமியில் வழிபட வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி ஒளிமாயமான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பௌர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

சித்திரை: சித்திரை மாதம் வரும் பௌர்ணமி ‘சித்ரா பௌர்ணமியாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பௌர்ணமி மிகவும் விஷேசமானது. இந்த பௌர்ணமியில் விரதம் இருந்து அம்பிகையை விளக்கேற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். நைவேத்யமாக எழுமிச்சை சாதம், பானகம், ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் வைக்க செல்வம் நிலைக்கும், தானியம் பெருகும்.

வைகாசி: வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அம்பிகைக்கு விரதமிருந்து, விளக்கேற்றி வழிபாடு செய்தால் பிறவா நிலையை அடையலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலும், விளாம்பழமும் வைப்பது சிறப்பானது. இதனால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.

ஆனி: ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று அம்பிகைக்கு விரதம் இருந்து, விளக்கேற்றி வழிபட்டு வந்தால், காரிய வெற்றி கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சுபமாக முடியும். நைவேத்தியமாக உளுந்தம் பருப்பு சாதமும், முக்கனிகளையும் படைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இந்நாளில் சாவித்ரி பூஜை செய்வது மாங்கல்ய பலம் அதிகரிக்க செய்யும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஆடி: ஆடி மாதம் வரும் பவுர்ணமி மிகவும் விசேஷமானது. அன்றைய தினத்தில் அம்பிகையை நினைத்து மந்திரங்கள் ஜபித்து, விரதம் அனுஷ்டித்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, வாழைப்பழத்தை சாதத்துடன் கலந்து வைத்தியமாக படைத்து, விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் வந்து சேரும். ஆடி மாத பௌர்ணமியிலும் சாவித்திரி விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும். வடமாநிலத்தவர்கள் கோபத்ம விரதம், சாவித்திரி விரதம் இந்த பவுர்ணமியில் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆவணி: ஆவணி மாதம் வரும் பவுர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும். இந்நாளில் அம்பிகையை துதித்து விளக்கேற்றி, நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

புரட்டாசி: புரட்டாசியில் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து அம்பிகையை வணங்கி, விளக்கேற்றி வழிபாடு செய்வதனால் வாழ்வில் சகல நன்மைகளும் நடைபெறும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். புரட்டாசி பௌர்ணமிக்கு நைவேத்தியமாக இளநீர் படைப்பது விசேஷமானது.

ஐப்பசி: ஐப்பசியில் வரும் பௌர்ணமி விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் பசி, பிணிகள் நீங்கும். வெண்பொங்கலும், நெய் பொங்கல் படைத்து அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கார்த்திகை: கார்த்திகை மாத பௌர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி அம்பிகையைத் துதித்து, விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால், பேரும், புகழும் நிலைத்து நிற்கும். இம்மாத பௌர்ணமி தீபத் திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

மார்கழி: மார்கழி மாதம் வரும் பவுர்ணமியில் விரதமிருந்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். உடல் நலம் சீராகும். நைவேத்தியமாக களியை படைத்து வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும். மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வந்தால் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தை: தை மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி அம்பிகையை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பாயாசம் நைவேத்தியம் படைத்து பவுர்ணமியை வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். தை மாதம் வரும் பௌர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாசி: மாசி மாதம் வரும் பௌர்ணமியில் அம்பிகையைத் துதித்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் துன்பங்கள் விலகி ஓடிவிடும். இன்பம் நிலைத்திருக்கும். இந்நாளில் சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக வைத்து ஈசனையும் வழிபடுவது மேலும் சிறப்பானது. சிவ தீட்சை பெற்ற யோகம் இந்த வழிபாடு பெற்று தரும்.

பங்குனி: பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து வழிபடுவது செய்தால் தர்மம் செய்த பலன் கிடைக்கும். அம்பிகைக்கு விளக்கை ஏற்றி பருப்பும், நெய்யும் கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்து வழிபாடுகள் செய்வதன் மூலம் புண்ணியம் பெறலாம். பௌர்ணமி என்பதே சிறந்த நாளாக இருக்கும். அனைத்து பௌர்ணமியும் விஷேஷமானது தான். தெய்வங்களுக்கு அதீத சக்தி பௌர்ணமியில் இருக்கும். இந்த நாளில் முறையாக விரதம் இருந்து, எளிமையாக வீட்டிலேயே விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். ஆனால் கிரிவலம் வருவது, ஆலய தரிசனம், கோபுர தரிசனம் போன்றவை மேலும் சிறப்பான பலன்களை தரும். வாழ்வில் வளம் பெற பௌர்ணமியில் விளக்கேற்றுங்கள்.