தயிர்சாதம், நெல்லிக்காய் ஊறுகாய் படையல் செய்தால் பணம் அதிகரிக்கும்!

105

தயிர்சாதம், நெல்லிக்காய் ஊறுகாய் படையல் செய்தால் பணம் அதிகரிக்கும்!

சென்னை மாவட்டம் வயலாநல்லூர், திருமணம் கிராமம் பட்டாபிராம் செல்லும் வழியில் உள்ள ஊர் தான் சித்துக்காடு. இந்த ஊரில் உள்ள கோயில் தான் தாத்திரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் தாத்திரீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். தாயார் பூங்குழலி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தல சிறப்பு:

சிவன் சன்னதிக்கு எதிரேயுள்ள நந்தி சாந்தமாக காட்சி தருகிறார். இவருக்கு மூக்கணாங்கயிறு என்று எதுவும் இல்லை. பிரகாரத்தில் ஆதிசங்கரர், சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன.

சுவாதி நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

வயதில் பெரியவர்கள் இவர்களிடம் விரும்பி வந்து பேசுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்பது என்பது இவர்களது இயல்பான ஒன்று. புத்திக் கூர்மையோடு, எதிலும் முன் யோசனையோடு தான் செயல்படுவார்கள். வாழ்க்கையின் அனைத்து சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். எப்போதும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். பழகுவதற்கும் இனிமையானவர்கள்.

பரிகாரங்கள்:

சுவாதி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல சிவபெருமானை வழிபடுகின்றனர். மேலும், திருமணத்தடை உள்ளவர்கள், இதய நோயால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் இங்குள்ள தாத்திரீஸ்வர்ரை வழிபாடு செய்கின்றனர்.

தல பெருமை:

திருமண வழிபாடு:

மன்னன் இங்கு கோயில் திருப்பணியை செய்து கொண்டிருந்தான். அப்போது, இங்குள்ள பூந்தோட்டத்தில் அம்பாளின் சிலை கிடைக்கப் பெற்றான். அந்த அம்பாளுக்கு பூங்குழலி என்று பெயர் சூட்டியதோடு, சன்னதியும் எழுப்பினான். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி, நெல்லியப்பருக்கு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், அம்பாளுக்கு பச்சை நிறத்தில் வஸ்திரம் சாற்றியும், வளையல் அணிவித்தும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர்.

ஆயுள்பலம் அருளும் சித்தர்:

கோயிலின் தூண்களில் சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு உயிர் காப்பவராக அருளுவதால், இந்த சித்தருக்கு இந்தப் பெயர் பெற்றது. ஆயுள் பலம் அதிகரிக்க இந்த சித்தரை வழிபடுகின்றனர். மேலும், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

நட்சத்திர தீபம்:

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் தான் இந்த கோயில். ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு விசேஷ பூஜைகள், அபிசேஷங்கள் செய்யப்படும். திருக்கார்த்திகை தினத்தன்று சிவன் சன்னதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்யப்படுகிறது. திருவாதிரை நாளில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. நடராஜர் சிவகாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண்போருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். அதோடு, கணவன் – மனைவி இருவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வர் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம்:

சுவாதி என்ற சொல்லில் சிவ மற்றும் விஷ்ணு சக்திகள் நிறைந்துள்ளன. நமச்சிவாய மந்திரத்தில் வகாரத்தில் சுவாதி என்ற புனித சொல் அடங்கும். பெருமாளின் அம்சமாக திகழும் சுந்தரராஜர், திரிவிக்ரம், வாசுதேவர் ஆகிய தெய்வங்களுக்குரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்துள்ளன. ஆதலால், சுவாதி நட்சத்திர நாளில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் அருளும் சித்துக்காடு கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு என்கின்றனர். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி நட்சத்திர நாளன்று இத்தல குபேரனுக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன் தயிர்சாதம், புளியோதரை நைவேத்தியம் படைத்து வழிபட்டு அதனை ஏழை மக்களுக்கு தானம் செய்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

படுக்கை ஜடாமுடி சித்தர் மற்றும் பிராண தீபிகா சித்தர் ஆகிய இருவரும் இங்கு தவம் செய்தனர். இங்குள்ள நெல்லிமரத்தடியில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து அதற்கு நெல்லியப்பர் என்று பெயர் சூட்டினர். ஆனால், சமஸ்கிருத மொழியில் நெல்லியை தாத்திரி என்பர். ஆகையால், இத்தல இறைவனர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். மலர்ச்செடிகள் சூழ மணம் பொருந்திய அழகிய வனத்தில் சிவபெருமான் காட்சி தருவதால், இத்தலத்திற்கு திருமணம் என்று பெயர் வந்தது. இத்தலத்தில் சித்தர்கள் அதிகம் வசித்ததால் சித்தர்காடு என்று முதலில் அழைக்கப்பட்ட தலம் நாளடைவில் சித்துக்காடு என்றானது.

இத்தல இறைவன் நெல்லியர் என்பதால், சுவாமிக்கு நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி நெல்லியப்பருக்கு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், அம்பாளுக்கு பச்சை நிறத்தில் வஸ்திரம் சாற்றியும், வளையல் அணிவித்தும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர்