களத்திர தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

28

களத்திர தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது பச்சை பெருமாள் திருத்தலம். இங்கு திருமால் உடையார் காட்சி தருகிறார். இவரை வழிபட களத்திர தோஷம் மட்டுமின்றி எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கோவில் முகப்பு, திருமால் உடையார், மங்களாம்பிகை மகா விஷ்ணுவுக்கு ஓர் ஆசை வந்தது. “என்ன ஆசை” என்கிறீர்களா?

சிவ தத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைதான் அது. ஆனால் அதுபற்றி யாரிடம் கேட்பது? என்று யோசித்த மகாவிஷ்ணு, சிவனிடமே கேட்டு விடலாமே என்ற முடிவுக்கு வந்தார். இதற்காக பச்சை பெருமாள் தலத்திற்கு வந்தார். இங்குதான் திருமால் உடையார் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘திருமால் உடையார்.’ மற்றொரு பெயர் ‘விஷ்ணு வல்ல பேசுவரர்.’ இறைவியின் பெயர் மங்களாம்பிகை.

இந்த ஆலயம் வந்த திருமால் தல விருட்சமான வில்வ மரத்தடியில் அமர்ந்தார். சிவபெருமானை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார். பல நூறு ஆண்டுகள் கடந்தன. அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் திருமாலுக்கு காட்சி தந்து உபதேசம் செய்தார் என்று வரலாறு சொல்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் கோயில் முகப்பில் சிவபெருமானுக்கு திருமால் பூஜை செய்யும் சிற்பம் உள்ளது.

கோயிலானது கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட பிரகாரம். நடுவே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. அடுத்துள்ள மகா மண்டபத்தின் வலதுபுறம் அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி இளநகை தவழ அருள்பாலிக்கிறார்.

இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சிவதுர்க்கை, மகா விஷ்ணு ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருச் சுற்றின் தெற்கில் சித்தி விநாயகர், கிழக்கில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதிகள் உள்ளன. இங்கு சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இவர் மங்கள சனியாக அருள்பாலிக்கிறார். கோயிலில் கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சூரியன், பூலோக நாதர் சன்னிதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவன் இறைவிக்கு அபிஷேக, ஆராதனை செய்து வணங்கினால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. சுக்ரனுக்கு அதிபதி மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவே இத்தல இறைவனை பூஜை செய்து பயன்பெற்றதால் களத்திர தோஷம் விலக இத்தல இறைவன் அருள்பாலிக்கிறார் என்பது நிஜமே.

இந்த ஆலயத்தில் நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று ஆலயம் முன்பு பலநூறு பக்தர்கள் சூழ சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.

ஐப்பசியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை, 108 பெண்கள் கலந்துகொள்ளும் குத்துவிளக்கு பூஜை இறைவன் சன்னிதி முன் நடக்கும். பங்குனி உத்திரம் அன்று முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் அன்று பக்தர்கள் கூட்டத்தால் ஆலயம் நிரம்பியிருக்கும்.