அணிகலன்களின் தத்துவங்கள் பகுதி 3!
கண் மை:
குரு க்ரு பாஞ்சல பாயோ மேரே பாயி” என்ற பாடலில் சகோதரா குருதேவரின் அருள் நோக்கு என்ற கண் மை யை நீ அணிந்து கொண்டால்தான் பிறவி பூரணம் ஆகும் , எல்லா இடங்களிலும்ஸ்ரீ ராமனின் வடிவம் தெரியும் என்கிறார் கபீர்தாசர். “கருப்பு வண்ணனாயினும் அஞ்ஞான இருளை போக்கும் சிறந்த ஞான தீபம் ஸ்ரீ கிருஷ்ணபிரான் என்கிறது ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்.
பக்தி என்ற கண்மையை அணிந்த பின் அஞ்ஞானம் என்ற இருள் அகன்று நீக்கமற எங்கும் கண்ணனின் வடிவமே தெரியும் என்பதை ” கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்கவே” என்கிறார் நம்மாழ்வார். கண்மை கூறும் அரிய தத்துவம் ” என்னை அணியும் போது இறைவனின் கருமை நீலத்திரு மேனியையும், அவர் தெய்வீக லீலைகளையும் நினைத்துக் கொண்டு அணிந்து கொள் அப்போதுதான் நமக்கு பிறவிப் பயன் கிட்டும்.
திருமாங்கல்ய நாண்:
திருமணத்தில் முக்கியமானது திருமாங்கல்ய நாண் கட்டுவதுதான். அதைத்தான் மங்கள சூத்திரம் தாலி, மாங்கல்ய சரடு என்று பலவகையான அழைப்பார்கள். திரு என்றால் திருமகளை நினைவுபடுத்தும், மாங்கல்யம் என்பது ஆத்மாவின் நாயகனான இறைவனை நினைவுபடுத்தும். மா- என்றால் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆத்மா என்று பொருள்
கலயம் என்றால் கலசம் – பாதுகாப்பு என்று பொருள். வடமொழியில் புருசன் என்றால் ஆத்மா என்று பொருள் , கணவன் தான் மனைவியினுடைய ஆத்மா என்பதால் தான் கணவனை புருசன் என்று அழைத்தார்கள்.
மாங்கல்யம் தந்த நாநே, மாங்கல்ய மந்திரத்தின் கருத்து – இதை உன் கழுத்தில் கட்டுகிறேன், செளபாக்கியவதியே நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக வாழ்ந்திருப்பாயாக என்பது தான் அதன் கருத்து.
மூன்று முடிச்சு என்பது மூன்று குணங்களையும் கடந்து விடச் சொல்கிறது. மற்றொரு தத்துவம் ” பெண்ணே உன் உடல் பொருள், ஆவி மூன்றுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்” என்று கணவன் கூறுவதாகக் கருத்து. பிறிதொரு தத்துவம் கணவன் பெரியோர்கள், தெய்வம் ஆகிய மூன்றுக்கும் கட்டுபட்டவன் ஆகஇருப்பான் என்பதற்கு நான் பொறுப்பு என்று கணவனே மூன்று முடிச்சு போட்டு உறுதி கூறுவதாக கருத்து.
திருமாங்கல்ய சரடின் நிறம் மஞ்சளாக இருக்க வேண்டியதன் தத்துவம் – மஞ்சள் நிறம் தெய்வீக நிறம், மஞ்சள் கிழங்கு மாங்கல்ய சரடு உடன் இணைத்து திருமணம் செய்விப்பதும் உண்டு. தீவினை என்கிற கிருமிகளை அழிக்கம் சக்தியின் வடிவம் தான் மஞ்சள்.
ஆடைகள்:
முடிவில்லாத சிவபிரானுக்கு திசைகளே ஆடைகள் ஆகும் என்கிறார் திருமூலர், சிவபிரானார் திகம்பரமாக உள்ளார் என்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொல்கிறது. திக் – அம்பரம் – திசையாகிய ஆடை என்று பொருள் அத்திசைகள் பகலில் வெண்ணிறமாகவும், இரவில் கருநிறம் உடையதாகவும், அந்திப்பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் சிவபெருானுக்கு அமைகிறது. என்கிறார் நான் மணிமாலையில் குமரகுருபரர் “ஆத்மாவிற்கு சரீரம் என்பது ஆடையைப் போன்றது என்றும் அவை நைந்து போன பின் ஆத்மா பதிய சரீரத்தை அடையும் என்றும் பகவத் கீதை அருளிகிறது…