அர்த்தமுள்ள இந்துமதம் – பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம்

304

இந்து மதத்தில் பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு ஆசிரம தர்மங்கள் சொல்லப்படுகின்றன, அப்படியென்றால் என்ன?

அதன் விளக்கம் யாது என்று பலர் அறிந்து கொள்ள விரும்பலாம்..?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் தன்மை மறைந்து கிடக்கிறது என இந்து மதம் சொல்கிறது.

அப்படி மறைந்து கிடக்கும் கடவுள் தன்மையை எல்லா மனிதர்களும் தானாகவே உணர்ந்து கொள்ள முடிவதில்லை. எதாவது ஒரு புறத்துண்டுதல் வேண்டும்.

எனவே மனிதனுடைய அறிவு கண்ணை திறப்பதற்கு பிரம்மசரியம் என்ற தர்மம் இந்து மதத்தால் வலியுறுத்தப்படுகிறது.

பெண்கள் ஆண்களை தொடாமலும், ஆண்கள் பெண்களை நாடாமலும் இருப்பது மட்டுமல்ல பிரம்மசரியம்.

நல்ல விஷயங்களை கற்றுகொள்ளுதல், உலக ஞானம் பெறுதல், வாழ்க்கை முறைகளை அறிதல், தனது சுயதர்மமான செயல்களை புரிவதற்கான தொழில்நுட்ப பயிற்சியை பெறுதல் ஆகிய எல்லாமே பிரம்மசரிய தர்மத்திற்குள் அடங்கி விடுகிறது.

வித்தைகளை கற்றுக் கொண்டேயிருப்பது மட்டும் வாழும் முறையாகாது.

கற்றவற்றை வாழ்ந்து காட்ட வேண்டும்.

எனவே ஒரு மனிதன் ஐந்து வயது முதல் இருபத்தி நான்கு வயது வரை கற்பதை கற்றுவிட்டு உலக வாழ்க்கைக்குள் நுழைவதே கிரஹஸ்தம் ஆகும்.

இந்த தர்மத்தை மேற்கொள்ளும் போது தனிமனிதனாக இருந்தவன் தனது வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள வேண்டும்.

ஆண், பெண் சேர்க்கை என்பது வெறும் உடல் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, சமுதாயத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கே ஆகும்.

பிரம்மசரியத்தை விட்டு கிரஹஸ்தனாக மாறும் ஆணும் பெண்ணும் தங்களது அறிவை நல்ல வழியில் செலவிட்டு பொருள் தேட வேண்டும்.

காரணம் குடும்பஸ்தனை நம்பியே சமூகம் இருக்கிறது. அரசாங்கத்திற்கு வரிகட்டுவதும், வணிக பொருட்கள் விற்பனையாவதும், மாணவர்களும் வாழ்க்கையை துறந்த சன்னியாசிகளும் நம்பியிருப்பது குடும்பஸ்தனையே ஆகும். இப்படிப்பட்ட தர்மமே கிரஹஸ்த தர்மமாகும்.

நல்ல பிள்ளைகளை பெற்று நல்ல விதத்தில் பொருள் ஈட்டி சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற ஒத்தாசைகளை செய்து முடித்த பிறகு மனிதர்கள் அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட்டு ஒதுங்கி ஓய்வெடுப்பதே வானபிரஸ்தம் எனப்படுகிறது.

எளிய வாழ்க்கையும் இறைவழிபாட்டையும் தனது வாழ்க்கை துணையுடன் ஊருக்குள் இருந்தோ ஊருக்கு வெளியே சென்றோ மேற்கொள்ள வேண்டியது வானபிரஸ்தனின் முக்கிய கடமையாகும்.

பரம்பொருள் ஒன்றே நித்தியமானது. புலன்களால் அனுபவிக்கும் எல்லாம் அநித்தியமானது என்பதை உணர்ந்து மனதை அடக்கி மூச்சை தேக்கி உடலை ஒடுக்கி வாழ்வதே சன்னியாச தர்மமாகும்.

சன்னியாச தர்மத்தை மேற்கொள்ளுதல் என்பது உலகத்தை புறக்கணிப்பது ஆகாது.

நமக்கு சொந்தம் என்ற நிலையிலிருந்து மாறி உலகுக்கு நாம் சொந்தம் என்ற நிலைக்கு வருவதே சன்னியாசம் ஆகும்.

சகல உயிர்களையும் தன் உயிர் போல் மதித்தல் ஆசைகளை அடக்கி, சங்கல்பத்தை ஒழித்து பரம்பொருளின் எண்ணப்படி வாழும் சன்னியாச தர்மம் மனிதனை நாட்டை விட்டு காட்டுக்கு போ என சொல்லவில்லை.

மாறாக கசாப்பு கடையில் இருந்தாலும் சைவமாய் இரு.

மதுக்கடையில் வாழ்ந்தாலும் குடிக்காமல் இரு.

என்பதை போல சாதாரன உலக மக்களிடத்தில் வாழ்ந்தாலும் பற்றற்று இரு.

தெய்வத்தை பற்றி கொண்டிரு என்று சொல்வதே ஆகும்.

இந்த நான்கு வகை தர்மங்களை கடைபிடிப்பதற்கு எந்த காலகட்டம் சிறந்தது.

திருமணம் செய்து கொள்வதை பொறுத்தா, பணம் சம்பாதிப்பதை பொறுத்தா என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழலாம்.

சாகும் நிமிடம் வரை படித்துக் கொண்டே இருந்தாலும் பள்ளி படிப்புக்கென்று ஒரு வயது இருக்கிறது.

அதிகபட்சமாக முப்பது வயதுக்கு மேலும் படிப்பது அவ்வளவு நன்றாகயிறாது.

எனவே இல்லறத்தான் என்ற தகுதியை அதிகபட்சம் முப்பது வயதிலாவது மனிதன் பெற வேண்டும்.

அப்படி பெற்ற பிறகு தனது பிள்ளைகள் பொறுப்புக்கு வந்தவுடன் ஓடிக்கொண்டேயிருப்பவன் ஆசைகளை வளர்த்துக் கொண்டு அற்ப வாழ்க்கை வாழ்பவன் ஆகும்.

சன்நியாயாச தர்மத்தை ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம் என்கிறது இந்துமதம்..

காரணம் ஒருவனுக்கு ஞானம் இந்த வயதில்தான் பிறக்கும் என்று எப்படி வரையரை செய்ய முடியும்?

பல் முளைக்கும் முன்பும் காவி தரிக்கலாம் பல் விழுந்த பிறகும் தரிக்கலாம்.

ஆனால் ஜெயின் மதத்தைப் போல துறவு பெற்றால்தான் முத்தி என இந்துமதம் பிடிவாதம் செய்வதில்லை.

*அர்த்தமுள்ள இந்து தர்மம்*

*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்…!*