உலகமே கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னப்பட்டு சிதிலமடைந்து, உணவுக்காக கையேந்திக் கதறும் இந்த நேரத்தில் கூட…
வடலூரில் வள்ளலார் பெருமகன் 1867 ஆம் ஆண்டு, மே மாதம் 23 ஆம் தேதி, சாமானியர்களின் பசிப்பிணியை போக்குவதற்காக ஏற்றி வைத்த அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது.
அமெரிக்காவில் பசி, பட்டினியால் கார்களில் வந்து உணவுக்காக காத்திருக்கிறார்கள் என்கிற செய்தியை கேள்விப்பட்ட நிலையில்… எந்தப் படாடோபமுமற்ற
வடலூரில், வற்றாத ஜீவநதியாய் மூன்று நேரமும் பெருக்கெடுக்கிறது உணவு.
கொரோனா வைரஸ் தொற்றால்,எதுவும் நிகழ்ந்துவிடுமோ என்ற நெருக்கடியில் கூட, வடலூரிலுள்ள சத்திய தருமச்சாலை இன்னமும் அடைக்கப்படவில்லை.
“உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது,,,, இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது”” என்று சத்திய தருமச்சாலையில் அடுப்பை மூட்டி வைத்து வள்ளலார் பெருமகன் தன்னுடைய உள்ளக்கிடக்கையை பகிர்ந்து கொண்டதாக அறிகிறோம்.
கிட்டத்தட்ட இந்தியாவில் அனைத்து கோயில்களிலும், தினந்தோறும் வழங்கப்பட்ட அன்னதானமும் ஊரடங்கின் போதே தன்னுடைய நடையை சாத்தி கொண்ட நிலையில்,,,
வடலூர் மட்டும் தனித்து நின்று, தருமத்தின் மேன்மையை உலகிற்கு பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடி நின்ற எங்கள் வள்ளலார் பெருமகன் வாக்கு, ஒருபோதும் பொய்க்காது என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமோ…!
*திருவாவடுதுறை ஆதீனத்தை போன்றோ, மதுரை ஆதீனத்தை போன்றோ… திருப்பதி தேவஸ்தானத்தை போன்றோ… வடலூர் சத்திய தருமசாலைக்கும் எல்லையற்ற சொத்துக்கள் மட்டும் இருக்குமென்றால், இன்றைக்கு அது இந்தியாவிற்கே சோறு போட்டிருக்கும்.*
*இத்தனை நெருக்கடியிலும் கூட தருமச் சாலைக்கு வெளியே உள்ள தானிய உண்டியலில், பச்சரிசியும், புழுங்கலரிசியும் இன்னமும் விழுந்து கொண்டுதான் இருக்கிறது…*
*பருப்பு உண்டியலிலும் தருமத்திற்கு பஞ்சமில்லை…*
விளைச்சலில் ஒரு பங்கை தருமச்சாலைக்கு தருவேன் என்ற சுற்றுவட்டார மக்களின் அன்பு , 154 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருப்பதுதான், தமிழர் நிலத்தின் ஆகப்பெரிய பெருமை.
இன்னும் சொல்லப்போனால் சத்திய தருமச்சாலையில் சமையல்கட்டு அருகேயுள்ள கிணற்றில் கூட,154 ஆண்டுகளாக தண்ணீர் வற்றவில்லை என்கிறது வடலூர் சரித்திரம்…
இந்தக் கடுமையான நோய்த்தொற்று காலத்திலும், தினமும் ஆயிரம் பேருக்கு மேல் மூன்று நேரமும் வயிறார பசியாறிக் கொண்டிருக்கிறார்கள்.
பசியென்று
கதவைத் தட்டும் எவருக்கும் உணவில்லை என்று சத்திய தருமச்சாலையின் கதவுகள் ஒருபோதும் அடைக்கப்பட்டதில்லை.
இன்றளவும் அது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது…
அதைவிட தருமத்தின் உச்சமாக இன்னொன்றும் வடலூரில் நடக்கிறது…
மாற்றுத் திறனாளிகள், வயோதிகம் காரணமாக நடந்து வந்து உணவு வாங்க முடியாதவர்களை கருத்தில் கொண்டு… அவர்களுடைய பசியைப் போக்க வேண்டும் என்பதற்காக, சத்திய தருமச்சாலையிலிருந்து உணவு எடுத்துக் கொண்டு செல்லப்பட்டு, மூன்று நேரமும் அவர்களுக்கு பசி ஆற்றுவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த 154 ஆண்டுகளில் கோடிக்கணக்கான வயிறுகளின் பசித்தீயையைப் போக்கிய எங்கள் வடலூர், உலகில் எங்கினும் காணக் கிடைக்காத ஒரு தரும நகரம்.
எல்லாவற்றிற்கும் நாங்களே வழிகாட்டி என்று மார்தட்டும் மேற்கத்திய அறிவுஜீவிகளுக்கு…
வடலூர் இன்னமும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
வடலூரில் மட்டுமல்ல… தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் வள்ளலார் பெருமகனின் பெயரை தாங்கி நிற்கும் அத்தனை தருமச்சாலைகளிலும்…அன்னம் வழங்கப்பட்டு கொண்டேதானிருக்கிறது.
