ஆசார்யாள் காசியில் வாசம் செய்த அப்போது ஒருநாள் அவர் கங்கைக்கு இக்கரையிலும், சநந்தனர் அக்கரையிலுமாக இருந்தார்கள். ஆசார்யாளின் வஸ்திரங்களைக் காயப்போட்டு சநந்தனர் வைத்துக் கொண்டிருந்தார்.
ஆசார்யாள் அப்போது சிஷ்யருடைய குரு பக்தியை லோகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தார்.
அதனால் தாம் இருந்த கரையைச் சேரவே ஸ்நானம் பண்ணிவிட்டு, ஈர வஸ்திரத்துடன் நின்றுகொண்டு, அக்கரையிலிருந்த சிஷ்யரிடம் ”காய்ந்த வஸ்திரம் கொண்டு வா” என்றார்.
ஆசார்யன் ஒன்று சொல்லிவிட்டால் அதை உடனே பண்ணியாக வேண்டும் என்ற பக்தி வேகம் சநந்தனருக்கு வந்து விட்டது.
ஆசார்யாள் சொட்டச் சொட்ட ஈரக் காஷாயத்தோடு நிற்கிறாரே என்று அவருக்கு மனசு பறந்தது.
ஆவேசமாக அன்பு, பக்தி வந்துவிட்டால் அங்கே rational thinking (அறிவுப் பூர்வமான சிந்தனை) எல்லாம் நிற்காது.
அதனால் படகு பிடித்துக்கொண்டு போக வேண்டும் என்று சநந்தனரால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை.
எதிரே, அன்னை பெரிசாக, ஆழமாக அலை வீசிக்கொண்டு கங்கா நதி என்று ஒன்று இருப்பதே அவருக்குத் தெரியவில்லையே!
அப்புறம் படகைப் பற்றி எப்படி நினைப்பார்? கொஞ்சம் தூரத்தில் ஆசார்யமூர்த்தி ஈரத்துணியுடன் நிற்கிறார்,
காய்ந்த வஸ்திரம் கேட்டு அவர் ஆக்ஞை பண்ணிவிட்டார் என்பது மாத்திரம்தான் அவர் புத்தியில் ‘டோட்ட’லாக வியாபித்திருந்தது.
அதனால் எதிரே ஏதோ சம பூமி, கட்டாந்தரை இருக்கிறது போல, அவர் பாட்டுக்கு கங்கைப் பிரவாகத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார்.
கங்கையின் ஆழத்தில் முழுகிப் போவோமே, முழுகாமல் நீந்தினால் கூட வஸ்திரம் நனைந்து போய் குருநாதன் போட்ட ஆக்ஞையின் ‘பர்பஸே’ கெட்டுப்போய் விடுமே என்பதெதுவும் அப்போது அவருக்குத் தெரியவில்லை.
இப்படி ஒரு பக்தி பரவசம் ஏற்பட்டபோது, ஈஸ்வரன் (அந்த ஈஸ்வரன்தான் ஆசார்ய ரூபத்தில் வந்து நின்று கொண்டிருப்பதும்) அதற்கான பெருமையைத் தரமால் போவானா?
அதனால் அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பத்மபாதர் பாட்டுக்குப் பிரவாகத்தின் மீது நடக்க அவர் அடுத்த அடி வைக்க வேண்டிய இடத்தில் கங்காதேவி நீரோட்டத்துக்கு மேலாக ஒவ்வொரு பெரிய தாமரைப் பூவாகப் புஷ்பித்துக் கொண்டே போனாள்.
இந்த பத்மங்களில் காலை வைத்துக் கொண்டே சநந்தனரும் கங்கையின் மேலே நடந்து போனார்.
ஆனால் அவருக்கு இப்படித் தாமரைகள் முளைத்துத் தம் அடிவைப்பைத் தாங்குவதும் தெரியாது. தீமிதியில் நெருப்புத் தெரியாது என்றால் இவருக்கு ஜில்லென்று, மெத்தென்று புஷ்பம் இருப்பது தெரியவில்லை.
எல்லாரும் பார்த்த அவருடைய குருபக்தி விசேஷத்தை வியந்து கொண்டிருக்கும்போதே, இப்படி அந்தப் பெரிய நதியைத் தாண்டி இக்கரைக்கு வந்து குருமூர்த்திக்கு வஸ்திரத்தை சமர்ப்பித்தார்.
”எப்படியப்பா கங்கையைத் தாண்டி வந்தே?” என்று ஆசாரியாள் வேடிக்கையாகக் கேட்டார்.
அப்போதுகூட சநந்தனர் ஆற்றைத் திரும்பிப் பார்த்து பத்மங்கள் முளைத்ததைத் தெரிந்து
கொள்ள நினைக்கவில்லை.
“ஆக்ஞை பண்ணினது ஆசார்யன். அவர் ஆக்ஞை பண்ணி விட்டு அது எப்படி நிறைவேறாமல் போகும்? அவர் அநுக்ரஹமே நம்மை அங்கேயிருந்து இங்கே உருட்டிக் கொண்டு வந்துவிட்டது’ என்று அவருக்கு நிச்சயம்.
கங்கையைத் தாண்டிய சீடர்
அதனால், தங்களை ஸ்மரித்தால் கடக்க முடியாத சம்ஸார சாகரமே ‘முழங்கால் மட்டும்’ ஜலமாகிவிடும்போது, தாங்களே வாயைத் திறந்து ஆக்ஞை பண்ணியிருக்கையில் நான் கங்கையைத் தாண்டினது என்ன பிரமாதம்?” என்றார்.
அப்புறம்தான் ஆசார்யாளே அவருக்குப் பத்மங்கள் புஷ்பித்ததைக் காட்டி, அவை இவருடைய பாதத்தை தரித்ததால் ”பத்மபாதர்” என்ற பெயரை இவருக்கு வைத்தார்.
ஈஸ்வரனாகவே ஒரு நிலையில் இருந்தாலும், இன்னொரு நிலையில் அவனுடைய பாதபத்மமாக நினைக்கப்படும் பகவத்பாதருக்குப் பொருத்தமாக இப்படி சிஷ்யரும் பத்மபாதராக அமைந்தார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ !
ஆசார்யன் திருவடிகளே சரணம்.
