தெய்வத்தின் குரல் – இன்னல் தருவதும் அவள் இன்னருளே

136

நாம் பூர்வத்தில் செய்த தப்பு அதற்குக் காரணம். இந்த மாதிரி இனிமேல் செய்யக்கூடாது என்று உணர்த்துவதற்காக, நம்மை நாமே நல்லவர்களாக்கிக் கொள்வதற்காக கஷ்டத்தைத் தருகிறாள். நல்லது என்று நாம் நினைக்கிற சௌக்கியங்களால் பலவிதமான அனர்த்தங்களும் நமக்கே உண்டாகலாம்.

எனவே, நமக்கு சௌக்கியம் தந்து நல்லதைச் செய்கிற கருணையைவிட, நம்மையே நல்லவர்களாக்கிக் கொள்ளச் செய்வதைக் காரணமாகக் கொண்டு கஷ்டத்தைத் தரும் கருணைதான் விசேஷமானது என்று எனக்குத் தோன்றுகிறது. காரணமில்லாமல் நல்லதைக் கொடுப்பது அவளுடைய ஸ்வபாவமான கருணை என்றால், நம்மைச் சோதித்துத் திருத்த வேண்டும் என்ற காரணத்தோடு அவள் கஷ்டத்தைக் கொடுக்கிறாளே, இந்தக் காரணக் கருணை அதைவிட உயர்ந்தது என்று தோன்றுகிறது.

நாம் கொஞ்சம் கொஞ்சம்தான் பார்க்கிறோம். இதற்கு முந்தியோ பிந்தியோ நமக்குத் தெரியவில்லை. அதனால் இந்தச் சின்ன இடைவெளிக்குள் ஏற்படுகிற கஷ்டத்தைப் பார்த்து நமக்குக் கெடுதல் என்று நினைத்து விடுகிறோம்.

முக்காலமும் தெரிந்து பார்த்தோமானால், அவள் நமக்குக் கொஞ்சம்கூடக் கெடுதலே செய்வதில்லை என்று புரியும்.

கழுதை மேலே உப்புப் பொதி போட்டுக்கொண்டு ஒருத்தன் வேற்று ஊர் சந்தைக்குப் போனான். அந்தக் காலத்தில் உப்பு மூட்டையை மாட்டு மேலே, கழுதை மேலேதான் போட்டுக்கொண்டு போவார்கள். அப்படி போனான் இந்த வியாபாரி. போகிறபோது வழியில் திடீரென்று மழை பிடித்துக்கொண்டு வெளுத்துக் கட்டி விட்டது.

உப்புப் பொதி என்ன ஆகிறது? எல்லாம் கரைந்து போயிற்று. வியாபாரிக்கு ஸ்வாமி மேலே மகா கோபம் வந்துவிட்டது. ‘ஏழை என் வயிற்றில் இந்தத் தெய்வம் அடித்துவிட்டதே. கருணையில்லாத சாமியை இனிமேல் கும்பிடுவதில்லை’ என்று முடிவு பண்ணிவிட்டான். வீட்டுக்குத் திரும்ப நடையைக் கட்டினான், வருகிற வழி காட்டு வழி.

இருந்தாலும் இவன் மாதிரி பல வியாபாரிகள் கூட வந்த தைரியத்தில் காட்டு வழியாக வந்தான். காட்டிலே திருடர்கள் இவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டு மறைந்திருந்தார்கள்.

சந்தையிலே விற்பனை நடத்தி வியாபாரிகள் நிறையப் பணம் கொண்டு வருவார்கள்; துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருக்கிற பணத்தை எல்லாம் பிடுங்கிக்கொள்ளலாம்’ என்று திருடர்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்களிடம் வியாபாரிகள் எத்தனை பேர் இருந்தாலும் என்ன செய்ய முடியும்? எல்லாரும் நடுநடுங்கிப் போனார்கள்.

அந்தக் காலத்திலே தோட்டா துப்பாக்கி கிடையாது. வெடிமருந்து கெட்டித்துத்தான் அதை வைத்து சுடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு ஆளே அகப்பட்டாலும் சரி; இல்லாவிட்டாலும் அவரவரும் உடைமைகளைப் போட்டுவிட்டுத் திக்குக்கு ஒருத்தராக ஓடி விடுவார்கள். எப்படியானாலும் திருடர்களுக்கு வேட்டைதான்! இன்றைக்கும் இப்படி மருந்து போட்டுச் சுட்டார்கள். ஆனால் மருந்து வெடிக்கவேயில்லை.

பெரிதாக மழை பெய்திருந்தது அல்லவா? தோட்டாவாக இருந்தால் எந்த மழைக்கும் ஈரம் தாக்காது. மருந்து அப்படியில்லை. ஈரம் ஜாஸ்தியானால் வெடிக்காது. துப்பாக்கியால் சுட்டதெல்லாம் வெறும் புஸ்வாணமாயிற்று. இப்போது ஆயுத பலம் இல்லாத திருடர்களுக்குப் பயம் எடுத்தது.

வியாபாரிகள் பணத்தை போட்டுவிட்டு ஓடுவதற்குப் பதில், திருடர்களே துப்பாக்கிகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். முதலில் சொன்னேனே, அந்த வியாபாரிக்கு இப்போதுதான் தெய்வத்தை நிந்தித்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது. ‘மழை வந்ததால் உப்புதான் போச்சு; மழை வராவிட்டால் உயிரே போயிருக்கும்.

இந்த மழையினால் சின்னக் கஷ்டத்தைத் தந்து, அதே காரணத்தினால் பெரிய கஷ்டத்திலிருந்து தப்புவித்தாய். உன் கருணையை என்னவென்று சொல்வது?’ என்று ரொம்பவும் மனசு உருகி வேண்டிக் கொண்டான். இப்படிக் கதை.

முந்தி என்ன, பிந்தி என்ன என்று தெரியாமல் கஷ்டம் வருகிற சமயத்தை மட்டும் பார்க்கிறோம். அம்பாளுக்குக் கருணை இருந்தால் ஏன் கஷ்டம் வருகிறது என்று கேள்வி போடுகிறோம். முந்தி நாம் செய்த கர்மம், பிந்தி நமக்கு இந்த கஷ்டத்தாலேயே வரப்போகிற நன்மை இவை மட்டும் தெரிந்துவிட்டால் நாம் இப்படிச் செய்யமாட்டோம். அது தெரியாதபடி மனிதனை வைத்திருக்கிறாள். அதுவும் அவள் விளையாட்டுத்தான்.

இதெல்லாம் தெரியாதபோதே மநுஷ்யனுக்கு இத்தனை, ஆணவம், அகங்காரம் இருக்கிறதென்றால் திரிகாலமும் தெரிந்தால் இவனுடைய அதிக்ரமத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விடும். இவன் அடங்கிக் கிடக்கவேண்டும் என்றே இப்படி வைத்திருக்கிறாள்.

ஆனால் இந்த ஸ்திதியிலும் கூட ‘நமக்கு முந்தியும் தெரியவில்லை. பிந்தியும் தெரியவில்லை’ என்பதையாவது நாமே தெரிந்து கொள்ளலாம். முக்காலமும் தெரிந்த மகான்கள் சொல்வதை நம்பலாம். சகல ஜகத் வியாபாரமும் காரண காரிய ரீதியில் சட்டம் போட்ட மாதிரி நடக்கிறதைப் பார்த்தே, ‘நம் மநுஷ்ய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்க வேண்டும்; நாம் கஷ்டப்படுகிறோம் என்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும்; இனிமேல் இந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றால் அவள்தான் கதி’ என்று புத்தி பெறலாம்!

அம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி ஸந்தோஷப்படுபவள் அல்ல. இப்படி நாம் நினைக்கவே கூடாது. எல்லாக் காலத்திலும் நமக்குப் பந்துவாக, சகாயமாக இருப்பது தாயும் தந்தையுமாய், அம்மையப்பனாக இருக்கிற அவள்தான்.