Thursday, October 19, 2023
HomeArthamulla Aanmeegamதேவ ரகசியம்

தேவ ரகசியம்

ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான்.
எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்கிறான்.
இந்த எமதூதன் நினைக்கிறான், “ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால் இந்த குழந்தைக்கு யார் கதி” என்று எடுக்காமல் திரும்பி விட்டான். ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனில் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.
ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார், “உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை. கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட” என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.
அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான். அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன், என்னடா இது, இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே என்று அவனைப்பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான். மேலும் “என்னுடன் வா என்கிறான்….
எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை.
தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும், அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், “வா வா வந்து கொட்டிக்கோ” என்று கூப்பிடுவாள்.
அவன் “விருந்தாளி வந்திருக்கிறானே” என்று சொல்வான். அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”.
எமதூதன் ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான். ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் “சரி சரி வா” என்று எமதூதனை மறுபடியும் கூப்பிடுவாள்.
அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.
தையற்காரன் சொல்வான், “எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்” என்று சொன்னான்.
எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்….😆
ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம், இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது” என்று சொல்வாள்.
எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும்.
இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.
ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து “இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்” என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான்.
அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்….
முதல் நாள் போய்விட்டது…..
இரண்டாம் நாள் போய்விட்டது….
தையற்காரன், “நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பான், என்ன சொல்வது?” என்று கேட்கிறான்.
இவன் டர்ரென்று அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான்”. என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால் நான் என்ன பண்ணுவது?” என்பான்.
அப்போது கார் டிரைவர் ஓடி வருவான். “நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்” என்று சொல்வான்.
இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.
அப்படியே மேலே போவான்.
அப்போது தையற்காரன் சொல்வான், “அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு, நீ போ” என்பான்.
அவன் “நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டாள், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா” என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.
“என்ன தெரிந்து கொண்டாய்?” என்று இவன் கேட்பான்.
□முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா…? அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.
□பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.
■□ அப்போது, இந்த உலகத்தில் “ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும் ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்” என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.
□ இதுதான் தேவரகசியம் ஒன்று..
மனிதர்களிடமே பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.
■ பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா…? அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா…?
அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.
நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு, இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான். இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.
■ ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது இரண்டாவது தேவ ரகசியம் புரிந்தது.
கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்.
■மூன்றாவது தேவ ரகசியம்….
மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு, நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே…
“எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்” என்று, அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை.
அவன் இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்”.
இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை…
அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும், மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா?
அதுதான் மூன்றாவது ரகசியம்…
● அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்..
● இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப்போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்..
அதனால்தான் உலகத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்..
இந்த மூன்று ரகசியங்கள்…
அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.
இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார்.
மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும், அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம்.
இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.
இவைதான் அந்த மூன்று தேவ ரகசியங்கள் என்பான்….
எனவே, நாமும் இந்த தேவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்…
ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க வாழ்க

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 2 =

Most Popular