தேவர்களும், முனிவர்களும், கணங்களும் தமது ஆத்ம ரூபமாக போற்றும் அம்பிகை என்பது பொருள். இதையே வேறு விதமாக தேவர்கள், ரிஷிகள் மற்றும் கணங்கள் துதிக்கும் சிறப்பு வாய்ந்தவள் என்றும் கொள்ளலாம். “வைபவம்” என்றால் “எங்கும் பரவியிருப்பது” என்று ஒரு பொருள் சொல்லுகிறார்கள். அப்படிப் பார்த்தால் அம்பாள் ஸர்வ வியாபியாக இருப்பதை துதித்தார்கள் எனலாம்.
“ஸங்காத” என்பதை “ஸம்யக் + காத” என்று பிரித்து, பண்டாசுர வதத்தைச் சுட்டுவதாகவும் சொல்லலாம். “தேவர்ஷிகண” என்பதை பிரம்மா முதலான த்ரிமூர்த்திகளாகவும், ரிஷி என்பதற்கு வஸிஷ்டாதி ரிஷிகளையும், கண என்பதற்கு ஆதித்யன் முதலான கணங்களையும் சொல்லுவது வழக்கம். இவர்கள் எல்லோரும் சேர்ந்து துதிக்கிறார்கள், கதறுகிறார்கள் அம்பிகையிடத்தில். ஏதற்காக இவ்வாறு என்றால் பண்டாசுரன் படுத்தும்பாடு தாங்காமல் அம்பிகையிடம் இறைஞ்சுகிறார்கள்.
“பண்ட” என்றால் “நல்லது” என்று பொருள், பண்டன் என்றால் நல்லவன். அசுரனில் அதென்ன நல்ல அசுரன்?
இந்த இடத்தில் கொஞ்சம் லலிதோபாக்யானத்தைப் பார்க்க வேண்டும். ஈசனது நெற்றிக்கண்ணின் தழலால் மன்மதன் சாம்பலாகிறான். அந்த சாம்பல் கைலாசத்தில் இருக்கும் போது குழந்தை கணேசர் அந்த சாம்பலை தனது கைகளால் பிடித்து ஓர் உருவத்தைச் செய்கிறார். கைலாசத்தில் உருவான அந்த சாம்பலால் ஆன உருவமும், ஸ்தல விசேஷத்தின் காரணமாக தவத்தில் ஆழ்ந்து விடுகிறது.
இதன் தவத்தைக் கண்ட பிரம்மா ‘பண்ட, பண்ட’ (நல்லது, நல்லது) என்று வாழ்த்துகிறார். தவத்தின் மூலம் சிவனது அருளுக்குப் பாத்திரமாகி ஆற்றல் பெறுகிறது அந்த சாம்பல் பொம்மை. ஆற்றல் வந்துட்டாலே அஹங்காரம் வந்துடும் என்பது பூலோகத்தில் மட்டுமல்ல, கைலாசத்திலும் அதே போல. பண்டனுக்கு ஆற்றல் வந்ததும் அஹங்காரமும் வந்துவிட்டுகிறது.
அஹங்காரமுற்ற பண்டன், பண்டாசுரனாகிறான். நல்லவர்கள் கூட செயல்திறன்/ஆற்றல் வந்துவிட்டால் அஹங்காரம் வந்து தீயவர்களாகி விடுகிறார்களே? அதை காட்டுவது தான் பண்டாசுரன் படைப்பு. தனக்கு ஈசன் அளித்த ஆற்றலை தவறாகப் பயன்படுத்தி சகல உலகங்களையும் ஆட்டிப் படைக்கிறான். அப்போது அவனை அடக்குவதற்காகவே எல்லோரும் அம்பிகையிடம் முறையிடுகிறார்கள்.
தேவர்களுக்கு உதவ, தேவேந்திரனுடைய வேள்வித் தீயில் இருந்து சிதக்னி குண்ட சம்பூதாவாக உருவாகிறாள் ஸ்ரீ லலிதை. உதித்த லலிதை எப்படி உதித்தாளாம்?, பண்டாசுரனை ஸம்ஹாரம் செய்யத் தேவையான சக்திகளின் ஸைன்யத்துடனேயே உதித்தாளாம். இவ்வாறு அஹங்காரத்தை/பண்டனை அழிக்கத் தேவையான சக்திகளை தன்னுள் கொண்ட லலிதை என்பதை தான் ‘பண்டாஸுர வதோத்யுக்த சக்திச்ஸேனா ஸமன்விதா’ என்னும் திருப்பெயர் சொல்கிறது ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம்.
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
