ஸ்வஸ்திக் சக்திகள் உள்ள கோயில்கள் எது தெரியுமா?
ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒரு மூல மந்திரம் இருப்பதைப் போல ஒவ்வொரு தெய்வம், தேவதைக்கும் ஒரு சக்கரமும் உண்டு. ஸ்ரீவல்லப கணபதி, ஸ்ரீஹேரம்ப கணபதி, ஸ்ரீசக்தி கணபதி எனப் பல்வேறான கணபதி மூர்த்திகள் இருந்தாலும் எல்லா கணபதி மூர்த்திகளுக்கும் உரிய பொதுவான சக்கரமாக ‘ஸ்வஸ்திக்’ என்று அழைக்கப்படும் விநாயகச் சக்கரம் விளங்குகிறது.
வலஞ்சுழியால் வளம் பெறுங்கள்!
ஸ்வஸ்திக் சக்கரத்தில் வலஞ் சுழி, இடஞ்சுழியாக அமைந்துள்ள வடிவங்களில் வலஞ்சுழி சக்கர வழிபாட்டு முறையையே சித்தர்கள் வலியுறுத்து கின்றனர். பலரும் விநாயகச் சக்கரம் என்னும் சிறப்புப் பெற்றுள்ள இந்த ஸ்வஸ்திக் சக்கரத்தைப் பன்னெடுங் காலம் பயன்படுத்தி வந்தாலும் இதில் முக்கியமான ரகசியம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் இந்தச் சக்கரத்தை வரையும் விதத்தை வைத்துப் பலன்கள் மாறுபடும் என்பதே.
அதாவது, முதலில் இடமிருந்து வலமாக உள்ள மூன்று ஆரங்களை வரைந்து கொண்டு, பின் கீழிருந்து மேலாக மற்ற மூன்று ஆரங்களையும் வரையும் முறையே வியாபாரிகளுக்கு உரித்தான குசா சக்திகளைப் பெற்றுத் தரும். வண்ணங்களால் இந்தச் சக்கரத்தை அலங்கரிக்க விரும்பினால் மஞ்சள் பொடியால் பட்டையான ஆரங்களை வரைந்து, ஆரங்களின் நடுவில் குங்குமத்தால் கோடிட்டு அலங்கரிப்பது சுபமான பலன்களைவர்ஷிக்கும்.
வியாபார மேன்மைக்கான விநாயகச் சக்கர பூஜை:
இவ்வாறு அமையும் விநாயகச் சக்கரம் அற்புதமான ஸ்வர்ணவாரச் சக்திகளை நிரவும் தன்மையை உடையது. இந்த விநாயகச் சக்கரத்தின் நடுவில் ஒரு பசு நெய் தீபத்தை குபேர திக்கான வடக்கு திசையை நோக்கியும், நான்கு ஆரங்களில் நான்கு பசு நெய் தீபங்களை நடுவில் உள்ள தீபத்தை நோக்கியும் அமையுமாறு ஏற்றி வைத்து வழிபட்டு வருவதால் வியாபாரத்தில் புதுப்புது நுணுக்கங்களையும், யுக்திகளையும் கையாண்டு, மற்றவர்களைவிட சிறப்பான முறையில் தொழிலில் மேன்மை அடையலாம்.
இத்தகைய வழிபாடுகளால் வியாபாரத்தில் ஏற்படும் புதிய மாற்றங்கள் மக்களுக்கும் பயனுடையதாகவே அமையும் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கதாகும். விநாயகச் சக்கர வழிபாட்டின் நிறைவில் பாதாம்பருப்பு கலந்த பால் தானம் பண வரவை நிலையாக்கும். அனுபவம் இல்லாத வேலையாட்கள், பணியாளர்களால் ஏற்படும் விரயத்தைக் குறைக்கும். வியாபாரத்தில் பலரும் தற்காலத்தில் சந்திக்கும் முக்கியமான பிரச்னை வேலைக்கு ஏற்ற தகுதியான பணியாளர்கள் அமையாததே. அவ்வாறு தகுதியான பணியாளர்கள் அமைந்தாலும், அவர்கள் நிரந்தரமாகப் பணியில் தங்காமல் வேறு பணிகளைத் தேடிச் சென்று விடுவதுதான்.
இத்தகைய பிரச்னைகளால் அவதியுறுவோர் ஸ்வஸ்திக் சக்திகள் மிகுந்த திருச்சி – மணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை, திருச்சி-லால்குடி அருகே உள்ள சிறுமயங்குடி போன்ற திருத்தலங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி 108 தாமரை மலர்களால் மாலைகளைச் சூட்டி ஆராதிப்பதால் திறமை வாய்ந்த, நிரந்தரமான பணியாட்கள் வாய்க்கப் பெறுவார்கள். திருவெள்ளறை ஸ்ரீபுண்டரிகாக்ஷ பெருமாள் கோயிலிலும், ஸ்ரீவடஜம்புநாதர் சிவத் தலத்திலும்கூட மேற்கண்ட வழிபாடுகளை நிறை வேற்றலாம்.
