ஏன் கஜாரண்ய க்ஷேத்திரத்தில் திருக்கல்யாண வைபவம் கிடையாது…!!!

153

ஒரு முறை அன்னை பார்வதிதேவிக்கு, ‘தான் அருகில் இருக்கும்போதும் சிவனார் யோகத்தில் திளைக்கிறாரே… என்ன காரணம்?’ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அதை இறைவனிடமே கேட்ட பார்வதி தேவி, போகம்- யோகம் குறித்து விளக்குமாறும் வேண்டினாள். அதற்கு, ”நீ பூலோகத்தில் காவிரிக் கரையில் உள்ள சம்புவனம் சென்று தவம் இயற்று.

காலம் வரும்போது எல்லாவற்றையும் அறிவாய்!” என்று அருளினார்.
அதன்படி பூலோகத்தில் சம்புவனமாகிய திருவானைக்காவல் பகுதியை அடைந்த பார்வதிதேவி, காவிரி நீரைத் திரட்டி லிங்கமாக ஸ்தாபித்து வழிபட்டு வந்தாள்.
இந்த நிலையில்…!!!

ஜம்புநாதர் என்ற முனிவர் ஒருவர் தமக்குக் கிடைத்த அரிய நாவல் பழம் ஒன்றை சிவபிரானிடம் சமர்ப்பித்தார். பழத்தை உண்ட சிவனார் அதன் விதையை உமிழ்ந்தார். அதைக் கையில் ஏந்திய ஜம்பு முனிவர் சிவ பிரசாதமாகக் கருதி உண்டார். முனிவரின் வயிற்றுக்குள் சென்ற நாவல் விதை சிவனருளால் முளை விட்டு சடுதியில் வளர்ந்து, மரமாகி முனி வரின் தலையைப் பிளந்து வெளிப்பட்டது! விநோத உருவம் கொண்ட ஜம்பு முனிவர், ‘யாது செய்வது?’ என இறைவனிடம் வேண்டினார்.

அவரிடம், ”காவிரிக்கரையில் தவம் புரியும் அன்னைக்கு நிழலாக நில். உரிய காலத்தில் அங்கு வந்து அருள் புரிவேன்!” என்றார் சிவபெருமான். அதன்படியே சம்புவனம் வந்த ஜம்பு முனிவர் அங்கு நாவல் மரமாக- அம்பிகைக்கு நிழலாகி நின்றார்.

நாட்கள் நகர்ந்தன. அவர்கள் முன் தோன்றிய சிவ பெருமான் குரு வடிவாக அன்னைக்கு போக- யோக நிலை களை விளக்கினார். அப்போது அவர் அருகில் நின்றிருந்த ஜம்பு முனிவர் மற்றும் நந்திதேவர் ஆகியோரும் இந்த உபதேசத்தைக் கேட்டு மகிழ்ந்தனர்.

அதன்பின் அங்கேயே அப்புலிங்கமாக உறைந்தார் இறைவன். அவரிடம் ஞான உபதேசம் பெற்ற அம்பிகை, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியாக கோயில் கொண்டாள். சுவாமி கருவறை மீது கிளைவிட்டுப் படர்ந்து நிற்கும் வெண்ணாவல் மரமே, ஜம்பு முனிவரின் வயிற்றினின்று கிளர்ந்து எழுந்த மரம் என்பர். கருவறையின் வெளிப்புறம் முனிவரின் சிலையையும் தரிசிக்கலாம்.

வேத விளக்கம் எல்லையில்லாதது; குறிப்பிட்ட காலத்தில் கற்பிக்கவோ… கற்றுக் கொள்ளவோ முடியாதது. எனவே, இந்தத் தலத்தில் அம்பிகை கன்னி கோலத்திலேயே மாணவியாக அமர்ந்து சிவனாரிடம் உபதேசம் பெறுவதாக ஐதீகம். ஆதலால் இங்கு திருக்கல்யாண வைபவம் கிடையாது!

கச்சியப்ப முனிவர் அருளிய திருவானைக்கா புராணம்