கஜேந்திர மோக்ஷம் !முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்

330

ஜலத்திலே இருக்கிற பரமாத்மா பிரணவ ஸ்வரூபியானவன். ஓம்காரமாக இருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கே நான் உரியவன் என்று (நம:) நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

‘நம’ வென்னலாம் கடமை’ – திருவேங்கடத்திலே இருக்கிறானே அவனெதிரில் போய் ‘நம’ என்று சொல் என்கிறார் ஆழ்வார்!

நம: என்று நாம் சொல்லும் போது ‘நான் எனக்கே உரியவன்’ என்கிற நிலையை அது அகற்றுகிறது.

நாமே நமக்கு ரக்ஷகர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமல்லவா..? நமக்கு நம்மை ரக்ஷித்துக் கொள்ளும் சக்தியுள்ளதாக நினைத்துக் கொள்கிறோமே – இந்த அறிவைப் போக்குகிறது நம:

யானையை முதலை பிடித்து தண்ணீருக்குள் இழுக்கிறது. யானையோ கரைப்பக்கம் இழுக்கிறது. இப்படி இரண்டும் சண்டை போடுகிற காட்சியை சுக பிரும்ம மஹரிஷி விவரிக்கிறார்.

பரீக்ஷித் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்!

விஷ்ணு தர்மத்திலே வருகிற ஸ்லோகம் அது..
விஷ்ணு தர்மம் என்று ஒரு கிரந்தம் – விஷ்ணு புராணம் மாதிரி.

பரீக்ஷித்துக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.

‘சுவாமி..! இப்படியே எத்தனை நாள் தான் ஒன்றை ஒன்று இழுத்தது..? என்று கேட்கிறான்.

‘ஒரு நாளா? இரண்டு நாளா…. கதையைச் சொல்லி முடிக்க! ஆயிரம் வருஷ காலம்’ என்கிறார் சுகபிரும்ம மஹரிஷி.

முதல் ஐநூறு வருஷமும் ஒரு விதமான சண்டை.

அடுத்த ஐநூறு வருஷம் வேறு விதமான சண்டை!

முதல் ஐநூறு வருஷமும் ‘நான் எனக்கு உரியன என்கிற நிலையில் சண்டை நடந்தது. அது தான் அகங்காரம் என்று பெயர்! ‘எல்லாம் எனக்குத் தெரியும்; நான் சாதிப்பேன்.’ என்கிற நினைவு.

‘இந்த முதலை என்ன முதலை…? இதைப் பிடித்து இழுத்து, காலால் தேய்த்து இருக்கிற இடம் தெரியாமல் பண்ணிவிடமாட்டேனா! என்கிற அகங்காரம்! அந்த சக்தி தனக்கு உண்டு என்கிற கர்வத்தில் 499 வருஷங்கள் வரை சண்டை போட்டது.!

ஐநூறாவது வருடம் வந்தது.. அப்போது யானையின் கால்கள் நாலும் மீன்கள் கொத்திக் கொத்தி அழுக ஆரம்பித்து விட்டன. நிற்க முடியாமல் அதன் எலும்பெல்லாம் வெளியிலே தெரிகிறது! ஜலத்திலேயே அது விழுந்து விடும் போலிருக்கு.

தன்னை ரக்ஷித்துக் கொள்ள தனக்கு சக்தி கிடையாது என்பதை ஐநூறாவது வருஷத்தில் தெரிந்து கொண்டது யானை!

கரையைச் சுற்றிலும் அந்த யானையின் பத்தினிமார்கள்; அம்மான்மார்கள்; மாமியார், மாமனார், மைத்துனன்மார்கள், பந்துக்கள் எல்லாம் நிற்கின்றன. இந்த ஐநூறு வருஷமாக இது படுகிற அவஸ்தையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்கின்றன.

அப்போது இந்த யானை, அதுகளையெல்லாம் பார்த்து ‘நான் இப்படி அவஸ்தைப்படறேனே… நீங்களெல்லாம் எனக்கு உபகாரம் பண்ணக் கூடாதா? என்று கேட்கிறதாம்.

அந்த தீனமான பார்வையைப் பார்த்து, உபகாரம் பண்ணனும் என்கிற எண்ணமே அவற்றுக்கு ஐநூறு வருஷம் கழித்துத்தான் வந்ததாம்! ஒவ்வொரு யானையாக துதிக்கையை நீட்டி முதலையிடம் சிக்கிய யானையை இழுக்க ஆரம்பித்ததாம்.

அப்போது என்ன ஆயிற்று…? சிக்கிக் கொண்ட யானை வெளியே வரவில்லை. இழுக்கப் போன யானைகளெல்லாம் தண்ணீரில் விழ ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு யானையாக இப்படி ஜலத்திலே இறங்க இறங்க, பயந்து போய், காப்பாற்றும் முயற்சியைக் கைவிட்டு அவை கரைக்கு வந்து விட்டன.

‘என்ன செய்வது! விதி வலியது. முதலை பிடித்து இழுக்க, இப்படி ஜலத்திலே நீ சாகவேண்டும் என்று தலையிலே எழுதிவிட்டான் பகவான். நாம் என்ன பண்ண முடியும்…’ என்று கரையேறிய யானைகள் அழ ஆரம்பித்தன.

ஆனால் ‘விதி’யை ஜெயித்து அந்த யானை வெளியே வரத்தான் செய்தது – எப்படி..? யானை ஆயிரமாண்டு காத்திருந்ததில்லையா?

மடுவில் முதலையிடம் மாட்டிக் கொண்ட யானை யோசித்தது. இப்படி நம் பந்துக்கள் எல்லாம் துக்கத்தில் அமிழ்ந்து அழுகின்றனவே. இதுகளைப் போய் நாம் ரக்ஷகர்கள் என்று எண்ணினோமே! பந்துக்களும் நம்மை ரக்ஷிக்க முடியாது; நாமும் நம்மை ரக்ஷித்துக் கொள்ள முடியாது என்று முடிவுக்கு வந்தது.
‘உன்னைத் தவிர வேறு எனக்குக் கதியில்லை’ என்று பகவானை நோக்கி வேண்டியது.

வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியும் நாராயணனும் உட்கார்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவருள் தோற்றுப் போகிறவர் எழுந்து போய்விடக் கூடாது என்பதற்காக பகவானுடைய மேல் அங்கவஸ்திரத்தையும் மஹாலக்ஷ்மியினுடைய புடைவை நுனியையும் முடித்து வைத்திருக்கிறது.

அந்த சமயத்தில் யானை கூக்குரலிடுகிறது!

திடீரென்று எழுந்தான் பரமாத்மா. போட்ட முடிச்சை அவிழ்க்காததால் மஹாலக்ஷ்மியும் கூடவே ஓடி வந்தாள். எதிரே கருடன் வர, அவர் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டார் பகவான். அந்த வேகத்தில் மஹாலக்ஷ்மி தொங்கலாடுகிறாளாம்.

சங்கு சக்ராதிகள் தாமாகவே வந்து கைகளில் ஒட்டிக் கொண்டனவாம்.

கஜத்தை ரக்ஷிப்பதற்கு அவ்வளவு உற்சாகம்!

அதனால் தான் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் பராசரபட்டர் இப்படிப் பாடுகிறார்.

‘ஹே ரங்கநாதா! நீ அந்த யானையை ரக்ஷித்ததற்காக உன்னை, நமஸ்கரிக்கவில்லை. இந்த அஞ்சலி எதற்கு என்றால் நீ ஓடிவந்த வேகத்துக்காக!

ஆகையினாலே தனக்குத் தான் உரியவன் இல்லை என்பதை உணர்ந்து, தன்னைச் சேர்ந்தவர்களும் தன்னை ரக்ஷிக்க மாட்டார்கள் என உணர்ந்தவனை பரமாத்மா ஓடோடி வந்து ரக்ஷிக்கிறான் என்றாகிறது.

நம: சப்தம் எதைக் காட்டுகிறது என்றால், இந்த யானையினுடைய அனுஷ்டானத்தின் சிறப்பை உணர்த்துகிறது.

கஜேந்திராழ்வாருக்கு அந்த அனுஷ்டானத்தை உணர ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று. நமக்கு எத்தனை வருடம் பிடிக்குமோ…..?

ஓம் நமோ நாராயணாய !