கயாசுரன் தலைமீது சிலை

443

சுவேத வராஹ கல்பத்தில் தர்மமூர்த்தி என்றொரு மஹாநுபவன், தன் மனைவி விச்வரூபையுடனும், புத்திரி தர்மவ்ரதையுடனும் வசித்து வந்தார். தர்மவ்ரதைக்கு தகுந்த வரன் கிடைக்காததால் அவளை அதற்காகத் தவம் செய்யுமாறு தர்மமூர்த்தி கூறினார். அவ்வாறே அவள் தவம் செய்து வந்தாள்.

ப்ரஹ்மாவின் மானஸ புத்ரரான மரீசி முனிவர் அவள் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவள் நலத்திற்கான காரணத்தைக் கேட்டு, தன்னைப் பற்றியும் தெரிவித்துக் கொண்டார்.அப்போது அவள் தந்தையிடம் பேசுமாறு கூற, தர்மமூர்த்தியைக் காணச் சென்ற மரீசி முனிவரை அவன் நன்கு வரவேற்று உபஸரித்து, அவர் விருப்பப்படி தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தான். பின்னர் மரீசி தர்மவ்ரதையை அழைத்துக் கொண்டு தன் ஆச்ரமத்தையடைந்து வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் அவர் படுத்துக் கொண்டிருக்க, மனைவி பாதங்களைப் பிடித்துவிட நன்கு உறங்கிவிட்டார். அவ்வமயம் ப்ரஹ்மதேவர் அங்கு வந்தார். அப்போது தர்மவ்ரதை கணவன் பணிவிடையை நிறுத்தி, ப்ரம்மதேவனை வரவேற்று உபசரித்தாள். கண் விழித்த முனிவர் ப்ரஹ்மா வந்ததையறியாமல் தன் பாதங்களைப் பிடித்து விடுவதை விட்டு வேறு வேலைக்கு மனைவி சென்று விட்டதாகக் கருதி அவளைச் சிலையாகுமாறு சபித்தார். அப்போது அவள் கணவனிடம் நடந்ததைக் கூறி,தவறு செய்யாத தனக்கு சாபமளித்ததால், பரமேஸ்வரன் உங்களைச் சபிக்கட்டும் என்று கூறி தீ மூட்டி அதன் நடுவிலமர்ந்து தவம் செய்யலானாள். மரீசி முனிவரும் தவ நிஷ்டையில் அமர்ந்து விட்டார்.

இவர்களுடைய தபாக்நி வெப்பத்தைத் தாளாத தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.

அப்போது விஷ்ணு தர்மவ்ரதையின் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க,அவள் மரீசியின் சாபத்தை அகற்றுமாறு வேண்டினாள். அப்போது பகவான் சக்திமானாகிய மரீசியின் சாபத்தை மாற்றமுடியாது. வேறு ஏதேனும் வரம் கேள் என்றார்

அவள், ‘சாபத்தை மாற்றமுடியாதென்றால் நான் சிலையாகிறேன். நான் புனிதமானவள் ஆகவேண்டும்.கங்கை போன்ற தீர்த்தங்களைவிட புனிதமாக இருக்க வேண்டும். ரிஷிகள், தேவர்கள், கடவுளர்கள் என்னில் இருக்க வேண்டும். இந்த சிலை தீர்த்தத்தில் நீராடி செய்யப்படும் தர்ப்பணம், ச்ரார்த்தம் பெறும் பலனை அளிக்க வேண்டும்” என்று வேண்டினாள்.

அப்போது விஷ்ணு,”உன் வரம் அத்தனையும் ஸித்தியாகும். கயாசுரன் தலைமீது நீ நிலையாக இருப்பாய். நாங்கள் எங்கள் அம்ஸத்துடன் உன்னுள் இருப்போம்” என்று வரமளித்தார்.

கயையில் அந்த சிலையின் மீதே பிண்டப் பிரதானங்கள் செய்வர்.

#கயாயாம் #ஸ்ரீவிஷ்ணு #பாதாதி

#ஸமஸ்த #தீர்த்தேஷு #தத்தம்

என்பர்.

இதுவே கயாசுரன் தலைமீது வைக்கப்பட்ட சிலையின் வரலாறு. இந்தச் சிலை பிரம்மாவின் ஆணைப்படி யமதர்மனிடம் இருந்தது.