Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamஇளையாற்றங்குடிக்கும் காஞ்சி மடத்துக்கும் 125 வருட பந்தம் உண்டு.

இளையாற்றங்குடிக்கும் காஞ்சி மடத்துக்கும் 125 வருட பந்தம் உண்டு.

பிள்ளையார் பட்டிக்கு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது இளையாற்றங்குடி. இந்த இளையாற்றங்குடிக்கும் காஞ்சி மடத்துக்கும் 125 வருட பந்தம் உண்டு. காஞ்சி மடத்தின் 65 – வது மடாதிபதியாக திகழ்ந்த சுதர்சன மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள்
1891 – ல் ஜீவன் முக்தி அடைந்த தலம் இளையாற்றங்குடி.

காஞ்சி சங்கரமடத்தின் 65 – வது மடாதிபதியாக இருந்தவர் சுதர்சன மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள். ஒருமுறை, சிவத் தொண்டின் பொருட்டு தேசாந்திரம் வந்த மகாதேவேந்திரரை இளையாற்றங்குடி நகரத்தார்கள் தங்களது கைலாசநாத ஆலயத்துக்கு வரவேண்டும் என அழைத்தார்கள். தட்டாமல் சம்மதித்தவர்.

அங்கு விஜயம் செய்ததோடு மட்டுமல்லாது, சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து சிவபூஜைகள் செய்யவும் விரும்பினார். அவருக்கு தங்களது நகர விடுதியில் அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்கள் நகரத்தார்கள்.

அப்படி பூஜை செய்து கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் கோயில் அழைத்த மகாதேவேந்திரர், ” நான் வந்த நோக்கம் ஈடேறிவிட்டது. நாளை காலையில் சூரியோதயத்துக்கு முன்னதாகவே பூஜைக்கு தயாராக வேண்டும் “, என்று சொன்னாராம். அதன்படியே மறுநாள் காலையில் சூரியோதயத்துக்கு முன்னதாகவே எழுந்து பூஜைக்கு தயாரான சுவாமிகள், கோயில் அருகேயிருக்கும் குளக்கரையில் கிழக்கு நோக்கி அமர்ந்தார். அப்படி அமர்ந்தவர் திரும்ப எழவே இல்லை. அதே இடத்தில் நிர்விகல்ப
சமாதியடைந்திருந்தார்.

அப்படிப்பட்ட இளையாற்றங்குடியிலேயே இளைப்பாற வேண்டும் என காஞ்சி மகான் நினைத்ததால் தான் அங்கேயே அவர் ஜீவன் முக்தி அடைந்திருக்கிறார் என முடிவுக்கு வந்தார்கள் அடியார்கள். அதனால் கோயிலுக்கு பக்கத்திலேயே வடதிசையில் மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அதிஷ்டானம் எழுப்பினார்கள் . அது இப்போதும் அங்கு வழிபாட்டில் இருக்கிறது.

மகாதேவேந்திரருக்குப் பிற்பாடு காஞ்சி மடத்தின் 68 – வது மடாதிபதியாக இருந்த மகாபெரியவா சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இளையாற்றங்குடியில் தங்கியிருந்து சிவத் தொண்டு செய்ததாக தகவல்கள் உண்டு. அப்படியான சமயத்தில் ஒரு அமாவாசை தினத்தில், முன்பு மகாதேவேந்திரர் ஜீவன் முக்தி அடைந்த குளத்தின் கரையில் அதே இடத்தில் சந்திரசேகரேந்திர சுவாமிகளும் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜையில் ஈடுபட்டார்.

17 – 06 – 1939 – ல் நடந்த அந்த நிகழ்வு அப்போது நிழல்படமாக்கப்பட்டது. அந்தப்படம் இன்றைக்கும் கைலாசநாதர் கோயிலில் நித்யகல்யாணி அம்மன் சன்னதியில் அடையாளமாக இருக்கிறது.

இது குறித்து அங்கு இருக்கும் திரு. நாராயண செட்டியாரிடம் கேட்டதற்கு , அவர்
” மகாபெரியவா என்ன நினைத்து இங்கு வத்தாரோ தெரியாது. ஆனா இளையாற்றங்குடியில் ஒண்ணே கால் வருடம் தங்கியிருந்தார். இங்கிருந்து போனபிறகு முப்பது ஆண்டுகள் கழிச்சுத்தான் அவர் முக்தி அடைஞ்சார்.

மகாபெரியவா கோயில் குளக்கரையில் பூஜை செய்த அதே இடத்தில் இப்போது சிறிய கல் மண்டபம் ஒன்றை எழுப்பியுள்ளார்கள்.

இளையாற்றங்குடி பெரியவா… இளமையில் திருவிடைமருதூரில் மஹாராஷ்ட்ர ராஜ வம்சத்துக் குழந்தைகளுடன் விளையாடி வளர்ந்தவர்… அதனால் மராட்டி ஹிந்துஸ்தானி பாஷைகளில் அனாயாசமாகப் பேசுவார். குதிரையேற்றத்திலும் நிபுணர். பீடாதிபத்யம் ஏற்ற பிறகு ஒருமுறை அர்தோதயம் ஸம்பவித்த போது ஸ்ரீ ஆசார்யர்கள் குடந்தையில் இருந்தார்கள். மறுநாள் கோடியக்கரையில் ஸமுத்ரஸ்நாநம் பண்ணவேணுமென்று அவர்கள் சொன்ன போது ஸ்ரீமடத்து அதிகாரிகள் திகைத்துப் போயினர். ஒருநாளில் அவ்வளவு தொலைவை எப்படி அடைவது என்று அனைவரும் யோசித்தனர்… இரவு பூஜையை முடித்துக் கொண்ட ஸ்ரீ ஆசார்யாள் ஸ்ரீமடத்து குதிரையொன்றின் மீதேறி இரவு நேரத்தில் பயணித்துக் கோடியக்கரையை அடைந்து அர்தோதய புண்யகாலத்தில் ஸமுத்ர ஸ்நானம் செய்து பிற்பாடு அதே குதிரையின் மீதேறி ஸ்ரீமடம் திரும்பினார். ஸ்ரீ இளையாற்றங்குடி பெரியவா அவர்களின் சிவபூஜை மிகவும் ப்ரஸித்தி பெற்றது. அவர்கள் தம் திருக்கண்களை மூடி ஸ்ரீசந்த்ரமௌளீச்வரருக்கு பில்வார்ச்சனை செய்யும் பொழுது தோஷ வில்வம் மட்டும் தனியாகத் தெறித்துப் போய் வெளியில் விழுமாம். உவேசா அவர்கள் தம் முதிர்ந்த ப்ராயத்தில் ஸ்ரீமடத்திற்கு அவ்வப்பொழுது வந்து ஸ்ரீ பெரியவா அவர்களின் ஸ்ரீ சந்திரமௌளீச்வர பூஜையை தர்சனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ஒருமுறை. உவேசா அவர்கள் “ஸ்ரீஇளையாற்றங்குடி பெரியவா அவர்கள்உடலெங்கும் கண்ணாக மிக விமர்சையாக சிவ பூஜை செய்யும் பாங்கைத் தம் சிறு வயதில் கண்டிருப்பதாகவும் அதைப்போலவே ஸ்ரீ பெரியவா அவர்களின் ஸ்ரீ சந்த்ரமௌளீச்வர பூஜையின் அழகும் இருக்கிறது” என்று ஸ்ரீபெரிவாளிடம் மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டாராம்.

ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − seventeen =

Most Popular