கோவையில் ஒரு அபூர்வ சிவன் கோவில்

235

வெள்ளலூர் உமாமகேசுவரர் திருக்கோவில்-
சிவன் கோவில்களில் கருவறையில் மூலவராக லிங்கத் திருமேனியில் சிவபெருமான் இருப்பதையே காண்கிறோம். உற்சவ மூர்த்திகளே செப்புத் திருமேனிகளாக இருக்கும். சபைகளில் நடராசப் பெருமான் வடிவம் இருக்கும்.
ஆனால், கருவறையிலேயே சிவபெருமான் நந்தியின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் அதுவும் தன் இடது தொடையில் பார்வதி தேவியை அமர வைத்த கல்யாணத் திருக்கோலத்தில் அருள் வழங்கும் ஓர் அபூர்வ சிவத்தலம் கோவையில் உள்ளது.
கோவை – போத்தனூரை அடுத்துள்ள வெள்ளலூர் இடையர் பாளையத்தில் உள்ள இந்தத் திருக்கோவில் உமா மகேஸ்வரர் திருக்கோவிலாகும். ஏறத்தாழ 350 ஆண்டுக்கால வரலாறு இத்திருக்கோவிலுக்கு உண்டு.
கி.பி. 1663-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பட்டாணி என்ற ஊரிலிருந்த அகமுடையார் குல மக்கள் சேதுபதி மன்னருடன் ஏற்பட்ட தகராறால் அங்கிருந்து தப்பியோடி வந்து இந்தப் பகுதியில் மறைந்து வாழ்ந்தனர். அப்போது தங்கள் குலதெய்வங்களை இங்கு நிறுவி வழிபட்டு வந்துள்ளனர்.
60 தெய்வங்களை இங்கே தனித்தனிக் குடிசைகளில் வைத்து வழிபட்டு வந்தனர். அதனால், இக்கோவில் 60 வீட்டுக்கார இருளப்ப சுவாமி என்கிற உமாமகேசுவரர் திருக்கோவில் எனப்படுகிறது.
இருளப்ப சுவாமி இவர்கள் வழிபட்ட தெய்வங்களில் முதன்மையான தெய்வமாக இருந்திருக்கிறது. நாட்டுப்புறத் தெய்வங்களே இக்கோவிலில் மிகுதியாக உள்ளன. எனவே, நாட்டுப்புறத் தெய்வங்களின் கோவிலாக இருந்து பின்னாளில் சிவன் திருக்கோவிலாக மாற்றம் பெற்றிருக்கிறது என எண்ண இடமிருக்கிறது.
இவர்கள் இங்கே மறைந்து வாழ்ந்த காலத்தில் இப்பகுதி காடாக இருந்திருக்கிறது. அப்போது அருகில் உள்ள போத்தனூரில் கணக்குப்பிள்ளையாக இருந்த சேதுராமபிள்ளை என்பவருக்கு முதுகில் பிளவை நோய் வந்து மிகவும் துன்புற்றிருக்கிறார்.
அவரது கனவில் வந்த கருப்பசாமி, தாம் அந்த நோயை நீக்குவதாகவும் அதற்குப் பரிகாரமாக இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து கொண்டு தம்மை வழிபட்டு வரும் மக்கள் கோவில் அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறும் ஆணையிட்டது.
அவ்வாறே அந்நோய் நீங்கப்பெற்ற பின் அப்பகுதிக்கு வந்து பார்த்த கணக்குப்பிள்ளை, அங்கே அகமுடையார் குல மக்கள் மறைந்து வாழ்வதையும் அவர்கள் அங்கே தங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபட்டு வருவதையும் கண்டு, அங்கே கோவில் அமைக்க 96 சென்ட் நிலத்தை அளித்தார்.
அருகிலுள்ள காடுகுட்டை என்னுமிடத்தில் சுவாமி சிலைகளுக்கான கல் இருப்பதாக ஒருவருக்குக் கனவில் செய்தி கிடைக்க, ஊரார் அனைவரும் அங்கே சென்று பார்த்தபோது, முதலில் கற்கள் தெரியவில்லை. பின்னர் அங்கே உருவான சுழற்காற்றில் மண் அகன்று போக, அடுக்கடுக்காகக் கற்கள் இருந்ததைக் கண்டனர். அருள் வரப்பெற்றவர் இந்த இந்த தெய்வ உருவங்களுக்கு எனக் கூற, அதற்கேற்பக் கற்கள் எடுத்து வந்து சிலைகள் செய்யப்பட்டன.
ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனி அறைகள் கட்டி வைத்திருந்தனர். ஒரு சுவாமிக்கு ஊற்றும் நீர் மற்றொரு சுவாமியின் மீது படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம். இதனால், 60 வீட்டுக்கார இருளப்ப சுவாமி கோவில் எனப் பெயர் வந்தது.
தொடக்கத்தில் கூரைக் குடில்களில் அமைக்கப்பட்ட தனிக்கோவில்கள் 1913-இல் ஒரே கற்கோவிலாகக் கோபுரத்துடன் கட்டப்பட்டது. இதில் மிக அழகிய தோற்றத்தில் உமாமகேஸ்வரர் தற்போது மூலவராக உள்ளார். இதனைச் சிவபெருமான் அரசு புரிவதாகவும் பிற தெய்வங்கள் அவரது பரிவாரங்களாக வீற்றிருந்து அருள் புரிவதாகவும் கூறுகின்றனர்.
கோவிலின் இன்னொரு சிறப்பு இங்குள்ள கிளுவை மரம். பழமையான இம்மரம் இக்கோவில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் தெய்வ உருவங்களைப் போன்ற புடைப்புகள் இயற்கையாகவே உள்ளன. இவை இங்குள்ள 60 தெய்வங்களின் உருவங்கள் என்று கூறுகின்றனர்.
திருமணத்தடை உள்ளவர்கள், மகப்பேறின்மையால் துன்புறுபவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் தடைகள் அகன்று மணவாழ்வும், மகப்பேறும் அமையப் பெறுகின்றனராம். சோழ நாட்டுத் திருமணஞ்சேரிக்குச் சென்று திருமணம் ஆகாதவர்களும் கூட, இங்கு வந்து வழிபட்டுத் திருமணம் கைகூடப் பெற்றிருக்கின்றனராம். அதனால், இக்கோவிலைக் கொங்குத் திருமணஞ்சேரி என்கின்றனர்.
நாள்தோறும் காலை 7 மணி முதல் 8 மணி வரை பால் பூசை எனப்படும் பாலாபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இப்பூசைக்கு அரை லிட்டர் பால், 2 மாலைகள், 3 எலுமிச்சம் பழங்கள் கொண்டு வந்து வழிபட வேண்டும்.
அந்த மாலைகளை இறைவனுக்கு அணிவித்துப் பூசை செய்வர். அதில் ஒரு மாலையை வேண்டுதல் செய்பவருக்கு அளிப்பர். அதனை அவர் கழுத்தில் அணிந்து கோவிலை 5 சுற்றுச் சுற்றி வந்து, பின்னர் தலத்தின் கிளுவை மரத்தை 3 சுற்றுச் சுற்றி வழிபட வேண்டும்.
பின்னர் அந்த மாலையை வீட்டிற்குக் கொண்டு போய் வைத்திருக்க வேண்டும். 3 முதல் 9 மாதங்களுக்குள் திருமணம் நடந்து விடும் என்கின்றனர்.
இவ்வழிபாட்டில் ஒரு எலுமிச்சம் பழத்தை இறைவனின் கையில் வைத்தால் அது கீழே விழுந்து கருவறையைத் தாண்டி வெளியே வந்து விட்டால், விரைவில் திருமணமாகி விடுமென்றும், உள்ளேயே நின்று விட்டால் சற்றுத் தாமதமாகும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.
குழந்தைப் பேறில்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டுக் கிளுவை மரத்தில் தொட்டில் கட்டி விட்டுச் சென்றால், விரைவில் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.
இக்கோவிலில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. இத்தேரோட்டம் இடையில் 17 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்திருக்கிறது. பின்னர் அருட்செல்வரின் முயற்சியாலும், அவர் அத்தேருக்கு இரும்பு அச்சுச் செய்து தந்த ஆதரவாலும் 1969 முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர் 260 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடையதென்று கூறுகின்றனர். தேரோட்டம் நடைபெறாத 17 ஆண்டுக் காலத்தில் தெருக்கள் குறுகலாக்கப்பட்டதால் தேரின் அளவும் குறைக்க வேண்டியதாயிற்றாம்.
இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் படுகின்றன.
பிரதோஷ வழிபாடு மாதமிருமுறை நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் பூசை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை செய்யப்படுகிறது. இதில் பூசணிக்காய் கொண்டு வந்து அதை இரண்டாக உடைத்து அதை அகல் விளக்காக்கி, அதில் எண்ணெயும் திரியும் இட்டுத் தீபமேற்றி வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டால் வேண்டுதல்கள் நிறைவேறுமாம்.
சித்திரையில் தேர்த்திருவிழாவிற்குப் பின்னர் ஆவணி மாத அமாவாசையில் பொங்கல் வழிபாடும் வில்லுப்பாட்டும் நடைபெறும். புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் சிறப்புப் பூசையும், நவராத்திரிக் கொலுப் பூசையும் நடைபெறும்.
ஐப்பசிப் பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும் கார்த்திகையில் தீபத் திருவிழாவும் நடைபெறும். மார்கழியில் திருவாதிரைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரியில் வில்லடித்து, கோவிலுக்கென்று இயற்றப்பட்டுள்ள 60 தெய்வங்களுக்கான வில்லுப்பாட்டுப் பாடப்பட்டு வழிபாடு நடக்கும்.
தல மரமாக வன்னிமரம் உள்ளது. ஆயினும் கோவிலுக்குள்ளிருக்கும் கிளுவை மரமே சிறப்பான வழிபாட்டுக்குரியதாக உள்ளது. தீர்த்தக்குளம் இல்லை. தல புராணம், இலக்கியங்கள் இல்லை. 60 தெய்வங்களைப் பற்றிய வில்லுப்பாட்டு உள்ளது.
முன்னர் பன்றி, சேவல் முதலிய உயிர்களைப் பலியிடும் வழக்கம் இக்கோவிலில் இருந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுவிட்டது.
உள்ளூர் மக்கள் நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோவிலில் வழிபாடு, அர்ச்சனை அனைத்தும் தமிழில்தான் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை – காந்திபுரத்திலிருந்து வெள்ளலூருக்குப் பேருந்துகள் 55, 74 வசதி உள்ளது.
கோவிலிலுள்ள தெய்வங்கள்
உமாமகேஸ்வரர், நந்திதேவர், சீதையம்மன், இராமர், இலட்சமணர், அனுமார், மகாவிஷ்ணு, அரசமகன், தவசிப்பண்டாரம், கன்னிமார், ஆலாத்திப்பெண், விக்னேஷ்வரர், முருகன், வள்ளியம்மை, தெய்வானையம்மை, அகத்தியர், ராக்குசத்தியம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், வேட்டைக்காரன், கழுவிந்திராஜன், சந்திரன், சூரியன், சித்திரபுத்திரன், எமதர்மராஜன், சனீஸ்வரர், பாவாடை வீரபத்திரர், உச்சி வீரபத்திரர், சந்தனக்கருப்பழகுசாமி, பெரிய கருப்புசாமி, முடி கொடுத்தராஜன், ஐயனார், அன்னபூரணி, பொற்கொடிவல்லி, அகோர வீரபத்திரர், தலைமலை வீரபத்திரர், பத்ரகாளியம்மன், மாயாண்டிசாமி, இருளப்பசாமி, தடிகாரசாமி, திருநாவுக்கரசு நாயனார், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், கால பைரவர், நவக்கிரகங்கள், செந்தாழம்மன், காத்தாயம்மன், இருளாயம்மன் எனப் பல தெய்வங்கள் இக்கோவிலில் உள்ளன. வெவ்வேறு பகுதிகளில் இத்தெய்வங்களைக் குலதெய்வங்களாகக் கொண்டவர்கள் இங்கே வந்தால் ஒரே பகுதியில் வழிபட வாய்ப்பாக இத்திருக்கோவில் உள்ளது.