திருவிழாவின்போது முளைப்பாரி… எதற்காக போடப்படுகிறது?

92

முளைப்பாரி சடங்கு..!
பொதுவாக விழக்காலங்கள், திருமணம் போன்ற சடங்குகளில் முளைப்பாரி வைக்கும் சடங்கு வழக்கத்தில் உள்ளது. இந்த முளைப்பாரி சடங்கு எங்கிருந்து ஆரம்பமானது? எப்படி உருவானது? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்…!!
மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் விவசாயிகள் கோடை சாகுபடிக்கான விதைகளை முளைப்பாரி சோதனை செய்து சாகுபடியை மேற்கொள்வார்கள். வளர்பிறை நாட்களில் விதைகளை தூவி, 9ஆம் நாள் ஊர்வலம் எடுத்து சென்று காட்சிப்படுத்துவார்கள்.
பின்னர் 10ஆம் நாள் ஓடும் தண்ணீரில் கரைப்பார்கள். இவ்வாறுதான் முளைப்பாறு சடங்கு உருவாயிற்று. இச்சடங்கு இப்பொழுது திருவிழா, திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களின்போது முளைப்பாரி நிகழ்வாக தமிழர்களால் கொண்டாடப்பட்டது.
பயிர்களை விளைவிக்கும் பூமாதேவிக்கும், பயிர்களுக்கு அதிபதியான சந்திர பகவானுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுக்கப்படுகின்றன. கிராமத் தெய்வங்களுக்குரிய திருவிழாவின் ஓர் அங்கமாகவே முளைப்பாரி இடம் பெறுகிறது.
முளைப்பாரி போடும் விதம் :
முளைப்பாரி சடங்கில் பூப்பெய்திய வயதிலிருந்து குழந்தை பேற்றை இழக்கும் வயதுக்கு முன் உள்ள பெண் வரை முளைப்பாரி போடத் தகுதியானவர்கள் ஆவார்கள். மேலும் மாதவிலக்கு சமயத்திலுள்ள பெண்கள், புதியதாக திருமணம் செய்த பெண்கள் இந்த முளைப்பாரி சடங்கில் பங்கு பெறுவதில்லை.
முளைப்பாரி வளர்ப்பதற்கு மண்பானை ஓடு, மூங்கில், பருத்திக்குச்சி, பனையோலை முதலியவற்றினால் செய்யப்பட்ட சிறு கூடைகள், தற்காலத்தில் பிளாஸ்டிக் கூடை முதலியன பயன்படுத்தப்படுகின்றன.
முளைப்பாரி போடப்படும் கூடைகளில் வண்டல் மண்ணை கூடையின் அரையளவு போட்டு அதன் மேல் ஆட்டுப் புழுக்கையும், மாட்டுச் சாணத்தையும் பரவலாக தூவுவார்கள். தூவிய பின் விதைகளை ஊர் செழிப்பாக உள்ள காலத்தில் 21 வகையான விதைகளையும், செழிப்பு குறைந்த காலத்தில் 11 வகையான விதைகளையும் போடுகின்றனர்.
தினந்தோறும் தெய்வமாகக் கருதி காலையிலும், மாலையிலும் முளைப்பாரிகளுக்கு முன்னால் பத்தி, சூடம் கொழுத்திய பின்பு தான் தண்ணீர் தெளிக்கின்றனர்.
முதல்நாளில் முத்து போன்று முளைவந்த விதைகள் எட்டாம் நாள் சூரியஒளி தேடி நீண்டு வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும்.
பயன்கள் :
அம்மன் இம்முளைப்பாரி விழாவால் வெப்பம் காரணமாக உருவாகும் அம்மை போன்ற கொடிய நோய்களைப் போக்கி அருளுவாள்.
முளைப்பாரி சடங்கு செய்வதால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும்.
குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்.
முளைப்பாரிகளை ஓடும் ஆறு, குளம், வாய்க்கால்களில் போடுவார்கள். இதனுடன் இருக்கும் மண், உரம், முளை முதலியன நீர்பாயும் இடங்களில் எல்லாம் பரவி அந்நிலத்தைச் செழிக்கச் செய்யும்.
இன்றைய சூழலில் திருவிழா மட்டுமல்லாது கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம், திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகளிலும் இம்முளைப்பாரியை அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஹரி ஓம் நம சிவாயா