நவக்ரஹ மஹத்வம்

129

இன்றைய காலகட்டத்தில், நம்மில் பலருக்கு ஏற்பட்டுள்ள ஒரு எண்ணம்,
ஏதோ ஒரு தெய்வத்தை பற்றி நிறைய தெரிந்து கொண்டுவிட்டால், நாலு நல்ல புஸ்தகங்கள் படித்து விட்டால், ஏதோ ஒரு தீக்ஷை உபாசனை என்று ஆகிவிட்டால், ஏதோ தெய்வத்துக்கு ரொம்ப பக்கத்தில் நிற்பது போல் ஒரு நினைப்பு , மமதை வந்து விடுகிறது …

சைவர்கள் வைணவர்கள், ஏன் சாக்தர்கள் கூட வர வர இப்படி மாறி இருக்கிறார்கள்.

ஆலயம் போனால் நவக்கிரகம் சுற்ற மாட்டேன் அவர்களை வணங்க மாட்டேன் என்பது போல எல்லாம் இன்று நிறைய அபத்த பேச்சுகள் வந்துவிட்டது.

இது குறித்து என் மனதில் பட்டதை எழுத எண்ணுகிறேன்..

பராசக்தியின் இச்சைப்படி, படைக்கப்படும் சகல ஜீவ ராசிகளுக்கும் அவரவர் கர்ம வினைக்கேற்ப பலாபலன்களை தருவதற்கு, நியமனமாக இருத்தப்பட்டவர்கள் இந்த கிரக தேவர்கள்.

இவர்களுக்கு பாவம் புண்ணியம் என்று வகைகள் இருக்கலாம், இவர்கள் சுப அசுபர்களாக இருக்கலாம், ஆனால், இவர்கள் மனிதர்களுக்கு பலாபலன்களை ஏற்படுத்த வேண்டியே இவ்வாறு நல்ல மற்றும் கொடுங்குணங்களோடு படைத்து பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

நித்தியமும் மூன்று காலமும் அவர்களை ஸ்மரிக்க வேண்டும் என்பதாலேயே, அவர்களுக்கு மூன்று கால சந்தியா வந்தன சமயத்திலும் தர்ப்பணம் பண்ண வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்.

பொதுவாக கிரகங்கள் தம் கடமையை நிறைவேற்றும் போது , தெய்வங்கள் உட்பட யாரும் அவர்களின் செயலில் தலையிடுவதில்லை. காரணம், இவற்றை செய்யுமாறு அவர்களை விதித்தது தெய்வங்கள் தான்.

அவர்களின் சஞ்சாரத்தை வைத்து, அவர்கள் செய்யப்போவதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லி பரிகாரம் செய்ய சொல்லி தப்பிக்க வைக்கும் ஜோதிஷ வித்வான்கள் கூட, சரியான தபோபலம் இல்லாவிட்டால், பெரிய சோபிக்கும் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வாழ்க்கையை வாழ மாட்டார்கள். காரணம், கிரகங்களின் செயலை முன்கூட்டியே கூறி கிரகங்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் தொடர்ந்து ஆளாவார்கள். அது தம்மை தாக்காது இருக்க சரியான ஜப தபங்களை செய்வது அவர்களுக்கும் கூட அவசிய விஷயம் தான்.

கோளறு திருப்பதிகம் பாடினால், கோள்கள் மூலம் நமக்கு ஏற்படும் கெடுதல்கள் குறையும், அதற்காக, கோள்கள் எல்லாம் மரியாதைக்கு அற்றவர்கள், சிவனை மட்டுமே மதிப்பேன் என்றால் அது அறிவீனம்.

நான் பெரிய வைணவன், “த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா: ” என்று எங்கள் சம்பிரதாயம் சொல்கிறது என்று சொன்னால், அப்படி பார்த்தால் இன்று உலகில் எந்த வைஷ்ணவ பக்தனும் கிரக வாதனை இல்லாமல் ரொம்ப ஸவுக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படியும் இல்லை.

நான் பெரிய ஸ்ரீ வித்யா ராஜவேதி, என்னிடம் இந்த கிரக வேலைகள் செல்லாது என்றால், அது மிகவும் நகைப்புக்கு உரிய கூற்று.

காரணம், ஒரு மனிதன் நாஸ்திக பிண்டமாக போவதற்கும், சிறந்த ஆஸ்தீக வாதி ஆவதற்கும், உபாசனை முதலான சாதனைகளில் பேர் பெறுவதற்கும், மனதில் பக்தி இருப்பதற்கும் கூட, இந்த 9 பேரும் சரியான இடங்களில் அமர்ந்திருந்தால் தான் நடக்கும்.

அவர்கள் தேவிக்கு அல்லது ஈஸ்வரனுக்கு அல்லது விஷ்ணுவுக்கு கீழான சேவகர்களாக இருக்கலாம், ஆனால் நம்மை பொறுத்த வரை, கீழே விழுந்து வணங்க வேண்டிய இடத்திலேயே உயர்ந்து உள்ளார்கள்.

ஆனானப்பட்ட ஸ்ரீ ராம பிரானாக இருப்பினும், கண்ணனாக இருப்பினும், மனிதனாக வந்தபின் கிரக தோஷங்கள் தம்மை ஆட்கொள்ளவே இருந்தனர். ஆயிரம் மறுத்து பேசினாலும், அவர்களே தங்களை இதற்கு ஆட்படுத்தி கொண்டார்கள் என்பதே உண்மை.

எந்த கிரகமும் நம் மீது தனிப்பட்டு கோபமோ பகையோ கொண்டு நம்மை ரக்ஷிக்கவோ சிக்ஷிக்கவோ செய்வதில்லை. நம் கர்மாவையே நமக்கு திருப்புகிறார்கள் , அவ்வளவே. மற்றபடி நாம் கும்பிடும் தெய்வங்களின் கூற்றுக்கு இணங்கி நம் மீது இவர்கள் கருணை காட்டவும் செய்கிறார்கள் .

எல்லாம் தெரிந்து தான், மாபெரும் மகான் ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அவர்கள், தன் சிஷ்யர் தம்பி அப்பனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்ட போது, நவகிரகங்களை ஸ்துதித்து, கீர்த்தனம் எழுதி, அவர்கள் அருளால் சிஷயரின் நோயை நீக்கினார். அவருக்கு இருந்த தபசுக்கு நேராக அம்பாளை கேட்டால் செய்திருக்காமல் இருக்க மாட்டாள், ஆனால் அவர் கிரகங்களின் தன்மையை நமக்கு இதன்மூலம் உணர்த்தினார்.

அதனால், வீணான கர்வம் அலட்சியம் எள்ளி நகையாடும் புத்தி இவற்றை கிரக விஷயங்களில் காட்டாமல், அடக்கத்தொடு அவர்களை வணங்கி நில்லுங்கள், நிச்சயம் நன்மை நடக்கும்.

ஆரோக்யம் ப்ரத தாதுநோ திநகர :
சந்த்ரோ யசோ நிர்மலம் |
பூதிம் பூமிஸுதோ ஸுதாம்சு தநய:
ப்ரக்ஞாம் குருர் கெளரவம் ||
காந்ய: கோமல வாக்விலாஸம் அதுலம்
மந்தோ முதம் ஸ அர்வதா |
ராஹூர் பாஹு பலம் விரோத சமநம்
கேதுர் குலஸ்யோந்நதிம் ||

வாழ்வில் சிறந்த ஆரோக்யம் சூரியனாலும், களங்கமற்ற புகழ் சந்திரனாலும், செல்வங்கள் செவ்வாயாலும், நல்ல கூர்மையான விழித்த புத்தி புதனாலும், சமூகத்தில் கெளரவமான இடம் குருவாலும், சாமர்த்தியமான சாதுர்யமான இனிய பேச்சும் கவிதையும் சுக்கிரனாலும், மோக்ஷம் சனியாலும், தோள் வலிமை மற்றும் எதிரிகளை அழிக்கும் சக்தி ராகுவாலும், நல்ல புத்திர மித்திரர்கள் கேதுவாலும் கிடைக்கிறது.

ஆதித்யாய ச சோமாய
மங்களாய புதாய ச
குரு சுக்ர சனிப்யஸ்ச
ராஹவே கேதவே நம: 🙏🙏🙏