நவதிருப்பதி கோயில்கள்!

111
நவதிருப்பதி கோயில்கள்! விஷ்ணு பகவானின் 108 திவ்ய தேசங்கள் சிறப்பானவையாக போற்றப்படுகிறது. அதில் ஒரே நாளில் சுற்றி வருகின்ற தலங்களாக தென்தமிழகத்தில் உள்ள நவதிருப்பதிகள் எனப்படும் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. நன்மைகள் வழங்கும் நவதிருப்பதிகள்விஷ்ணு பகவானின் 108 திவ்ய தேசங்கள் சிறப்பானவையாக போற்றப்படுகிறது. அதில் ஒரே நாளில் சுற்றி வருகின்ற தலங்களாக தென்தமிழகத்தில் உள்ள நவதிருப்பதிகள் எனப்படும் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. தாமிரபரணி கரையில் உள்ள ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தென் திருப்பேரை, இரட்டை திருப்பதி, பெருங்குளம், திருப்புளியங்குடி, நத்தம் ஆகிய நவதிருப்பதிகளிலும் புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருட சேவைகள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த நவ திருப்பதிகளைப் பற்றியும் சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம். ஸ்ரீவைகுண்டம் (முதல் திருப்பதி): பிரம்மன், தான் தொலைத்த சுவடியைத் தேடி பூலோகம் வந்தார். இத்தலத்தில் உள்ள தாமிர பரணி தீர்த்தத்தில் நீராடி அந்த சுவடியைப் பெற்றார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்களை, பிரம்மனே முன்நின்று நடத்துவதாக ஐதீகம். மூலவர் வைகுண்டநாதர் நின்ற கோலத்தில் உள்ளார். உற்சவர் கள்ளபிரான், சோரநாதர் என்று அழைக்கப்படுகிறார். தாயார் வைகுண்டவல்லி. பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதிகள் தீர்த்தமாக உள்ளன. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம். நாள்பட்ட நோய், நீதிமன்ற வழக்கு, இழந்த பொருள் கிடைக்க இத்தலம் வந்து வழிபடலாம். காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். நத்தம் (இரண்டாம் திருப்பதி): இந்த ஆலயத்தின் மூலவர் விஜயாசனர் என்ற பரமபதநாதர். இவர் ஆதிசேஷன் குடைபிடிக்க அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவரின் திருநாமம் எம்இடர்கடிவான் என்ற விஜயாசனப் பெருமாள். தாயார் பெயர் வரகுணமங்கை மற்றும் வரகுணவல்லி என்பதாகும். அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி தீர்த்தங்கள் உள்ளன. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். திருப்புளியங்குடி (மூன்றாம் திருப்பதி): இந்த ஆலயத்தின் மூலவர் பூமிபாலகர். உற்சவரின் திருநாமம் காய்சினி வேந்தன் என்பதாகும். தாயார் பெயர் பூமகள் என்னும் நிலமகள், அலமேலு மங்கை. சேத்திர தாயார் புளியங்குடி வல்லி. இங்கு வருண-நிருதி தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. இத்தல இறைவனை வருணன், நிருதி, இந்திரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தல இறைவனை வணங்கினால் கல்வியில் சிறப்பு அடையலாம். திருமண தடை நீங்கும். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் கேட்டவரம் கிடைக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். தேவர்பிரான் (நான்காம் திருப்பதி): இரட்டை திருப்பதிகளில் ஒன்றான இந்த ஆலயத்தில் ஸ்ரீனிவாசர் என்ற திருநாமத்தில் நின்ற கோலத்தில் இறைவன் வீற்றிருக்கிறார். உற்சவமூர்த்தியான தேவர்பிரான் ஸ்ரீதேவி- பூதேவியுடன் உள்ளார். தாயார் அலமேலு மங்கை, பத்மாவதி தாயார். வருண தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தங்கள் உள்ளன. இந்திரன், வாயு, வருணன், சுப்ரப மகரிஷி ஆகியோர் இத்தல இவைனை தரிசித்து பேறு பெற்றுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். இங்கு வழங்கப்படும் மஞ்சள் காப்பு விசேஷமானது. இதனை கையில் கட்டி, இந்த ஆலயத்தில் 45 நாட்கள் தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கு திருமஞ்சனம் செய்தால் தொழுநோய் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையும், பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும் திறந்திருக்கும். அரவிந்தலோசனர் (ஐந்தாம் திருப்பதி): இரட்டை திருப்பதிகளில் மற்றொன்றான இந்த ஆலயத்தின் மூலவர் திருநாமம் அரவிந்த லோசனர். அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த இறைவனின், உற்சவர் பெயர் செந்தாமரைக் கண்ணன் என்பதாகும். தாயார் திருநாமம் கருந்தடங்கண்ணி. சேத்திர தாயார் பெயர் துலைவில்லி தாயார். தாமிரபரணியோடு, அஸ்வினி என்ற தீர்த்தமும் இங்கு உள்ளது. வாயு, இந்திரன், வருணன், சுப்ரப மகரிஷி, அஸ்வினி சகோதரர்கள் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறந்திருக்கும். பெருங்குளம் (ஆறாம் திருப்பதி): இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் வேங்கடவாணன். இவரை சோரநாதன், ஸ்ரீனிவாசன் என்றும் அழைப்பார்கள். நின்ற திருக்கோலத்தில் அருளும் இவரது உற்சவர் திருமேனியை மாயகூத்தர் என்று அழைக்கிறார்கள். தாயார் திருநாமம் கமலாவதி என்பதாகும். அலமேலு மங்கை என்றும் அழைப்பார்கள். இங்கு திருமலை போலவே, ஸ்ரீனிவாசர் என்ற திரு நாமத்தில் இறைவன் உள்ளார். பிரகஸ்பதி, வேதசாரன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும். தென்திருப்பேரை (ஏழாம் திருப்பதி): அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் இத்தல மூலவரின் திருநாமம், மகர நெடுஞ்குலைநாதர் என்பதாகும். உற்சவமூர்த்தியின் பெயர், நிகரில் முகில் வண்ணன். தாயார் பெயர், குலைக்காது வல்லி, திருப்பரை நாச்சியார் ஆகியோர் ஆவார். சங்கு தீர்த்தம், சுக்ர புஷ்கரணி ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. சுக்ரன், வருணன், ஈசான்ய ருத்ரனர், பிரம்மன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். நம்மாழ்வார், மணவாள முனிகள் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர். தொழில் விருத்தி ஏற்பட இத்தல இறைவனுக்கு 11 நாட்கள் விளக்கு போட்டு வழிபடுவது நன்மை தரும். இத்தலம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையில் திறந்திருக்கும். திருக்கோளூர் (எட்டாம் திருப்பதி): குபேரன், தான் இழந்த பொருளை தாமிரபரணி நதியில் நீராடி திரும்பப் பெற்ற திருத்தலம் இதுவாகும். இத்தல இறைவன் வைத்தமாநிதி பெருமாள் என்றும், நித்திய பவித்திரன், நச்சியப்ப பவித்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் குமுதவல்லி, கோளூர்வல்லி என்று பெயர் பெற்றுள்ளார். நிதி தீர்த்தம், குபேர தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம் உள்ளன. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. மதுரகவியாழ்வார் அவதரித்த ஊர் இதுவாகும். புதிய தொழில் தொடங்குபவர்கள, வாகனம் வாங்குபவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இத்தல நரசிம்மருக்கு பிரதோஷம் அன்று அபிஷேகம் செய்து பானகம் நைவேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இப்படி 9 பிரதோஷ நாட்களில் வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும். இத்தலம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆழ்வார்திருநகரி (ஒன்பதாம் திருப்பதி): நவ திருப்பதிகளில் கடைசி தலமாக விளங்கும் இதன் மூலவர் ஆதிநாதன். ஆதிபிரான் என்றும் அழைப்பார்கள். நின்ற திருக்கோலத்தில் இத்தல இறைவன் அருளாசி வழங்குகிறார். உற்சவரின் திருநாமம் பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். தாயார் ஆதிநாதநாயகி, திருகுருகூர் நாயகி என்று அழைக்கப்படுகிறார். தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை உள்ளன. தலவிருட்சம் புளியமரம். பிரம்மன், நம்மாழ்வார், சங்கன், நந்தன், மதுரகவியாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. இத்தலத்தின் அருகில் உள்ள அனைத்து திருப்பதிகளில் இருந்தும், நம்மாழ்வாரின் பாசுரத்தினை கேட்க இறைவன் ஓடோடி வருவார். எனவே இத்தலத்தில் வணங்கினாலே அனைத்து பாண்டிநாட்டு தலங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தில்தான் 5500 வருட பழமையான புளியமரம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.