திங்கள் கிழமை நள்ளிரவில் மட்டும் திறக்கப்படும் கோயில்!

21

திங்கள் கிழமை நள்ளிரவில் மட்டும் திறக்கப்படும் கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை என்ற கிராமத்தில் உள்ள கோயில் தான் பொது ஆவுடையார் கோயில். இங்கு தான் பகல் முழுவதும் கோயில் திறக்கப்படாமல் திங்கள் கிழமை நள்ளிரவில் மட்டுமே கோயில் திறக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் அம்பாள் கிடையாது. சிவபெருமான் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தை பொங்கல் நாளன்று மட்டுமே அதிகாலையிலிருந்து மாலை 7 மணி வரையில் நாள் முழுவதும் நடை திறக்கப்படுகிறது.

அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். வானுகோபர் என்ற முனிவர் இல்லறத்திலிருந்து சிவநெறியை கடைபிடிப்பவர். மற்றொரு முனிவரான மகாகோபர் துறவறத்திலிருந்து சிவநெறியை கடைபிடிப்பவர்.

இல்லறமே சிறந்தது என இவர் முழங்க, துறவறமே சிறந்தது என அவர் முழங்க இறைவனை அடைவதற்கு சிறந்த வழி இல்லறமா? துறவறமா?’ என்று இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருமே இந்திரனிடம் சென்று விளக்கம் தரும்படி கேட்டனர்.

‘முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது’ என்று பதறிய இந்திரன், ”தில்லையம்பலத்தானிடம் கேளுங்கள்; தக்க பதில் கிடைக்கும்” என்றான். அதன்படி இரண்டு முனிவர்களும் சிதம்பரத்துக்குச் சென்று, சிவனாரைப் பணிந்தனர்; விவரம் சொல்லி விளக்கம் கேட்டனர்.

தில்லைக்குத் தென் திசையில் – நீங்கள் தவம் செய்த இடத்தில் வெள்ளால மரம் உள்ளது. அதன் அருகில் உறங்காப்புளியும் உறங்கும்புளியும் ஒருசேர தழைத்திருக்கும் பொய்கைநல்லூர் எனும் திருத்தலத்தில் தாமரைக் குளத்தின் கரையில் காத்திருப்பீர்களாக!.. – என கூறியருளினார்.

அதன்படி வானுகோபரும், மகாகோபரும் பொய்கை நல்லூருக்கு வந்தனர். உறங்காப் புளியின் கீழ் வானுகோபரும் உறங்கும் புளியின் கீழ் மகாகோபரும் ஈசனின் வரவினை எண்ணித் தவமிருந்தனர். ஒருநாள் சோமவாரம் எனும் திங்கட்கிழமை. திருச்சிற்றம்பலம் எனும் தில்லையில் அர்த்தஜாம பூஜைகள் நிறைவு பெற்று கோயில் நடை சாத்தப்பட்டது; அடுத்த நிமிடம், முனிவர்களுக்கு எதிரே வெள்ளால மரத்தில் காட்சி தந்தார் நடராஜ பெருமான். பதற்றமும் சிலிர்ப்பும் பொங்க இறைவனை நமஸ்கரித்தனர் முனிவர்கள்.

”இல்லறமாக இருந்தாலென்ன துறவறம் பூண்டால் என்ன? நெறிமுறை பிறழாமல், உண்மையும் ஒருமித்த மனமும் கொண்டு வாழ்ந்தால் என்னை அடைவது எளிது!  இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு.

இதில் உயர்வு தாழ்வுக்கு இடமே இல்லை. இரண்டும் இணையானதே!” என்று அருளினார் சிவனார். இப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பதில் உரைத்ததால், பொதுஆவுடையார் என்றும், இரண்டு பேருக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு சொல்லியதால், ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்றும் திருநாமம் அமைந்தது.

”தாங்கள் இங்கிருந்தபடி அருள வேண்டும்” என்று முனிவர்கள் வேண்ட, ”அப்படியே ஆகட்டும்” என்ற ஆடல்வல்லான், அந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். பொய்கைநல்லூர் என்ற ஊர் பின்னாளில் பரக்கலக்கோட்டை என்றாது.

சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் நள்ளிரவில் இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும், நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விமரிசையாக பூஜைகள் நடைபெறும். பகலில் கோயில் நடை திறக்கப்படுவதில்லை.

காரணம் சிவன் சிதம்பரத்தில் இருப்பதால்.  திங்கட்கிழமை மட்டும் இரவு திறந்து, நள்ளிரவில் நடை சார்த்தப்படும். பகலில் நடை திறக்கப்படுவதில்லை. எனவே, திங்கட்கிழமை அன்று பக்தர்கள், இங்கே வெள்ளமென குவிகின்றனர். அம்பாளுக்கு இங்கே சந்நிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.