பிரதோஷம் ஸ்பெஷல் !

247

பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படுவது.

சிவன் நந்தியின் கொம்புகளில் நின்று ஆடும் அழகிய தாண்டவத்தின் வேளையது.

தேவரும், கடவுளரும், முனிவர்களும் கூடி நின்று சிவனாரின் தாண்டவத்தை கண்டு பக்தி பரவசப்படும் நேரமது.

பிரதோஷ வேளையின் மஹிமையை அறிந்தவர்கள் சிவனின் அளவில்லா கருணைக்கு பாத்திரமாக இந்த வேளையில் விரதமிருந்து, சிவனுக்கு பூஜை செய்கிறார்கள்.

தோஷம் என்றால் குற்றம்.
‘ப்ர’ என்றால் பொறுத்துக்கொள்வது.

இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள் தரும் காலமே பிரதோஷம்.

இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம்!

“ஓம் நம சிவாய”

இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

1. நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும்.
2. உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.
3 குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.
4. எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர்.
5. இறுதியில் மோக்ஷம் கிடைக்கும்.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

பிரதோஷத்தின் சிறப்பையும் பயனையும் உரைக்கும் பாடல் ..!

” பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம் ஏகித் தொழுத பேறு பெற ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே.’’

பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோகத்தை 18 முறை சொல்லவேண்டும்.

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச
விபனோம்ருது ரவ்யய:

இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்க வேண்டும் !

“நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.”
— (என்ற பாடல் பிரதோஷம் மற்றும் நந்தியம் பெருமான் மகிமையை வலியுறுத்தும்)

பிரதோஷத் திருநாளான இன்று எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எம்பெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவோமாக !!

திருச்சிற்றம்பலம் !

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !