புல்லாங்குழலின் பூரண சரணாகதி

123

ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் தன் கையில் ஒரு புல்லாங்குழல் வைத்திருப்பார் என்பது நாம் அறிந்ததே; அதற்குப் பின் ஒரு பெரிய கதை இருக்கிறது.
கிருஷ்ணர் தினந்தோறும் தோட்டத்திற்குச் சென்று எல்லா செடி கொடிகளிடமும், “நான் உங்களை நேசிக்கிறேன்” எனக் கூறுவார்.
செடிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து “நாங்களும் உங்களை விரும்புகிறோம்” எனக் கூறுவதுண்டு.
ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் சற்றுக் கலவரத்துடன் அவசரமாகத் தோட்டத்திற்குள் நுழைந்தார். மூங்கில் செடியிடம் அவர் நேராகச் சென்றார்.
மூங்கில் செடியும் அவரிடம், “என்னவாயிற்று? ஏன் கலவரமாக இருக்கிறீர்கள்” எனக் கேட்டது. அதற்குக் கிருஷ்ணர், “எனக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டும்;
ஆனால் அது மிகவும் கஷ்டமானது” எனக் கூறினார். மூங்கில் செடியும், “எதுவானாலும் கொடுக்கத் தயார்” என பதில் கூறியது. உடனே கிருஷ்ணர், “எனக்கு உன் உயிர் வேண்டும்.
அதற்கு நான் உன்னை வெட்ட வேண்டும்” என்றார். மூங்கில் சற்று நேரம் யோசித்த பின், “வேறு வழி ஏதும் இல்லையா?” எனக் கேட்டது.
கிருஷ்ணர் வேறு வழி இல்லை என்றதும், மூங்கில் சரணாகதி அடைந்து தன்னை அர்ப்பணித்தது.
கிருஷ்ணர் மூங்கிலை வெட்டி, அதனுள் துளைகள் செய்தார். வலி தாங்க முடியாமல், மூங்கில் அழுது கொண்டே சகித்துக் கொண்டது.
எல்லா வேதனைகளையும், வலிகளையும் சகித்த பின், ஒரு அழகான புல்லாங்குழலாக மாறிற்று.
இந்தக் குழலை ஸ்ரீ கிருஷ்ணர் நாள் முழுவதும், 24 மணி நேரமும் தன்னிடமே வைத்திருந்தார்.
கோபியர்கள் இதைக் கண்டு பொறாமை அடைந்தனர். அவர்கள் புல்லாங்குழலிடம், “கிருஷ்ணர் எங்கள் கடவுள்; ஆனால் எங்களுக்கு அவருடன் சிறிது சமயம் தான் கழிக்க முடிகிறது.
ஆனால் அவர் உன்னுடன் தூங்கி, எழுந்து, எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறார்” எனக் கூறினார்கள்; ஒரு நாள் புல்லாங்குழலிடம் அந்த ரகசியத்தைக் கேட்டனர்.
புல்லாங்குழல், “எனக்குள் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியம். கடவுள் என்னை என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்” எனக் கூறியது.
இது தான் பூரண சரணாகதி. கடவுள் நம்மை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு, நாம் நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
உண்மையில் “நான்” என்பது என்ன? எல்லாமே அவரே ஆகும்.
நீதி:
நமக்கு எது நல்லது எனக் கடவுளுக்குத் தான் தெரியும். அவர் நமக்காகத் திட்டம் போட்டு வைத்திருக்கிறார். நம் காரியத்தை நாம் சிறந்த முறையில் செய்து, மற்றவை அனைத்தையும் கடவுளிடம் விட்டு விட வேண்டும். நம் பார்வை வரையறுக்கப் பட்டது.
பின்னால் எல்லாம் நம் நன்மைக்கே என உணராமல், சோதனைகளை எதிர்கொள்ள பயப்படுகிறோம்.
கடவுளிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவர் நம்மை ஏற்று, எப்பொழுதும் நல்லதையே செய்வார்.
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !