ருத்திராட்சம் தோன்றியது எப்படி…!

181

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது.

சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும்.

ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும்.

சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின.

வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின.

நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன.

ஒரு முகம் முதல் 21 முகம் வரை கொண்ட இருப்பத்தொன்று வகை ருத்திராட்சங்கள் உண்டு.

ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும், கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும், மேல் கையில் பதினாறும், மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம்.

சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும்.

சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை.

இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.

ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.

நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும்.

உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும்.

விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.

ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம்.

வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது.

ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.

தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது.

மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.

ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அணிந்து வந்தால் அன்று முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.

மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், ருத்திராட்சம் என்பது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது.

மருத்துவ குணம் கொண்ட ருத்திராட்ச காய்களை அணிவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகிறது.

பொதுவாக, மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரும். தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் காணப்படுகின்றன.

ருத்திராட்ச பழங்களை காய வைக்கின்றனர்.அதில் இருந்து ருத்திராட்ச காய்களை பிரித்தெடுக்கின்றனர்.

வனப்பகுதிகளில் மரக் குச்சிகளை பொறுக்குவதற்காக ஆதிவாசி இன மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது.

அவர்கள், ருத்திராட்ச பழங்களை பொறுக்கி வந்து, மாலைகளாக தயார் செய்து விற்கின்றனர்.

ஆண்டு முழுவதும் ருத்திராட்ச மரத்தில் காய்கள் காய்க்கும் என்பது தான் தனிச்சிறப்பு.

முனிவர்களும், ரிஷிகளும், பண்டிதர்களும் ருத்திராட்சம் அணிந்து, இறைவனை நோக்கி தவம் செய்தனர்.

ஒரு முகம், ஐந்து முகம் என பல வடிவங்களில் ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன.

மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம்.

ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.

ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று.

கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும்.

பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும்.

பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும்.

பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம்.

இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.

ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம்.

உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும்.

இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.

முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும்.

ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள்.

ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது .

என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள்.

உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.

ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும்.

ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

திருசிற்றம்பலம்….!