மகிமை வாய்ந்த சிவராத்திரி விரதம் நோற்போர்; சிவராத்திரிக்கு முன்னாள் ஒரு வேளை உண்டு மங்கையர் சங்கமம் நீக்கல் முதலிய ஆசாரம் தவறாது இருந்து பொழுது போக்கிச் சுத்தமான இடத்தில் படுத்து உறங்கிச் சிவராத்திரி அன்று விடியற்காலை எழுந்து புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சூரியன் உதிக்கும் வேளையில் காலை அனுஷ்டானம் இயற்றிச் சிவாலயத்துக்குச் சென்று பரமேசுவரனை விதிப்படித் தரிசித்துத் திரும்பி வீட்டிற்கு வந்து பரமேசுரனைப் பூசிக்கும் இடத்தைக் கோமயத்தால் மெழுகிப் பொன்னாடையையும் பட்டாடையையும் மேலே கட்டி வாழை மரங்களையும் கரும்புகளையும் நாட்டித் தோரணங்களையும் மலர்மாலைகளையும் தொடுத்து அலங்கரிக்க வேண்டும்.பின்னர் நடுப்பகலில் ஸ்நானம் செய்து உச்சிக்கால அனுஷ்டானம் இயற்ற வேண்டும்.பின்னர் பரமேசுரனை அருச்சித்தற்குரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் சிவாலயத்தில் கொண்டு போய் கொடுத்துப் பரமேசுரனை அர்ச்சிக்குமாறு ஏற்பாடு செய்து வீட்டினுக்கு வந்து பின்னுமோர்தரம் ஸ்நானம் செய்து மாலைக்கால அனுஷ்டானம் இயற்ற வேண்டும்.பின்னர் பொன்னாடையால் அலங்கரித்த இடத்தில் பரமேசுரனைப் பீடத்தில் வைத்துத் தாபித்து ஆகமங்களில் விதித்த சிவபூசா விதி தவறாமல் நான்கு சாமத்திலும் சாமத்திற்கு ஒரு முறையாகப் பூசை புரிதல் வேண்டும்.
அபிஷேக அலங்கார அர்ச்சனா விதி
இப்படிப் பூசிப்பதில் பால்,தயிர்,தேன்,சர்க்கரை இளநீர்,பன்னீர்,எலுமிச்சம்பழம், நார்த்தம் பழம்,சந்தனம் முதலியவைகளில் கிடைத்தவைகளை நான்கு சாமத்தும் அபிஷேகிப்பதோடு தவறாது முதற்சாமத்தில் பஞ்சகவ்வியத்தாலும் இரண்டாஞ் சாமத்தில் பஞ்சாமிர்தத்தாலும் மூன்றாஞ் சாமத்தில் தேனாலும் நான்காஞ் சாமத்தில் கருப்பஞ்சாற்றாலும் அபிஷேகம் செய்தல் வேண்டும். பால்,தயிர்,நெய்,கோசலம்,கோமயம் இவ்வைந்துங் கலந்தது பஞ்சகவ்வியம் எனப்படும்.தேன், சர்க்கரை,தயிர்,பால்,நெய் இவ்வைந்தும் கலந்தது பஞ்சாமிர்தம் எனப்படும். இதில் தயிரை நீக்கி வாழைப்பழஞ் சேர்த்துக் கொள்ளினும் ஒக்கும்.பின்னர் முதற்சாமத்தில் அகிற்குழம்புடன் வில்வமும், இரண்டாஞ் சாமத்தில் சந்தனத்துடன் தாமரை மலரும், மூன்றாஞ் சாமத்தில் அரைத்த பச்சைக் கற்பூரத்துடன் சாதிமுல்லை மலரும், நான்காஞ் சாமத்தில் அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியவர்த்தன மலரும் சார்த்த வேண்டும்.
பின்னர் முதற்சாமத்தில் தாமரை மலராலும், இரண்டாஞ் சாமத்தில் துளசியாலும் மூன்றாஞ் சாமத்தில் முக்கிளை பொருந்திய வில்வத் தளத்தினாலும் நான்காஞ் சாமத்தில் நீலோற்பல மலராலும் அர்ச்சனை புரிதல் வேண்டும்.வில்வம்,நொச்சி,மாவிலிங்கை,முட்கிளுவை,விளா இவ்வைந்தும் பஞ்ச வில்வமாகலின் வில்வம் கிடைக்கவில்லையேல் மற்றைய நான்கிற் கிடைத்தவைகளால் அர்ச்சனை புரிக.
பின்னர் முதற்சாமத்தில் பயத்தம்பருப்பு சேர்ந்த பொங்கலன்னமும் இரண்டாஞ் சாமத்தில் பாயசமும் மூன்றாஞ் சாமத்தில் எள்ளன்னமும் நான்காஞ் சாமத்தில் சுத்தான்னமும் நிவேதித்தல் வேண்டும்.இயலாதேல் நான்கு சாமத்துஞ் சுத்தான்னமே நிவேதித்திடுக.இப்படி நிவேதித்த பின்னர் ஒவ்வொரு சாமத்தும் தூபதீப ஆராதனைகள் கிரமமாகச் செய்தல் வேண்டும்.
பின்னர் முதற்சாமத்தில் இருக்கு வேதமும்,இரண்டாஞ் சாமத்தில் யசுர்வேதமும் மூன்றாஞ் சாமத்தில் சாமவேதமும் நான்காஞ் சாமத்தில் அதர்வண வேதமும் ஓதி இருகை கூப்பி துதித்து அர்க்கியங் கொடுத்து அஷ்டாங்க நமஸ்காரம் செய்து அடியேன் புரிந்த இப்பூசையினைத் திருவுள்ளமேற்று அருள்புரிக எனச் சிந்தனையால் பிரார்த்தித்துப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
இப்படி நான்கு சாமத்தும் நித்திரை அகற்றிப் பூசனை இயற்றி மறுநாள் விடியற்காலையில் போய் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து காலை அனுஷ்டானம் இயற்றி உச்சிக்கால அனுஷ்டானமும் அக்காலையிலேயே புரிந்து தமது தீக்ஷா குருவைப் பூசித்துப் பிராம்மணோத்தமர்கட்கு ஆடையும் உணவிற்குரியவைகளும் கொடுத்து உபசரித்து அவர்களால் ஆசிர்வதிக்கப்பெற்று சூரியன் உதித்து ஆறு நாழிகைக்குள் பாரணஞ் செய்திடல் வேண்டும்.
சிவபூசை செய்யச் சக்தியற்ற வயோதிகரும் ஸ்திரீகளும் நோயாளரும் சிவராத்திரி தினத்தில் ஊண் உறக்கம் ஒழித்து அன்றிரவு நான்கு சாமத்தும் சிவபுராணம் கேட்டேனும் ஜெபங்கள் செய்தேனும் சிவாலயத்துக்குச் சென்று பரமேசுரனைத் தரிசித்து அவ்விரவை அகற்றி மறுநாள் காலையில் மேற்சொன்னபடி பாரணஞ் செய்தல் வேண்டும்.
இப்படி இருபத்துநான்கு வருடம் நோற்றுப்பின் கோதானம் பூதானம் சுவர்ணதானம் முதலியவை நல்கி இவ்விரதத்தினைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.இப்படிச் சிவராத்திரி விரதமிழைப்போர் சிவகதியில் செல்வதுமன்றி அன்னவரின் முன் மூவேழு தலைமுறையினரும் தப்பாது முத்தியிற் சேர்வது சத்தியமாம்.
இப்படி இவ்விரதத்தினை அனுஷ்டித்து இஷ்டகாமியார்த்தங்களையும் முத்திப் பேற்றையும் பெற்றோர் சரித்திரம் பற்பலவாம் என்று ஸுத மாமுனிவர் சொல்லக் கேட்டனர் நைமிசாரண்ய வாசிகள்.
காசி ஸ்ரீ அ வரதராஜ பண்டிதரவர்கள் இயற்றிய சிவராத்திரி புராணம் மூலமும் அதற்கு ஸ்ரீ நமச்சிவாயம் பிள்ளை அவர்கள் இயற்றிய அரும்பிரயோக உரையும் என்னும் நூலில் இருந்து….இந்நூல் வெளியான ஆண்டு 1910.
