சிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல், அர்த்தம் என்ன ?

346

இறைவனின் ஆதிசயங்கள் தினமும் நடைபெறும் ஒரு புண்ணிய நாடு பாரத நாடு. இறைவனுடன் கலக்கின்ற உயரிய நோக்கம் ஒன்றையே அடிப்படையாக கொண்டு இந்நாட்டின் பண்பாடு அமைந்துள்ளது. இந்த பண்பாட்டை கட்டி காப்பதில் நாடு முழுவதும் இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கோயில்கள் செய்கின்றன. இக்கோயில்கள் பலவற்றில் பல வித்தியாசாமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அப்படியான ஒரு கோயில் தான் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிவன் மலை ஆண்டவர் கோயில். இக்கோயிலில் சமீபத்தில் நடந்த சுவாரஸ்யமான ஒரு நிகழ்வை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் நகரில் அமைந்துள்ளது இந்த சிவன் மலை “ஸ்ரீ சுப்ரமணிய ஆண்டவர்” கோவில். இக்கோவிலில் ஒரு ஆச்சர்யமான நடை முறை பின்பற்றப்படுகிறது. அது தான் “ஆண்டவன் உத்தரவு பெட்டி” நடை முறை. அதாவது பக்தர்கள் சிலரின் கனவில் அந்த இறைவனே வந்து சில குறிப்பிட்ட பொருட்களை இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்குமாறு கூறுவார். அப்போது அந்த கனவை கண்ட பக்தர் தான் கனவில் கண்ட அந்த பூஜை பொருளை பற்றி இக்கோவில் அர்ச்சகரிடம் கூற, அவர் இறைவனுக்கு பூ போட்டு பிரசன்னம் பார்க்கும் போது அதில் வெள்ளை பூ வந்தால், அவர் கூறிய அந்த பொருள் இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்க படும்.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தை சார்ந்த 50 வயது பக்தர் ஒருவர் கனவில் சிவன் மலை கோயிலில் வேல் வைத்து வழிபடுமாறு உத்தரவு வந்தது என்றும், இதற்கு முன்பாக தான் சிவன் மலை கோயில் வந்ததில்லை என்கிற ஒரு அதிசய தகவலையும் கூறியுள்ளார். இது குறித்து கோயிலில் பிரசன்னம் பார்த்த அர்ச்சகர், இறைவனின் உத்தரவு கிடைத்த பின்பு வெள்ளியினால் செய்யப்பட்ட வேல் ஒன்றை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து வழிப்படப்படுகிறது.

இதைப்பற்றி அந்த கோயில் அர்ச்சகர் கூறும் பொழுது இதற்கு முன்பாக பல வகையான பொருட்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து வணங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது அசுரர்களை வதைத்த தமிழ் கடவுளான முருகப்பெருமானின் வேலாயுதம் வைக்கப்பட்டிருப்பது, நாட்டில் அதர்மங்கள், சமூக விரோத செயல்கள் அதிகரித்திருப்பதை குறிப்பதாகவும், பயங்கரவாதம் போன்ற எல்லாவற்றிற்கும் வெகு விரைவில் ஒரு முடிவு ஏற்படும் என்பதை இந்த முருகனின் வேல் உணர்த்துவதாக கூறுகிறார்.