Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்குத் துலாபாரம்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்குத் துலாபாரம்.

துலாபாரம் என்றால் இந்தக் காலம் போல வெங்காயம், விறகு, பத்துக்காசு நாணயம் அல்ல. தங்கத்திலே துலாபாரம்!

சத்தியபாமா தன் நகைகளையெல்லாம் கழற்றி வைக்கிறாள்.

தான் செல்வம் படைத்தவள் என்பதைக் காட்டத் தாய் வீட்டுச் சீதனங்களையெல்லாம் கொண்டுவந்து வைக்கிறாள்.
தட்டு நகரவில்லை.

மெதுவாக வருகிறாள் ருக்மணி.
ஒரு துளசி தளத்தைக் கொண்டு வந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி விட்டு, அதைத் தட்டிலே வைக்கிறாள்.

என்ன ஆச்சரியம், தராசு சமமாகிறது!

ஆணவத்தோடு கொடுக்கப்படும் தங்கத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் இலை தழைகளுக்குச் சக்தியும், மரியாதையும் அதிகம் என்பதை இந்தக் கதை நிரூபிக்கவில்லையா?

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார்.
`சுவாமி! ஒரு சந்தேகம்!’ என்றார்.
`என்ன?’ என்று கேட்டார் பரமஹம்சர்.

`நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள், சிவன் என்கிறீர்கள். அதே விஷ்ணுவின் அவதாரம் தான் ராமனும், கிருஷ்ணனும் என்கிறீர்கள்.

ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்துக் கொண்டால் என்ன?’ என்று கேட்டார்.

அதற்குப் பரமஹம்சர் உடனே, `ஐயா! ஒரு விஷயம். நீங்கள் ஒருவர் தான்.

ஆனால் உங்கள் அப்பாவுக்கு மகன், மகனுக்கு அப்பா, மனைவிக்கு கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்கு மாமனார், மைத்துனனுக்கு மைத்துனன், பாட்டனுக்குப் பேரன், பேரனுக்குப் பாட்டன்.

உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும்போது, ஈஸ்வரனுக்கு இருக்கக் கூடாதா?’ என்றார்.

கேள்வி கேட்டவர் முகத்திலே அசடு வழிந்தது.
பல தெய்வ வணக்கம் நியாயம் என்பதற்கு இதற்கு மேல் ஒரு உதாரணம் தேவையா?

இந்தப் பல தேவதை வணக்கத்தைப் பற்றி காஞ் சிப் பெரியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

மனுஷ்யர்களின் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து,

அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்களுடைய மனதைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாரப் (ஒருமைப்) படுத்தவே பரமாத்மா பலப்பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது.

`இந்த இந்துக்களுக்கு எத்தனை கோடிச் சாமிகள்!’ என்று அந்நிய மதத்தவர்கள் நம்மைக் கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த இந்துவும் எண்ணவில்லை.

இந்த வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை; இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமி தான் என்று வேறெந்த மதமும் கண்டு பிடிக்காததையும் கண்டு பிடித்திருக்கிறது.

எனவே பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகாசக்தியாக ஒரு ஸ்வாமி தான் இருக்கிறது என்பதில், எந்த விஷயமறிந்த இந்துவுக்கும் சந்தேகமில்லை.

ஆனால், அந்த ஒரு ஸ்வாமி பல ரூபத்தில் வர முடியும்; அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.

ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகா புருஷர் களுக்கும் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக் கிறார். அந்தந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாசனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகா புருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள்.

இவற்றை முறைப்படி அனுஷ்டித்தால் நாமும் அந்தந்தத் தேவதை அனுக்கிரகத்தைப் பெற முடியும்.

எந்தத் தேவதையாக இருந்தாலும் சரி, அது முடிவில் பரமாத்மாவே! ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்கு சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தரும்.

இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் நம் லெளகீக வேண்டுதலைக் கூட நிறைவேற்றி அனுக்கிரகிக்கும்.
அவரவர் மனதைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கென்றே இத்தனைத் தேவதைகள் இருக்கின்றன.

தாயாரிடம் குழந்தை போல் பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு, அம்பாள் உபாசனை இருக்கிறது.

ஒரே சாந்தத்தில் அழுந்திப் போக வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவனுக்குத் தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.

ஆனந்தமாக ஆடிப் பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.

இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகாசக்தியிடம் பக்தி செய்வது என்று

ஏதோ ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகா சக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவமாகப் பாவித்து பக்தி செய்வதற்கு நம் மதத்திலுள்ள `இஷ்ட தேவதை’ வழிபாடே வழி வகுக்கிறது.

அன்போடு உபசரிக்க வேண்டுமானால் உபாசனைக்குரிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால் தானே முடியும்? இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாசிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =

Most Popular