ஸ்ரீ ராமானுஜர் , திருக்கோட்டியூர் நம்பி என்பவரிடம் “ஓம் நமோ நாராயண” என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ள திருக்கோட்டியூருக்கு 18 முறை வந்ததும் கடைசியில் ஆசார்யனிடம் அதை தெரிந்து கொண்டது நாம் எல்லாரும் அறிந்ததே. குரு என்பவர் கடுமையான ஆசார்ய புருஷன். கடுமையாக நடந்து கொண்டாலும் அதற்கும் காரணம் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
அந்த சமயம் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி கோவில் நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருந்தார் . இது பிடிக்காதவர்கள் ஒரு அர்ச்சகரிடம் பணம் கொடுத்து அவர் மனைவியை விட்டு மறுநாள் பிக்ஷையில் விஷம் வைத்து கொடுக்கச் சொன்னார்கள். அந்த அர்ச்சகர் மனைவியிடம் இதை சொன்னதும் அவர் ” ஐயோ மஹா பாவம், ராமானுஜரோ சந்நியாசி, நல்ல கார்யம் பண்ணுகிறார் அதுவும் பகவத் கைங்கர்யம் செய்கிறார். அவரை கொல்வது மஹா பாவம்” நான் செய்ய மாட்டேன் என்றார். அனால் அர்ச்சகரோ அப்படி செய்யா விட்டால் மனைவியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவேன் என்றதும் , பயத்துடனும், கவலையுடனும் பிக்ஷையில் விஷத்தை கலந்து வைத்தார். சன்யாச தர்மப்படி 7 பேர்களிடம் பிக்ஷை எடுத்து உன்ன வேண்டும். வழக்கம் போல ராமானுஜர் பிக்ஷைக்கு வந்ததும் அந்த பெண்மணி கண்ணீருடன் அவரது பிக்ஷா பாத்திரத்தில் ஒரு ஓரம் போல பிக்ஷையிட்டாள். தினமும் போல சிரித்த முகத்துடன் பிக்ஷையிடாமல், அதுவும் ஒரு ஓரத்தில் வேண்டாதது போல இட்ட பிக்ஷையை ராமானுஜர் கீழே ஒரு நாயிடம் போட்டு “இதை தின்று மோக்ஷம் அடைவாய் ” என்று கூறினார். அந்த பிக்ஷையை தின்ற நாய் உடனே மரணமடைந்து, ராமானுஜர் வாக்கால் மோக்ஷத்தை அடைந்தது.
ராமானுஜர் மிகவும் வருத்தப்பட்டார். நாம் அவாளுக்கு ஒரு கஷ்டமும் குடுக்கலையே, நமக்கு ஏன் விஷம் வைத்து பிக்ஷை இட்டார்கள் ? சரி இனிமேல் சாப்பிடவே வேண்டாம். எத்தனை நாள் உயிர் இருக்கிறதோ அத்தனை நாட்கள் பகவத் கைங்கர்யம் பண்ணுவோம் என்று சாப்பிடாமலேயே இருக்கத் தொடங்கினார். இப்படியே சில நாட்கள் ராமானுஜர் சாப்பிடாமலேயே இருப்பதை கண்டு எல்லாரும் பதறுகிறார்கள். இந்த விஷயம் திருகோட்டியூர் நம்பிக்கு தெரிய வருகிறது. கேள்விப்பட்ட உடனே ஸ்ரீரங்கத்துக்கு ஓடி வருகிறார். எந்த திருக்கோட்டியூர் நம்பி , ராமானுஜரை 18 தடவை ஸ்ரீரங்கத்துக்கும், திருக்கொட்டியூருக்கும் நடையா நடக்க விட்டாரோ அந்த ஆசார்யனே இப்போ ஸ்ரீரங்கத்துக்கு வருகிறார். ஆசார்யன் வருகிறார் என்று தெரிந்ததுமே ராமானுஜர் அவரை வரவேற்க காவேரி ஆற்றங்கரைக்கு ஓடினார். நல்ல வெயில் காலம் அது. மணலில் காலை வைக்க முடியாமல் மிகவும் சுடுகிறது.
திருக்கோட்டியூர் நம்பி வருகிறார். ராமானுஜர் சாஷ்டாங்கமாக அவரை நமஸ்காரம் செய்தார். சேவிச்சால் உடனே எழுந்திரு என்று தானே சொல்ல வேண்டும். ஆனால் திருகோட்டியூர் நம்பி ஒன்றும் சொல்லாமல் இருந்தார். ராமானுஜரும் எழுந்திருக்காமல் தன் திருமேனி முழுவதும் சுடும் மணலில் பதித்த படி சேவிச்சுண்டு இருக்கார். இப்படி கொதிக்கிற ஆத்து மணலில் நெடுஞ்சான்கிடையா விழுந்து கிடந்ததை பார்த்த கிடம்பி ஆச்சான் “என்ன இது ஆசார்யாள் சிஷ்ய வழக்கம்” என்று தனக்கு தானே நினைச்சுண்டு தானே மணலில் படுத்துண்டு தன் உடம்பு மேலே ராமானுஜரை தூக்கி போட்டுண்டான். உடனே திருக்கோட்டியூர் நம்பி சிரித்தார். உன்னைத்தானப்பா தேடினேன் என்று சொல்லி ராமானுஜா எழுந்திரு என்றார். ராமானுஜரும், கிடம்பி ஆச்சானும் எழுந்திருக்கிறார்கள்.
ராமானுஜரோட சரீரத்தின் மேல் யாருக்கு அக்கறை என்று பார்க்கவே அப்படி செஞ்சேன். ராமானுஜா நீ இனிமேல் வெளியில் போய் யாரிடமும் பிக்ஷை எடுக்க வேண்டாம். உனக்கு ஏக பிக்ஷை போதும். இனிமேல் உனக்கு வேண்டியதை கிடம்பி ஆச்சானே சமைத்து போடட்டும் என்று சொன்னார். என்ன க்ருபை, இந்த கைங்கர்யத்துக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறேன்னு கண்ணீர் விடறார் ராமானுஜர். கிடம்பி ஆச்சான் திருக்கோட்டியூர் நம்பியிடம் மன்னிப்பு கோருகிறார்.
குரு நல்லவர். நல்லது தான் பண்ணுவார். அவர் மேலே முழு நம்பிக்கை வைத்து நாம் செயல் படவேண்டும்.
ஆசார்யன் திருவடிகளே சரணம்.
