ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

382

மனம் கனிந்த பக்தி ரஸத்திலே, இசையின் செறிவிலே, நாம ஸங்கீர்த்தன நாதத்திலே ராமனை நிறையக் கண்டிருக்கிறோம். ஆயின் மந்த்ர சாஸ்த்ர பூர்வமாக ஸ்ரீராம உபாஸனை குறித்து அறிந்தவர்கள்- அதனை செய்பவர்கள் மிகக் குறைவு.

ஸ்ரீ ராம நாமம் – தாரக நாம ஸ்மரணம்; அது சித்த சுத்தியை கொடுக்க வல்லது என்பது அனைவரும் அறிந்த ஒன்று..

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்

எனும்படி “ராம” என்ற அந்த இரண்டு எழுத்தே ஒரு மஹாமந்த்ரம்… அது ஒன்றே ஸகல நன்மைகளையும் கொடுக்கவல்லது. எப்படி ஒரே மஹாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தாரோ, அது போல அந்த ஒரே ராம மந்த்ரம் பல்வேறு வகையில் பக்தர்களுக்கு அருள வேண்டி விரிவாக்கம் அடைந்துள்ளது.

பாஞ்சராத்ர ஆகமங்களும் கொண்டாடும் ஸ்ரீ ராம மந்த்ர மஹிமை அதிசயிக்கத் தக்கது – பல்வேறு வகையானது.

(கீழே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வடிவத்துக்கும் தனித்தனியாக மூல மந்த்ரம் உண்டு. அதனை குரு மூலமாகவே உபதேசம் பெறத் தக்கது என்ற காரணத்தால் அந்த மந்த்ரங்களின் பெருமையை மட்டும் விளக்கி அந்த மூல மந்த்ரங்களை நேரடியாக வெளியிடுவதை தவிர்த்திருக்கிறோம் .. )

ராம பரிவார மந்த்ரம் என்றொரு அற்புதமான மந்த்ரம் உண்டு; சீதா – லக்ஷ்மண – பரத – சத்ருக்ன – ஆஞ்சநேய ஸஹிதமாக ஒவ்வொருவரையும் உடன் சேர்த்த இந்த மந்த்ர ஜபத்தின் பலன் தர்ம – அர்த்த – காம – மோக்ஷம் என்ற நான்கையுமே கொடுக்க வல்லது.

எதிர்ப்புக்களை போக்கும் ஸ்ரீ ராமன் ….
ஸ்ரீ ராம மந்த்ரங்களில் ஒன்றான வீரராகவ மந்த்ரம் – எதிரிகளை வெல்லுவதற்கு உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் வாழ்வின் துரதிருஷ்டமான காலங்களையெல்லாம் கடக்க வைக்கவும் இம்மந்த்ரம் சிறந்தது.

எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை பெற்று வெற்றி பெறவே ஒரு ராம மந்த்ரம் உண்டு. அதற்கு சத்ருஞ்ஜய ராம மந்த்ரம் என்று பெயர். ஸுபாஹு முதலான மன்னர்களால் உபாஸிக்கப்பட்ட இந்த மந்த்ரத்தை உபாஸனை செய்தே போரில் கூட வெற்றியை அடைய முடியும்.

படபானல ராமசந்த்ர மந்த்ரம் – ஸாக்ஷாத் ஸ்ரீ ஆஞ்சநேயராலேயே உபாஸிக்கப்பட்ட இந்த ராம ஸ்வரூபம் வீர ஸ்வரூபமாக விளங்குகிறது. இதனால் தான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு மூவுலகையும் வெல்லும் வல்லமை கிட்டியது. 16 திருக்கரங்களுடன் வீர கருடன் மீதேறி வரும் படபானல ராம சந்த்ரன் ஆபிசாரிக ப்ரயோகங்கள், ஏவல் முதலானவற்றை தவிடுபொடியாக்குவதில் ஸமர்த்தன்.

ராகவ ந்ருஸிம்ம மந்த்ரம் என்றொன்று உண்டு… ராமனின் தார்மீக கோபமும், நரஸிம்மனின் உக்ரமும் ஒன்றிணைந்த இந்த மந்த்ரம் எதிரிகளிடமுள்ள பயத்தை அறவே நீக்கி மனத்துணிவை தருகிறது.

மழலை வரம் தரும் ஸ்ரீ ராமன்…
ஸந்தான கோபாலன் மட்டும் தான் பிள்ளை வரம் தருபவனா என்ன? ஸந்தான ராமசந்த்ரன் என்றே ஒரு ஸ்ரீ ராம மூர்த்தி இருக்கிறான். பிள்ளை பேறு இல்லாதவர்கள் இவனை உபாஸித்தால் வீட்டில் மழலைகள் கொஞ்சி விளையாடுவது உறுதி.

பால க்ருஷ்ணனை நாம் நிறைய அறிவோம். குழந்தை வடிவில் இருக்கும் பாலராமனுக்கென்றே ஒரு மந்த்ரம் உண்டு இது சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இருக்கும் பாலாரிஷ்டம் போன்ற ஸகல வித தோஷங்களையும் போக்க வல்லது.

வெற்றியை தரும் ஸ்ரீ ராமன் ….
பட்டம், பதவி, அதிகாரம் புகழ் வேண்டுமா? பட்டாபிராம மந்த்ரத்தால் ராமனை வழிபடுவோர்க்கு இவை அனைத்துமே கேளாமலே தேடி வரும்.

எதிரிகள் என்றால் அவர்களையே எதிர்க்கத்தான் வேண்டுமா? அவர்களை ஸமாதானப்படுத்தக் கூடாதா? கோபாவேசமாக சண்டையிட வருபவரையும் கூட சாந்தப்படுத்தி, அவரது கோபத்தை போக்கடிக்கும் ஸ்ரீ ராம ஸ்வரூபத்துக்கு ப்ரஸன்ன ராமன் என்று பெயர். இந்த ப்ரஸன்ன ராம மந்த்ரம் எப்பேர்ப்பட்ட கோபக்காரரையும் சாந்தப்படுத்தி விடும்.

ப்ரதாப ராமசந்த்ர மந்த்ரம் ஸகல கார்யங்களிலும் வெற்றியை மட்டுமே தரும்.

வாழ்வின் துயர் நீக்கி மங்களங்கள் தரும் ஸ்ரீ ராமன் :

திருமணத் தடைகள் ஏற்பட்டிருக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ, ஸ்ரீ கல்யாண ராம மந்த்ரத்தால் செய்யப்படும் வழிபாடு அந்த தடைகளையெல்லாம் நீக்க வல்லது.

பாபத்தால் தாபமுறும் மானிடர்களின் பாபங்கள் அனைத்தையும் போக்க வல்லது அஹல்யா வரத ராம மந்த்ரம்.

பாதாள ராம மந்த்ரம் ஒருவருக்கு பெரும் நிதியை கொடுத்து வாழ்வில் ஏற்றத்தைக் தரக்கூடியது

க்ரஹ – பூத – பிசாசங்களால் ஏற்படும் துன்பங்களை
எல்லாம் தடுத்து நிறுத்தி அருளை வழங்க்கூடியது கோதண்ட ராம மந்த்ரம்.

அற்புத வரம் தரும் ஸ்ரீ ராமன் …

இருகரங்களும் ஒரு முகமும் கொண்ட மனித அவதார வடிவிலேயே நாம் ஸ்ரீ ராமனை பொதுவில் காண்கிறோம். ஆயின் அவனுக்கு பல அற்புத தோற்றங்களும் உண்டு.

ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுகராம மந்த்ரம் ஸர்வ ஸித்திகளையும் தர வல்லது.

நான்கு கரங்களுடன் விளங்கும் சதுர்புஜ ராமசந்த்ர மந்த்ரம் பல நன்மைகளை கொடுக்கக் கூடியது; ஆரோக்யம், செல்வம் ஆகியவற்றையெல்லாம் தந்து பாபங்களை போக்கி, எதிப்புகளையும் மாய்க்கக் கூடியது இது.

இதே போல் சுக்ரீவன் உபாஸித்த ராம மந்த்ரம், ஜாம்பவான் உபாஸித்த ராம மந்த்ரம், லக்ஷ்மணன் உபாஸித்த ராம மந்த்ரம், பரதன் உபாஸித்த ராம மந்த்ரம், சத்ருக்னன் உபாஸித்த ராம மந்த்ரம் ஆகியவை தனித்தனியே பலப்பல ஏற்றங்களை தரவல்லது.

ஸ்ரீ தாரா தேவியின் மந்த்ரத்தையும் ஸ்ரீ ராம மந்த்ரத்தையும் இணைத்து செய்யப்படும் உபாஸனா முறைகளை நாம் வங்காள தேசத்தில் காண முடியும்.

ஸ்ரீ வித்யா ராம மந்த்ரம் என்றே ஒரு மந்த்ரம் உண்டு. பாலா – பஞ்சதசி முதலான மந்த்ரங்களுடன் ஸ்ரீ ராம மந்த்ரமும் இணைந்த இந்த மந்த்ரம் மஹத்தான பலன்களையெல்லாம் வாரி வழங்கவல்லது.

லக்ஷ்மணனும், பரதனும், ஆஞ்சநேயனும், ஸாக்ஷாத் பரமசிவனும் பூஜித்த அந்த ஸ்ரீ ராமனை -சாதாரண மானிடர்களான நாமும் பூஜிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததே நம் பூர்வ ஜென்ம பாக்யம்.

தாரக ப்ரபுவான அந்த ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி ஸகல ஜனங்களுக்கும் எல்லா ச்ரேயஸ்களையும் தந்து வாழ்வில் எல்லா நன்மைகளையும் அருளட்டும் !

|| ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம ||