சீதா கல்யாணம் நல்ல படியாக முடிந்தது. சீதையை அலங்காரம் செய்து ஸ்ரீ ராமனின் இருப்பிடத்திற்கு பெரியவர்கள் அனுப்பி வைத்தனர். இராமபிரான் உறங்குவது போல கண்களை மூடிக் கொண்டு இருந்தார். சீதை அவரது காலடியில் அமர்ந்தாள். அப்பொழுது ராமர் சீதையிடம் “தேவி, என் பாதங்களைப் பிடுத்துவிடேன் ” என்று அன்புடன் கூறினார். ஆனால், சீதா தேவி தலையைக் குனிந்த படி இருந்தாள். இதனைக் கண்ட ராமபிரான், ” என்ன தேவி! அரச குமாரியான நாம் இவரது பாதங்களைப் பிடிப்பதா என்று தயங்குகிறாயா? அப்படி எனில் வேண்டாம்” என்று கூறி தனது கால்களை இழுத்துக் கொண்டார்*
*அதற்கு சீதை ” அப்படியல்ல சுவாமி! ஒரு கதை கேள்விப்பட்டேன். தாங்கள் மிதிலை வரும் வழியில் ஒரு கல்லின் மீது தங்களது பாதம் பட, அழகான பெண் ஒருத்தி வந்து நின்று வணங்கினாளாம். இன்று, எனக்கு அலங்காரம் செய்யும் போது நவரத்தினக் கற்களை கொண்ட மோதிரத்தைப் பூட்டியுள்ளனர். ஒருவேளை அதில் , தங்கள் பாதம் பட்டவுடன் நவரத்தினக் கற்கள் அழகிய கன்னியாக உருப்பெற்று வந்து நின்றுவிட்டால். அவள் எனக்குப் போட்டியாக இருந்து விடுவாளே. அதனால் தான் அஞ்சுகிறேன் ” என சீதா பிராட்டி குறும்புடன் சொல்லிச் சிரித்தார். உடனே ராமர் சீதையிடம் ” தேவி ! இந்த ஜன்மத்தில் உன்னைத் தவிர அந்த இரு மாதரைக் கூட மனதாலும் தீண்டேன் ” என்று தேவியின் கைகளில் சத்தியம் செய்து உறுதி மொழி கொடுத்தார்*
#கம்பன் இந்நிகழ்ச்சியில் ” இரு மாதர்” என்று வரும் பாடல் வரிக்குப் பொருள் கூறும் போது,” நீ ஒருத்தி தான் எனக்கு உரியவள் – வேறு மாதரை இரண்டாவதாக மனதாலும் தீண்ட மாட்டேன்! ” என்று கூறுவதாகத் தான் எல்லோரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில், மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று மனைவிமார் உண்டு. பூவுலகில் இராமபிரானாக அவதரித்த போது , ஸ்ரீ தேவி சீதையாக ஜனனம் எடுத்து அவரை மணந்து கொண்டாள். ஆனால், பூதேவியும் , நீளா தேவியும் வைகுண்டத்திலேயே தங்கிவிட்டார்கள் . “இராமபிரானாக இந்த ஜென்மத்தில் பூமிக்கு வந்து விட்ட பிறகு வைகுந்தத்தில் இருக்கும் எனக்குரிய தேவியரான பூதேவியையும் நீலாதேவியையும் கூட நான் மனதாலும் நினைக்க மாட்டேன்” என்று ராமபிரான் கூறியதாகத் தான் இதற்கு பொருள் கூற வேண்டும்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில். திருமணம் மூலம் தன்னை அடைந்திராத வேறு பெண்களைத் தான் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று கூறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், தன்னை மனைவியாக அடைந்திருந்த , தனக்கு உரிமையானவர்களான இரு தேவியரையும் கூட தான் மனத்தாலும் , தீண்ட மாட்டேன் என்று கூறியதில் தான் ஸ்ரீ ராமரின் பெருமை, சிறப்பு எல்லாம் அடங்கியுள்ளது.
