ஸ்வாமி ராமானுஜரின் 3 திருமேனிகள் (விவரம்)

133

1) தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)
2)தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்)
3)தமருகந்த திருமேனி (திருநாரயணபுரம்)….
1) தானான திருமேனி:
தானான திருமேனி திருவரங்கத்தில் உள்ளது. இராமனுசர் பரமபதம் அடைந்த பின்னர் அவர் பூத உடலை திருப்பள்ளி(புதைத்தல்) படுத்தினர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், துறவிகளை எரிப்பது கிடையாது.மாறாக திருபள்ளிப் படுத்துவார்கள். அவ்வாறு திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி இத்திருமேனியை தானான திருமேனி என்று பெயர்.
2) தானுகந்த திருமேனி:
இராமானுசர் தம் 120 ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது இராமானுசரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுசர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.
பின்பு இராமானுசர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள். இராமானுசர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள் இராமானுசரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட இராமானுசரின் 120 வயது தோற்றத்தினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.
3) தமருகந்த திருமேனி:
தமர் உகந்த திருமேனி கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் உள்ளது. இவ்விடத்தில் சுமார் 12 ஆண்டுக் காலம் தங்கி இருந்து கைங்கர்யம் மேற்கொண்டார். திருவரங்கம் செல்வதற்காக இவ்வூர் சீடர்களிடம் விடைபெற்றபோது, இராமானுசரை பிரிந்து வாழ முடியாது என்று அவர்கள் கூற, அவர்கள் குறையைப் போக்குவதற்காக, சிற்பியை வரவழைத்து, தன் உருவத்தை சிலையாக வடிக்கச்செய்து, தன் சக்திகளை பாய்ச்சினார். இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இதனால் இச்சிலை தமருகந்த திருமேனி என்று அழைக்கப்படுகிறது.
ஆசார்யன் திருவடிகளே சரணம்.