தவறு யார்தான் செய்யவில்லை ?

182

‘பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணமார்யேன ந கஸ்சிந்நாபராத்யதி

(வால்மீகி ராமாயணம்)

அசோக வனத்திலே அரக்கியர் மத்தியிலே வருத்தத்துடன் இருந்த சீதையிடம், “ஆஞ்சநேயன் ராமன் ராவணனை மாய்த்துவிட்டு வெற்றியுடன் திகழ்கிறான்” என்ற நல்ல வார்த்தையை சொல்கிறான்.

சீதைக்குப் பேச்சே வரவில்லை.

அஞ்சநேயனின் கண்கள் நாலாபக்கமும் போகிறது. மஹா விகார ரூபமுடைய ராக்ஷச ஸ்திரிகள் சுற்றிலும் இருக்கிறார்கள். இவ்வளவு நாட்களும் சீதையை ஏகமாக மிரட்டியவர்கள். அவர்களை பார்த்ததும் கோபம் வந்தது.

சீதையிடம், “அம்மா , இவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைக்கு, நீங்கள் உத்தரவு கொடுத்தால் முஷ்டியினால் இவர்கள் இருக்கின்ற இடம் தெரியாமல் நொறுக்கி விடுவேன். கைகளாலும் கால்களாலும் உதைத்து துவைத்து விடுகிறேன்” என்றான் ஆஞ்சநேயன்.

இதற்கு சீதாபிராட்டி சொன்ன பதில்தான் மேலே சொன்ன சரம சுலோகம்.

ஆஞ்சநேயனிடத்திலிருந்து இந்த பேச்சு வந்தவுடன் , “உன்னுடைய த்ருஷ்டியால் அவர்கள் பாபாத்மாக்கள் என்றே வைத்துக் கொள். என்னுடைய திருஷ்டியில் இவர்கள் ஒரு பாவமும் செய்யாதவர்கள்” என்றாள்.

மேலும் தொடர்ந்து “இப்படி என் சொல்கிறேன் தெரியுமா? உலகத்தில் எல்லோரும் தப்பு செய்தவர்களே ! தப்பு செய்யாதவர்களே இல்லை.

அதனால்இவர்களுக்கு தண்டனை கொடுக்க யாருக்கு உரிமை உண்டு? அதிலும் ராவணனின் கட்டளையை பரிபாலனம் பண்ணினார்கள். விபீஷணனின் ராஜ்ஜியம் என்றாலும் அவன் சொல்வதைக் கேட்பார்கள்.

இவர்களாக ஸ்வதந்திரமாக என்னை மிரட்டினார்களா?

ராமன் கானகம் வர காரணமான மந்தாரையையே (கூனியையே) பரமாத்மா மன்னித்தானே ! இவர்களை சீக்ஷித்தால் பரமாத்மா பொறுத்துக் கொள்வானா? ஆகையால் என் திருஷ்டியினால் இவர்கள் நல்லவர்களே ! ” என்று காருண்யத்தோடு பேசினாள்.

இப்படி காருண்யத்தால் விசேஷமாக ஆட்கொள்வதே சிறந்தது. தப்பு செய்தவர்களை சிக்ஷிக்காமல் அவர்கள் திருந்துபடியாக அனுக்ரஹம் பண்ணுவதல்லவா உயர்ந்தது !
அவர்களை சிக்ஷிக்கலாமா என்றாள்.

நிக்ரஹமே அறியாத மஹாலக்ஷ்மி ராக்ஷச ஸ்திரிகளல்லாம் தப்பு செய்யாதவர்கள் என்று வாதித்தாள்.

உலகத்தில் தப்பு செய்யாதவர்களே கிடையாது என்று சீதா பிராட்டி சொன்னவுடன் ஆஞ்சநேயனின் முகம் வெளுத்து விட்டதாம். குறிப்பறிவதில் வல்லவள் சீதா பிராட்டி.

“என்ன ஆஞ்சநேயா ! உன் ராமன் தப்பு பண்ணவில்லை என்று நினைத்தாயா? ராமனும் தப்பு பண்ணியவன்தான் ” என்றாள். எல்லோரும் தப்பு பண்ணியவர்கள் எனறால் அதில் ராமனும் அடக்கம்தானே !

“பத்து மாத காலம் மாற்றான் மனையில் என்னை நிராதரவாக விட்டு வைத்தானே ! நிராதரவாக காமாந்தகனின் வீட்டில் கற்பைக் காப்பாற்றிக் கொண்டு இருக்க முடிவது எவ்வளவு சிரமம் ! இத்தனை நாட்கள் தாமதித்தது அவன் தப்பு இல்லையா? “என்று கேட்டாள் அன்னை .

“ஆமாம் நியாயம்தான் ! இவ்வளவு நாள் ராமன் விட்டு வைத்தது தப்பு”என்று ஒத்துகொண்டான். மறுபடியும் ஆஞ்சநேயனின் முகம் வெளுத்து விட்டது. அதையும் பார்த்தாள் சீதை பிராட்டி.

இப்போதும் உன் சந்தேகம் புரிகிறது. நான் என்ன தப்பு செய்தேன் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறாய். . எல்லோரும் தப்பு பண்ணியவர்கள் எனறால் அதில் நானும் அடக்கம்தானே ! நானும் தப்பு பண்ணியவளே !

தன் கணவன் எப்படி இருந்தாலும் அவனைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிப்பவள் உத்தமபத்தினிக்கு அழகல்ல. என் கணவன் என்னை பத்து மாதம் மாற்றான் வீட்டில் விட்டு வைத்தான் என்று உன்னிடம் நான் குறை சொன்னது நான் செய்த தப்பு” என்றாள்.

ஆஞ்சநேயனும், “ஆமாம். இதுவும் வாஸ்தவமே ” என்றான். “நான் செய்த தப்பு என்ன ? ” என்று கேட்டான்.

இவர்களை அடிக்கிறேன், உதைக்கிறேன் என்று சொல்கிறாயே அது நீ பண்ணிய தப்பு. ராமனின் கட்டளையை மீறி நீ ஒரு காரியம் செய்வாயா? அதேபோல் இவர்கள் அவர்களின் அரசனான ராவணனின் கட்டளையை பண்ணினார்கள். அதனால் இவர்கள் தப்பு செய்தவர்கள் என்று எப்படி சொல்லமுடியும். இவர்களும் நல்லவர்களே! அப்படிப்பட்ட இவர்களை தண்டிக்க நினைத்தது. நீ செய்த தப்பு என்றாள்.

பராசர பட்டர் குணரத்ன கோசத்தில் , ராமனின் கோஷ்டி, சீதா பிராட்டி கோஷ்டி இரண்டாக பிரிக்கிறார்.

ராமன் தன்னிடம் வந்து சரணம் புகுந்தவர்களுக்க்தான் அபயம் அளித்தான். விபீஷணன் சரணாகதி பண்ணினான். காகாசுரன் வந்து விழுந்ததையே சரணமாகக் கொண்டு அனுக்ரஹம் பண்ணினான்.

சீதா பிராட்டியோ, நனைந்த கை உலராமல் இருக்கும்போதே, ராக்ஷச ஸ்திரிகள் தன்னை மிரட்டிக் கொண்டிருக்கும்போதே, அத்தனை பேரையும் ஆஞ்சநேயநிடமிருந்து காப்பாற்றிவிட்டாள்.

எனவே மஹாலக்ஷ்மியின் காருண்யம் பகவானுடைய காருண்யத்தைக் காட்டிலும் உயர்ந்தது.

(முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார் அவர்களின் கோதையின் பாதை பாகம் 2 ல் இருந்து )

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !