கந்த சஷ்டி கவசம் உருவான கதை!
முருகன் பாடி ஆராதிக்க வேண்டுமென்றாலே முதலில் நம் நினைவுக்கு வரும் பாடல் என்றால் அது கந்த சஷ்டி கவசம் தான். உலகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்காத இடமே இல்லை. சூரமங்களம் சகோதரிகள் குரலில் எங்கும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிற அழகே தனிதான். இந்த கந்த சஷ்டி கவசத்தை பாலதேவராய சுவாமிகள் உருவாக்கியுள்ளார். அந்த வரலாற்றை இத்தொகுப்பில் பார்ப்போம்…
ஒரு சமயம் பாலதேவராய சுவாமிகள் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.
திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.
அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது. சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்… என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்…!
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.
6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.
கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.
கர்த சஷ்டி கவச பாராயண பலன்கள்:
ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும. இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. இதுவே கந்த சஷ்டி கவசத்தின் தனிச்சிறப்பு ஆகும்.
