எளிமையின் அடையாளம் ஏழுமலையான்!
தங்கப் பூக்களும் மண் பூக்களும், பல கோடிகளுக்கு அதிபதி ஏழுமலையான். அப்படிப்பட்ட ஏழுமலையானுக்கே தினந்தோறும் மண் சட்டியில் தான் நிவேதனம்.
தன்னை வணங்கிய ஏழை மண்பாண்டத் தொழிலாளி ஒருவனின் பக்தித் திறனை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாகத்தான் மண் சட்டியில் பெருமாளுக்கு நிவேதனம் என்று சொல்லப்படுகிறது.
திருப்பதிக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பீமயா என்பவன் வசித்து வந்தான். தினமும் மண்பாண்டங்களைத் தயார் செய்து விற்கும் சாதாரண ஏழைத் தொழிலாளி. ஆனாலும், திருமலையில் குடிகொண்ட ஏழுமலையான் மீது உண்மையான அன்பு கொண்டிருந்தான். ஏழுமலையானை வணங்காமல் தினமும் தன் தொழிலைத் தொடங்க மாட்டான். தான் வணங்குவதற்கு வசதியாக, வேங்கடவனைப் போன்ற ஒரு திருமேனியை மண்ணில் வடித்து தன் குடிசையிலேயே வைத்து பூஜித்து வந்தான்.
வாரத்தில் ஏதேனும் ஒருநாள் வேங்கடவனை துதித்து விரதம் இருக்க எண்ணிய பீமயா, தன் பிரார்த்தனையை அந்த பகவானிடமே வைத்தான். அன்றிரவு பீமயாவின் கனவில் தோன்றிய ஏழு மலையான், ‘வாரா வாரம் சனிக்கிழமையன்று விரதம் இரு’ என்று அருளி மறைந்தான்.
இதை அடுத்து ஒவ்வொரு சனியன்றும் சாப்பிடாமல் விரதம் இருந்தான் பீமயா. அப்போது வேங்கடவனிடம், ‘எனக்குக் காசு பணம் எல்லாம் வேண்டாம். உரிய காலத்தில், என்னை வைகுண்டத்துக்கு அழைத்துச் செல். உன் திருவடியில் நிரந்தரமாகத் தங்கியிருக்கின்ற பாக்கியத்தை எனக்கு வழங்கு’ என்று கோரிக்கை வைத்தான்.
தன்னிடம் பொருள் வசதி இல்லாத காரணத்தாலும், அருகில் உள்ள வனத்துக்குச் சென்று பூக்களைச் சேகரித்து மாலை கட்டி வழிபட நேரம் இல்லாததாலும் (அந்த நேரத்தில் இரண்டு மூன்று பானைகளைச் செய்தால், குடும்பத்துக்கு நாலு காசு கிடைக்குமே என்பது தான்!), மண் உருண்டைகளையே நிஜ பூக்களாகப் பாவித்து பெருமாளுக்கு தினமும் அர்ப்பணித்து வந்தான். பீமயாவின் உண்மையான பக்திக்கு இரங்கிய பெருமாள், மண்ணால் ஆன அந்தப் பூக்களை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார்.
அப்போது திருமலை திருப்பதி பகுதியை ஆண்டு வந்த மன்னன் தொண்டைமான். இந்த மன்னனும் பெருமாள் பக்தியில் குறைந்தவன் அல்ல! என்ன ஒன்று – தான் அரசன் என்கிற உணர்வுடனேயே வேங்கடவனை வணங்கி வந்தான். திருமலையில் குடி கொண்டிருக்கும் வேங்கடவனுக்கு, தங்கத்தால் ஆன மலர்களை (ஸ்வர்ண புஷ்பம்) தினமும் அர்ப்பணித்து வணங்குவது தொண்டைமானின் வழக்கம்.
ஒருநாள் திருமலையின் கருவறையில் குடி கொண்டுள்ள பெருமாளை தங்க புஷ்பங்களால் பூஜித்து வழிபட்டுச் சென்றான் தொண்டைமான். வழக்கம்போல் மறுநாள் வந்து பார்த்தபோது தங்கப் பூக்களைக் காணவில்லை. அதற்குப் பதிலாக மண்ணால் ஆன பூக்களே, இறைவனின் திருவடிகளில் இறைந்து கிடந்தன. ‘என்ன ஆயிற்று… நேற்று நான் பூஜித்த தங்க புஷ்பங்கள் எங்கே போயின?’ என்று மன்னன் குழம்பிப் போனான்.
ஒருவேளை தனது பூஜையில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டதோ என்கிற கவலையுடன் அன்றும் தங்க புஷ்பங்களால் பெருமாளுக்கு அரைகுறையாக பூஜை செய்துவிட்டுப் போனான். அன்றைய தினம் முழுக்க மன்னனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு, பஞ்சணையில் படுத்தான். தூக்கம் எப்போது வந்தது என்பதை அவன் அறியவில்லை.
அன்று இரவு மன்னனது கனவில் ஏழுமலையான் தோன்றினான். கண்களில் நீர் மல்க பெருமாளை வணங்கினான் தொண்டைமான். ‘உன் பக்திக்கு என்ன குறைவு நேர்ந்துவிட்டது என்று குழம்புகிறாய்?’ என்று தொண்டைமானைப் பார்த்துக் கேட்டான் ஏழுமலையான்! ‘உன் பக்திக்கு என்ன குறைவு நேர்ந்துவிட்டது என்று குழம்பித் தவிக்கிறாயா?’ என்று கேட்டான் வேங்கடவன்.
‘ஆம் பகவானே…’ – தொண்டை கரகரக்க மன்னன் சொன்னான்.
நித்தமும் என் கருவறைக்கு வந்து தங்கத்தால் ஆன பூக்களால் என்னை அர்ச்சித்து வழிபடுகிறாய். அப்படி இருக்கும்போது அந்தத் தங்கப் பூக்கள் நேற்று எப்படி மண்ணால் ஆன பூக்களாக மாறிப் போயின என்பதுதானே உன் குழப்பத்துக்குக் காரணம்? உன் தூக்கத்தைத் தொலைத்து தவிப்பதற்கும் அதுதானே காரணம்?’ என்று கேட்டான் வேங்கடவன்.
ஆமாம் பகவானே… இந்த நாடும் மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்தான் தினமும் உன் சன்னிதிக்கு வந்து தங்கத்தால் ஆன புஷ்பங்களை அர்ப்பணித்து வழிபடுகிறேன். என் வழிபாட்டில் திடீரென்று இந்தக் கோளாறு எப்படி ஏற்பட்டது? என் பக்தியில் ஏதேனும் தவறு நடந்து விட்டதா என்றெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து தவித்துக் கொண்டிருக்கிறேன்’ – குரலில் சோகம் ததும்ப, தொண்டைமான் சொன்னான்.
ஏழுமலையான் சிரித்தான். ‘நீ அளிக்கும் தங்க புஷ்பங்களை ஏற்றுக்கொண்டால் மகிழ்கிறாய். அதை ஏற்க மறுத்தால் துக்கப்படுகிறாய். இது மனிதர்களின் இயல்பாக இருந்து வருகிறது. ஏற்க மறுத்ததன் காரணம் உனக்குத் தெரியாதல்லவா?
மன்னனே… உன்னைப் போன்ற பல பக்தர்கள் என்னை நித்தமும் ஆத்மார்த்தமாக வழிபடுகிறார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுள் பீமயா என்கிற ஏழையும் ஒருவன். இதோ, இந்த ஆலயத்தில் இருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் அவன் வசித்து வருகிறான்.
அவன் ஒரு குயவன். மண்பானைகளையும் பாண்டங்களையும் தயாரித்து, தினமும் அதை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறான். ஏழையான அவன் தினமும் திருக்கோயிலுக்கு வந்து என்னைத் தரிசிக்க நேரம் கிடைக்கவில்லையே என்று வருந்தி, தான் வசிக்கும் குடிசையிலேயே என் உருவத்தை மண்ணில் வடித்து வைத்திருக்கிறான். திருமலை கருவறையில் உள்ள என்னை பூஜிப்பது போல் நினைத்துக் கொண்டு, தினமும் மண்ணால் ஆன பூக்களைக் கொண்டு அந்த விக்கிரகத்துக்கு வழிபாடு நடத்துகிறான்.
அது தவிர, எந்த நேரமும் அவனுக்கு என் சிந்தனைதான். மண்பாண்டம் செய்யும்போதும், உணவு உண்ணும் போதும், உறக்கத்திலும் எனது திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருப்பான். அவனது பக்தி என்னை நெகிழச் செய்து விட்டது.
அதைப் போற்றும் விதமாகவும், இந்த உலகத்தோர் அறியும் விதமாகவும் அவன் எனக்கு அளித்த மண் பூக்களை நான் மனமாற ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உன் தங்கப் பூக்களும் மண் பூக்களாகி விட்டன’ என்றார் பெருமாள்
