நீ யார்? நீ நினைத்தவை நடக்கிறதா? உன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடிகிறதா?

284

என்னை மீறி அவனால என்ன செஞ்சுட முடியும்?’

– மனிதர்களில் சிலர் நெஞ்சை நிமிர்த்தி, கண்களை உருட்டித் தம்பட்டம் அடிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

சற்றும் பொருத்தம் இல்லாத வசனம் இது என்பதை பலரும் உணர்வதில்லை.

சுனாமியும், சூறாவளியும் சில வருடங்களுக்கு முன் சுற்றி அடித்து வளைத்தபோது மனிதன் கொஞ்சம் தெளிந்தான். இப்போது கொரோனா வந்தபோது இன்னும் கொஞ்சம் தெளிந்தான். ‘எல்லாம் நான்தான்’ என்கிற அகம்பாவமும் இறுக்கமும் குறைய வேண்டிய தருணம் இது.

பாட்டனுக்குப் பாட்டனும் பூட்டனுக்குப் பூட்டனும் தன்னை நம்பி வாழவில்லை. ஊர் எல்லையில் இருக்கிற மாரியாத்தாவையோ, ஊர் நடுவில் ராஜ கோபுரத்தோடு குடி இருக்கிற தெய்வத்தையோ நம்பித்தான் வாழ்ந்தார்கள்.

கண் விழித்ததும் கடவுளைத்தான் பார்த்தார்கள். கண் உறங்கப்போதும் கடவுளைத்தான் நினைத்தார்கள்.

நம்மை நம்மாலே காத்துக் கொள்ள முடியாதபோது ‘நான்தான் எல்லோருக்கும் சம்பளம் தருகிறேன்… நான்தான் சம்பாதிக்கிறேன்..’ என்பதெல்லாம் சும்மா காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிற ஜபர்தசு.

வீட்டை விட்டுக் காலடி வெளியே வைக்க முடியவில்லை. ‘இன்னிக்கு கிழக்கே சூலமா? மேற்கே சூலமா?’ என்று காலண்டரைப் பார்த்துத் தெரிந்து கொள்வதில் என்ன பயன்?

ஏ மனிதா…

வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோயிலுக்குப் போக முடிகிறதா?

நண்பர்கள் வீட்டுக்குப் போக முடிகிறதா?

ஓட்டல் ஓட்டல் என்று பொஞ்சாதி சாப்பாட்டையே மறந்தவன், ‘உன் சாப்பாடு போல் வருமா?’ என்று பழியாய்க் கிடக்கின்றானே இன்று வீட்டில்!

காய்கறி வாங்கப் போனாலும், கம்பை சுழற்றிக் கொண்டு காவலர்கள் வந்து விடுவார்களோ என்று பயப்படத் தோன்றுகிறதல்லவா?

தேதி நிச்சயித்து, மண்டபம் அட்வான்ஸ் கொடுத்து, பத்திரிக்கை அடித்து எல்லாம் பூர்த்தி ஆயிற்று. பாவம், கல்யாணம் நடத்த முடிந்ததா?

உறவு முறையில் ஒரு சாவு என்றால், ‘மஸ்கட்டில் இருந்து மாமா வந்து கொண்டிருக்கிறார்’ என்று பிணம் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், சொந்தப் பையன் இருநூறு கி.மீ. தள்ளி இருந்தும் அப்பனை அடக்கம் பண்ண வர முடியவில்லையே இன்று!

யோசிப்பதற்கான கால அவகாசத்தைக் கடவுளே உனக்குத் தந்திருக்கிறார் – கொரோனா என்கிற அசுரன் மூலமாக!

குடும்பமே குதூகலம் என்பதை புரிந்து கொள்.

கஷ்டப்படுகிறவனுக்கு உதவ வேண்டும் என்பதை உணர்.

சுத்தத்தின் மறு பெயர்தான் ஆசாரம் என்று உணர்.

ஒவ்வொரு வீட்டிலும் கால்களைக் கழுவ வீட்டுக்கு வெளியே வைத்திருந்த சொம்பை, பஞ்சாயத்துக்கு மட்டுமே சொந்தம் என்று ஆக்கி விட்டாய். ஆக, நீ ஊரையும் கழுவவில்லை; கால்களையும் கழுவவில்லை.

போனது போகட்டும். இன்னும் காலம் இருக்கிறது.

இறைவன் என்றும் கனிவானவன்.

கொஞ்சம் அன்பாகச் சொல்லிப் பார்ப்பான்.

கேட்கவில்லையா? இப்படித்தான் அடாவடியாக ஆட்டம் போடுவான்.

இப்போதும் கேட்கவில்லையா? அடுத்து, தாண்டவம் ஆடி விடுவான்.

அவனும் ஆட வேண்டாம்; நாமும் ஆட வேண்டாம்.

அமைதியாகவே இருப்போம்.

அவனும் அமைதியாகவே இருப்பான்.

நாலு சுவரையும், ஜன்னல்களையும் ஆகாயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் யோசித்துப் பார்…

இறையே சரணம் !
குருவே சரணம் !