Monday, November 6, 2023
HomeArthamulla Aanmeegamவினை தீர்க்கும் வேல் மாறல்

வினை தீர்க்கும் வேல் மாறல்

பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல் மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

வேல் மாறல் மகா மந்திரமாகும். அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும் என்கிறது வேல் வழிபாடு குறித்த விளக்க உரை.

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி – வேலாயுதம். வேல் என்ற சொல்லுக்கு ‘வெல்’ என்பது மூலம். வெல்லும் தன்மையுடையது வேல். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.

வேல், வினைகளை வேரறுக்க வல்லது. வேலாயுதத்தைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் நீங்கும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள “வேல் வகுப்பு” உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று உறுதி கூறிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார்.

வேல் மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச்சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

வேல் மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை. இதனைப் பாராயணம் செய்து முருகப்பெருமான் திருவருளைப் பெறுவோமாக.

“திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன் என(து) துளத்தில்உறை கருத்தன்
மயில் நடத்துகுகன் வேலே.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 15 =

Most Popular