முருகனுக்கு எந்த காவடி எடுத்தால் என்ன பலன் கிடைக்கும்?

168

முருகனுக்கு எந்த காவடி எடுத்தால் என்ன பலன் கிடைக்கும்?

காவடி எனும் சொல் எப்படி வந்தது:

பழந்தமிழ் இலக்கியங்களில் ‘‘கா’’ என்னும் சொல் தோளில் தாங்கிச் செல்லும் சுமையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புறநானூற்றிற்கு உரை வரைந்த நச்சினார்க்கினியர், கா என்ற சொல்லினால் காவடியைக் குறிக்கின்றார். அதியமான் நெடுமாறன் அஞ்சி என்ற வள்ளலைப் புகழும் பாடலில் ஒரு பாணன் தனது கா(வடி)வின் ஒரு பக்கத்தில் முழவையும், மற்றோர் பக்கத்தில் உண்கலங்களையும் கட்டித் தூக்கி வரும் காட்சியை அவர் குறிக்கின்றார்.

இலங்கையில் ‘‘கா’’ என்ற சொல் இப்போதும் வழக்கத்தில் உள்ளது. சுமைகளைத் தூக்குதலை அவர்கள் காவுதல் என்ற சொல்லால் குறிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, சுவாமியைத் தோளில் சுமந்து வீதி வலம் வருவதை ‘சுவாமி காவுதல்’ என்கின்றனர். ‘‘கா’’ என்ற சொல் பெரும் சுமையைக் குறிப்பதால் அந்த சுமையை சுமக்க துணை செய்யும் தடிக்கு காவு தடி என்னும் பெயர் வழங்கியதாகவும், இது கால ஓட்டத்தில் காவடி ஆனதென்றும் கூறுவர். இதன் மூலம் கவடு என்னும் சொல்லை அடியாகக் கொண்டு காவடி எனும் சொல் தோன்றியதாகக் கூறுகின்றனர்.

கவடு என்பது இரண்டானது, இரண்டாக்கப்படமாட்டாது என்ற பொருளைத் தருகிறது. மரம் சம அளவில் பிரிந்து இரு கிளைகளாகச் செல்லுமிடம் கவடு எனப்படுவது இங்கு எண்ணத்தக்கது. சோழிகளுக்குக் கவடு என்பதும் பெயர். அது வயிற்றுப் பகுதியில் இரண்டாகப் பிரிந்துள்ளதால் அப்பெயர் பெற்றது. சுமைகளை இடப் பெயர்ச்சி செய்வதற்கு வாகன வசதிகள் பெருகிவிட்ட நிலையிலும், மக்கள் தாம் வணங்கும் தெய்வங்கள் வாழும் மலைகளின் மீது பூஜை பொருட்களைக் காவடியில் கட்டித் தூக்கிச் சென்று வழிபடும் வழக்கத்தை மட்டும் மாறாது கொண்டுள்ளனர். அதுவே காவடி செலுத்துதல் என்னும் பிரார்த்தனையாக மக்களிடையே நிலை பெற்றுத் தொடர்ந்து வருகிறது.

தொடக்கத்தில் மக்கள் சுமைகளை தூக்கிச் செல்ல பயன்படுத்திய காவடிகள் அளவாலும், அமைப்பாலும் எளிய நிலையில் இருந்தன. அவை உறுதியான கல்மூங்கிலால் ஆன தண்டையும், அதன் இருமுனைகளில் பனைநார் கொண்டு தயாரிக்கப்பட்ட உரிகளையுமே கொண்டிருந்தன. அன்பர்கள் மலை முகடுகளில் வாழும் தெய்வங்களை பூசிப்பதற்கான பூஜை பொருட்களைக் காவடியாக கட்டிக் கொண்டு செல்லும்போது அக்காவடிகள் தெய்வீகத் தன்மை கொண்டவையாக பரிணமித்தன.

தெய்வங்களுக்கு உரியது என்பதால் அவை அழகுபடுத்தப்பட்டன. மயில் தோகைகள், மாவிலைகள், தர்ப்பைப் புல் முதலியவற்றைக் கட்டி, விபூதி குங்குமமிட்டு அழகுபடுத்தப்பட்டன. காலம் செல்லச் செல்ல அதன் அமைப்பும் அழகும் வளர்ந்து புதிய பரிணாமங்களை அடைந்தன. அத்தகைய பல்வேறு காவடிகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

காவடியின் வகைகள்:

காவடிகளில் மொத்தம் 20 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வகைக் காவடிக்கும் ஒவ்வொரு வகைக் பலன்கள் உள்ளது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது.

தங்கக் காவடி பலன்: நீடித்த புகழ்.
வெள்ளிக் காவடி பலன்: நல்ல ஆரோக்கியம்.
பால்க் காவடி பலன்: செல்வச் செழிப்பு.
சந்தனக் காவடி பலன்: வியாதிகள் நீங்கும்.
பன்னீர்க் காவடி பலன்: மனநலக் குறைபாடுகள் விலகும்.
சர்க்கரைக் காவடி பலன்: சந்தான பாக்யம்
அன்னக் காவடி பலன்: வறுமை நீங்கும்.
இளநீர்க் காவடி பலன்: சரும நோய் நீங்கும்.
அலங்காரக் காவடி பலன்: திருமணத்தடை நீங்கும்.
அக்னிக் காவடி பலன்: திருஷ்டி தோஷம் மற்றும் பில்லி, சூனியம்,செய்வினை நீங்கும்.
கற்பூரக் காவடி பலன்: வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
சர்ப்பக் காவடி பலன்: குழந்தை வரம் கிடைக்கும்.
மஞ்சள் காவடி பலன்: வாழ்வில் வெற்றி கிடைக்கும்.
சேவல் காவடி பலன்: ஏதிரிகள் தோல்லை நீங்கும்.
புஷ்ப(மலர்) காவடி பலன்: நினைத்தது நிகழும்.
தேர்க் காவடி பலன்: உயிர் பிழைக்க வைத்ததற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்க எடுக்கும் காவடி.
மச்சக் காவடி பலன்: வழக்கு விஷயங்களிலிருந்து விடுபட நேர்மையான தீர்ப்பு கிடைக்க.
மயில்க் காவடி பலன்: இல்லத்தில் இன்பம் நிறைய.குடும்ப பிரச்சனை நீங்க.
பழக் காவடி பலன்: செய்யும் தொழிலில் நலம் பெருகும், லாபம் கிடைக்கும்.
வேல் காவடி பலன்: ஏதிரிகள் நம்மை பார்த்து அஞ்சிட.
முருகனின் மீது முழு நம்பிக்கையுடன், முருகனுக்குரிய தினத்தில், சரியான விரத முறைகளை பின்பற்றி காவடி எடுத்தால் அந்த முருகன் தன் மனம் மகிழ்ந்து பக்தர்கள் வேண்டியதை தந்தருள்வார்.