தீட்சை என்றால் என்ன? தீட்சை எத்தனை வகைப்படும்?
தீ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை எனப்படும். மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படி நிலைகள் உள்ளன. மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும். மந்திரக்கலை – 4 எழுத்து, 5 எழுத்து, 6 எழுத்து மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் ஆகும். மாந்திரீகர்கள் தான் இதனை போதிப்பவர்கள்.
முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர். இந்த இரண்டு கலைகளையும் விட உயர்ந்த கலையாக விளங்குவது உபதேசக் கலையாகும். இதனை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தான் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.
தீட்சைகள் 6 வகைப்படும்:
பரிச தீட்சை, நயன தீட்சை, வாக்கு தீட்சை, பாவனா தீட்சை, யோக தீட்சை மற்றும் நூல் தீட்சை.
பரிச தீட்சை:
பறவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடரின் நெற்றியில் தொட்டு, குண்டலினி ஆற்றலை மேல் நிலையில் புருவத்தின் மத்தியிலும், தலை உச்சியிலும் நிலை நிறுத்துவது ஆகும்.
வாக்கு தீட்சை:
ஞானிகளின் ஒருமித்த கருத்துக்களையும், தன்னுள் உணர்ந்த மெய்ஞான அனுபவத்தையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், ஞான அதிர்வுகளை உருவாக்கி அவர்களை நல்வழியில் நடத்துவதே வாக்கு தீட்சையாகும்.
நயன தீட்சை:
ஒரு மீன் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.
யோக தீட்சை:
ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும்.
பாவானா தீட்சை:
ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.
நூல் தீட்சை:
சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.
