Tuesday, October 17, 2023
HomeArthamulla Aanmeegamநவகண்டம் என்றால் என்ன?

நவகண்டம் என்றால் என்ன?

நவகண்டம் அப்படி என்றால் என்ன?

சாந்தமான முகம். அறுபட்ட தன் தலை தரையில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் தலைமயிரை கொத்தாக கையில் பிடித்திருக்கிறான். தலை அறுக்கப்பட்ட போதிலும் சாவின் பயமானது துளி கூட அவன் முகத்தில் தெரியவே இல்லை. சிரித்த உதடுகள், அழிந்த முகம், அடந்த புருவங்கள், கொண்டையிட்ட கேசம், கழுத்தில் மணியாரத்துடன் நவகண்டம்…

சோழ மன்னர்களும் சரி, பல்லவ, பாண்டிய மன்னர்களும் சரி, தமிழ்நாட்டை ஆண்ட பொழுது நாடு வளமாக இருந்தாலும் போரின் போது ஏற்பட்ட இழப்புகள் மக்களை சிந்திக்க வைத்தது. ஏதாவது ஒரு காரணத்திற்காக இவர்கள் போரில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், எத்தனை முறை செய்து இழப்புகள் ஏற்பட்டாலும் மக்கள் மன்னர்களுக்கு விசுவாசமாகவே இருந்தார்கள்.

மன்னர்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தங்களது உயிரையும் கூட தயாராக இருந்தார்கள். இந்த தியாகம் போர் முனையில் அல்ல, போர் செய்வதற்கு முன்பாகவே இருந்தது. இதனைத் தான் நம் முன்னோர்கள் நவகண்டம் என்று அழைத்தார்கள். நவகண்டம் என்றால், தனது தலையை தானே வாளால் வெட்டிக் கொள்வது. நவ + கண்டம் என்பதே நவகண்டம் எனப்படுகிறது.

நவ என்பது நம் உடலிலுள்ள ஒன்பது துவாரங்களை குறிப்பது. இந்த ஒன்பது துவாரங்களின் நரம்பு முடிச்சுகளும் நம் கழுத்தின் பின்புறத்தில் முள்ளந்தண்டு வடத்தில் அமைந்துள்ளது. உடலின் ஒன்பது துவாரங்களையும் ஒரே தருணத்தில் செயலிழக்க செய்வது உயிர் துறப்பதற்கான வழிகளில் ஒன்று. எனவே இந்த முக்கிய நரம்பு முடிச்சை கொண்ட கழுத்தை (கண்டத்தை) தன் கையால் தானே துண்டம் செய்வது நவகண்டம் எனப்படுகிறது. ஒரே வீசில் தன் தலை உடலில் இருந்து அறுத்து வீசுவதால் அறிகண்டம் எனவும் கூறப்படும்.

சரி எப்படி தன் தலையை தானே வெட்டிக்கொள்ள முடியும்?

ஒரு நீண்ட, நன்கு வளையக்கூடிய மூங்கில் கழியை, பூமியில் நன்கு ஊன்றி நட்டு, தன் குடுமியை (அப்பொழுதெல்லாம் எல்லா ஆண்களும் குடுமி வைத்திருந்தார்கள்) அக் கழியில் மாட்டி, நன்றாக தலையை கீழே குனிந்தால், மூங்கில் நன்கு வளையும், பின் வாளால் ஒரே வெட்டு. தலை துண்டாகி, மூங்கில் கழியில் தொங்கும். இது தான் நவகண்டம்.

அரசன் போருக்கு செல்லும் வழியில் நடு சாலையில் அவன் முன் ஒருவன் செய்கிறான் இதே போல…தலை துண்டிக்கப்பட்ட மூங்கில் மேலே தலையுடன் செல்லும் போது அரசனுக்கும் அவர்கள் படையினருக்கும் நெற்றியில் திலகமாக, அவனது தலை மேலே போகும் போது அதிலிருந்த ரத்த துளிகள் அனைவர் மீதும் தெளிக்கும். தலையில்லா முண்டம் மட்டும் கீழே சாயும். இதை அப்படியே எழுத்து சித்தர் பாலகுமாரன் தனது நாவலில் எழுதியுள்ளார்.

இப்படி தன்னை பலியிடுவதன் மூலம், சூட்சம சக்தியாகி, தன் மன்னனுக்கும், நாட்டிற்கும், வெற்றி தேடி தருவதோடு, வீர சுவர்கமும் அடையமுடியும் என்பது பழங்காலத்தில் மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. பலியானவர்களுக்கு, நடுகற்கள் நட்டு, அவர்களை தெய்வமாக வழிபடுவதும் நடந்திருக்கிறது. இன்றைக்கும் பல கிராம தேவதைகளின் கதைகளை கேட்டால், அவர்கள் அந்த ஊருக்கு எதோ மிகப்பெரிய தியாகம் செய்து, அதன் விளைவால் உயிர் நீற்று, அதனால் தெய்வம் ஆனவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

அப்படி ஏதோ ஒரு நோக்கத்துக்காக தனது இன்னுயிரை தந்தவன் சிலையை நீங்க திருவானைக்காவலில் காணலாம். தமிழகத்தில் பல கோவில்களில் இது போன்ற சிலைகள் உள்ளன். அவை அனைத்தும் யாரோ எங்கேயோ தேசத்துக்காக அரசனுக்காக நவகண்டம் ஆனவர்கள் தான். நம்மில் பல பேருக்கு ஏன் இது போன்ற சிலைகளை எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. இனிமேல், இது போன்ற கோயில்களுக்கு சென்று வரும் போது அந்த சிலைகளை வணங்கிவிட்டு வாருங்கள். ஒருவேளை அவர்கள் உங்களது மூதாதையர்களாக கூட இருக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =

Most Popular