ஆடி 18ல் என்ன ஸ்பெஷல்?
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் வரும் 18ஆம் நாள் தமிழகத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும்.
மற்ற பெயர்கள்:
ஆடி பெருக்கினை பதினெட்டாம் பெருக்கும் என்றும், ஆடி 18 என்றும் கூறுவர். ஆடி மாதத்தில் வரும் 18 ஆவது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இந்த ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. மற்ற விழாக்கள் கிழமை மற்றும் விண்மீண்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.
தென்மேற்கு பருவக்காலத்தில் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். இதனையே ஆற்றுப் பெருக்கு என்பர். இந்த நாளில் உழவர்கள், விவசாயிகள் விதை விதைப்பர். இந்த ஆடி மாத 18 ஆம் பெருக்கில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைப்பார்கள். அதன் பிறகு 6ஆவது மாதம் தை திருநாளில் அறுவடை செய்வார்கள். இதற்கு வற்றாத நதிகளும் கை கொடுக்கும். இதைத் தான் ஆடிப்பட்டம் தேடிவிதை என்று பழமொழி கூறுவார்கள்.
ஆடி 18ஆம் பெருக்கான இன்று அனைவரும் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்டதெல்லாம் வெற்றியாகும்.
தாலி பாக்கியம்:
பெண்கள் தங்களது தாலி பாக்கம் நிலைக்க வேண்டுமென்று ஆடிப்பெருக்கு அன்று தாலி மாற்றிக் கொள்வார்கள். பொதுவாக திங்கள் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்கள் தான் தாலி மாற்ற வேண்டும் என்று நாம் இதற்கு முன்னதாக ஒரு பதிவில் பதிவிட்டிருந்தோம். அதன்படி, இன்று செவ்வாய் கிழமை அதுவும் ஆடி பதினெட்டாம் பெருக்கு. பெண்கள் தங்களது தாலிக்கயிறை மாற்ற இன்று மிகவும் சிறப்பான நாள். இந்த நாளில் புதிதாக திருமணமான பெண்களுக்கு தாலி பிரித்து கோர்ப்பார்கள்.
18 – வெற்றியைக் குறிக்கும்:
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் 18 ஆம் தேதியை ஆடிப்பெருக்கு என்று தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பெருக்கை, 18ஆம் பெருக்கு என்றும் ஆடி 18 என்றும் குறிப்பிடுகின்றனர். உண்மையில், 18 என்ற எண் வெற்றியைக் குறிக்கிறது. மகாபாரத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரி ஐயப்பனுக்கு 18 படி, கருப்பசாமிக்கு 18 படி ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்ததாக கூறப்படுகிறது.
இவ்வளவு ஏன், நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளில் கூறு, 18 படிகளை அமைத்து நமது முன்னோர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் காவிரி தேவிக்கு ஆடி பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக, குடும்ப பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள் என்று அனைவரும் காவிரித் சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பூக்கள், நாணயங்கள், தேங்காய், குங்குமம், பச்சரிசி, வெல்லம், பன்னீர், வாழை இலை என்று பலவற்றைக் கொண்டு சென்று வழிபாடு செய்வார்கள். இப்படி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆடி 18ஆம் பெருக்கை கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழர் பண்டிகைகளில் ஆடி 18ஆம் பெருக்கு முக்கியமானதாக கருதபடுகிறது. ஒரு சிலர் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அட்சய திரிதியைவிட இந்த ஆடி 18 ஆம் பெருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி 18ஆம் பெருக்கான இன்று நகை வாங்க மிகவும் உகந்த நாள். ஆடி பெருக்கில் நகை வாங்கி வீட்டில் வைத்தால் நகை பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். நகை வாங்க முடியாதவர்கள் மஞ்சள், உப்பு போன்ற பொருட்களை வாங்கி வீட்டு பூஜையறையில் வைத்து வழிபாடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
