சென்னையில் பல ஊர்களின் பெயர் வரக் காரணம்?
பல கிராமங்களின் இணைவு காரணமாக சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்குகிறது. சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கேற்ப பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது. அப்படி பல கிராமங்களின் பெயர்கள் எப்படி உருவானது என்பதற்கான பின்னணி குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
அம்பத்தூர்:
கிட்டத்தட்ட 108 சக்தி ஸ்தலங்களில் 51ஆவது ஊர். ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் அம்பத்தூர் என்று மருவியது.
கோடம்பாக்கம்:
கடந்த 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியானது நவாப் ஒருவரது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அவர் வைத்திருந்த குதிரைகளின் பகுதியை போக்கும் நந்தவனமாக இருந்துள்ளதால், Garden of Horses என்னும் பொருள் படும் Ghoda Bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். இதுவே பின்னாளில் கோடம்பாக்கம் என்று மாறியது.
முகப்பேர்:
மகப்பேறு என்பதே முகப்பேர் என்றானது.
தேனாம்பேட்டை:
தென்னை மரங்கள் நிறைந்து காணப்பட்ட பகுதி. ஆதலால், தென்னம்பேட்டை என்று இருந்தது. நாளடைவில் தேனாம்பேட்டையாக மாறியது.
சைதாப்பேட்டை:
சையிது ஷா பேட்டை தான் சைதாப்பேட்டை என்றானது.
வேளச்சேரி:
பழங்காலத்தில் வேதஸ்ரேணி என்று அழைக்கப்பட்டது தற்போது வேளச்சேரி என்று மருவியது.
சேப்பாக்கம்:
உருது வார்த்தையான Che Bags (Six Gardens) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.
பாண்டி பஜார்:
சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கம் தான் பாண்டி பஜார்.
கே.கே.நகர்:
கலைஞர் கருணாநிதி நகர் தான் சுருக்கமாக கேஎ.கே.நகர் என்று அழைக்கப்படுகிறது.
மாம்பலம்:
சிவனுக்கு உகந்த வில்வம் நிறைந்த மரங்கள் அதிகமாக இருந்ததால் மகாவில்வம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் மாம்பலமாகிவிட்டது.
பல்லாவரம்:
பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் தற்போது பல்லாவரம் என்று அழைக்கப்படுகிறது.
பனகல் பார்க்:
சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இந்த இடம் பனகல் பார்க் என்று அழைக்கப்படுகிறது.
தியாகராய நகர்:
நீதி கட்சி தலைவர் சர்.பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இந்தப் பகுதி தியாகராய நகர் (தி.நகர்) என்று அழைக்கப்படுகிறது.
புரசைவாக்கம்:
புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால் இந்தப் பகுதி புரசைவாக்கம் என்றானது.
பூவிருந்தமல்லி (பூந்தமல்லி):
மல்லிகை பூக்கள் அதிகமாக பயிரிடப்பட்ட பகுதி. தினந்தோறும் இங்கிருந்து மல்லிகை பூக்களை பறிந்துக்கொண்டு காஞ்சி வரதராஜ பெருமாளை திருக்கச்சி நம்பி ஆழ்வார் வழிபட்டு வந்தார். அதனால், இந்தப் பகுதி சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தமல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது.
தண்டையார்பேட்டை:
பதினேழாம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.
மந்தைவெளி:
இந்தப் பகுதியான மாடுகள் மேயும் திறந்தவெளி பகுதியாக இருந்துள்ளது. அதனால், மந்தைவெளி என்றானது.
மயிலாப்பூர்:
மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.
போரூர்:
பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இந்த இடத்தை பயன்படுத்தியதால், இந்தப் பகுதி போரூர் என்றானது.
பெரம்பூர்:
நூறு வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.
திரிசூலம்:
திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.
திருவல்லிக்கேணி:
பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திரு அல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாக தற்போது Triplicane என மாற்றம் கண்டுள்ளது.
பாரிமுனை:
தாமஸ் பாரி என்பவர் இந்தப் பகுதில் வணிகம் செய்து வந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.
ஆவடி:
Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)
குரோம்பேட்டை:
Chrome Leather Factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.
