கடவுள் எங்கே இருக்கிறார்?
ஆச்சார்ய வினோபாபாவே ஒரு கூட்டத்தில் அற்புதமான ஒரு கேள்வியைக் கேட்டார். கிராமம் கிராமமாக பஜனை நடக்கிறது. இது நல்லதுதான். பகவான் எங்கிருக்கிறார்? காசியிலும் கைலாசத்திலும் இருக்கிறாரா? நமது மந்திரிகளும் அதிகாரிகளும் நீலகிரி, கொடைக்கானல் முதலிய இடங்களுக்குப் போவது போல கடவுளும் வெயில் காலத்திற்கு கைலாசத்திற்கும், மாரி காலத்தில் காசிக்கும் வருகிறாரா? அல்லது நம் நாட்டில் குழந்தைகளுக்குப் பால் இல்லாதிருக்கும்போது அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறாரா?” என்று கேட்டார். யாருமே பதில் சொல்லவில்லை!
நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று பெரியவர் ஒருவர் கூறவே வினோபாபாவே பதிலளித்தார்.
கடவுள் நம் சமீபத்திலும் சமீபமாக இருக்கிறார். நமது புத்தியே கைலாசம்! விசாலமான இதயமே திருப்பாற்கடல்! எதற்கும் அசையாத கைலாச கிரியைப் போல ஸ்திரபுத்தி உடையவர்களாக, கடலைப் போல் விசால இதயமுடையவர்களாக இருக்க வேண்டும். அப்போது நம் அறிவிலும் உள்ளத்திலும் சச்சிதானந்த சொரூபியாகிய ஆண்டவன் அமர்ந்திருக்கிறார். இதைக் கேட்ட எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார்.
அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது.
சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை <உங்களால் சொல்ல முடியுமா?” என்று கேட்டான். துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது. சுவாமி! நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?” என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.
கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே!” என்றார். இளைஞனுக்கு கோபம்.
வாயே திறக்கவில்லை! பதில் சொல்லியாச்சு என்கிறீர்களே! துறவி பொய் சொல்லலாமா?” என்று சற்று கோபமாகவே கேட்டான். மகனே! மவுனமே எனது பதில்” என்றார் துறவி. இளைஞனோ,””இப்படி புதிர் போட்டு பேசினால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்,” என்றான்.
ஆன்மிகத்தின் ஒட்டுமொத்த பிழிவே மவுனம் தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மவுனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும்,” என்ற துறவி மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தார்.
