வீட்டிற்கு எந்த பிள்ளையார் வாங்க வேண்டும்?

25
பூஜை பொருட்களை செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகியவற்றில் தான் வைக்க வேண்டும்
பூஜை பொருட்களை செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகியவற்றில் தான் வைக்க வேண்டும்

வீட்டிற்கு எந்த பிள்ளையார் வாங்க வேண்டும்?

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு புரட்டாசி 1 ஆம் தேதி வளர்பிறை சதுர்த்தி நாளன்று வந்துள்ளது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி தமிழ்நாட்டில் செப்டம்பர் 18 ஆம் தேதியும், வட மாநிலங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி செவ்வாய் கிழமையும் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் வாங்க போறீங்களா? இதை முதல்ல கவனியுங்க!
விநாயகர் சதுர்த்திக்கு பூஜை பொருட்கள், கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் என ஷாப்பிங் லிஸ்ட் தயாரித்துக் கொண்டு கடை வீதிக்கு செல்வோம். அந்த லிஸ்ட்டில் மிக முக்கியமாக இடம் பெற்றிருப்பது விநாயகர் சிலை இல்லையா? நம்முடைய வீட்டிற்கு தகுந்தாற்போல் சிறியதாக ஒரு சிலையை வாங்கி வைத்து பூஜை செய்வோம்.

அப்படி பிள்ளையார் சிலை வாங்கும்போது ஏனோ தானோவென்று வாங்கக்கூடாது. அதற்கென சில விஷயங்கள் உண்டு. அதை பார்த்துதான் வாங்க வேண்டும். மார்க்கெட் முழுவதும் கலர் கலராக அலங்காரங்கள் செய்யப்பட்டு பிள்ளையார் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நமக்கும் அதை பார்த்ததும் உடனே வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், அதில் கவனித்து பார்க்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

சிலை வாங்குதல்:

நிற்கும் பிள்ளையாரா? அமர்ந்திருக்கும் பிள்ளையாரா? எதை வாங்குவது?: பிள்ளையாரை பொறுத்தவரையில் ஏராளமான போஸ்களில் நிறைய மாடல்கள் செய்து வைத்திருப்பார்கள். நமக்கே குழம்பிவிடும் எதை வாங்குவது என்று, அதனால் குழம்பாமல் இதைக் கவனியுங்கள். வீட்டுக்கு வாங்கும் பிள்ளையார் என்றால் அமர்ந்திருக்கும் வடிவங்கள்தான் சிறந்தது. இதுவே அலுவலகம், தொழில் செய்யும் இடம் என்றால் நின்றபடி இருக்கின்ற சிலையை வாங்குங்கள். அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்றால் செல்வ வளம் நிலையாக வீட்டில் தங்கும் என்பது ஐதீகம். தேவையில்லாத விரைய செலவுகள் குறையும். நின்றுகொண்டிருக்கும் பிள்ளையாரை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழில் வளம் பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தும்பிக்கை இருக்கும் திசை: அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் பிள்ளையாரின் தும்பிக்கைதான். பிள்ளையார் என்றாலே தும்பிக்கைதானே பிரதானம்? அதனால் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். நாம் வாங்கும் பிள்ளையாரின் தும்பிக்கை வலப்புறமாக திரும்பி இருக்கிறதா இடப்புறமாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். மிகச்சிறிய பிள்ளையார் சிலைகளில் தும்பிக்கையானது பெரும்பாலும் நடுநிலையாகக்கூட இருக்கும். அப்படி இருப்பதை வாங்கக்கூடாது. இடது புறமாக வளைந்து இருக்கக்கூடிய தும்பிக்கை கொண்ட பிள்ளையார்தான் புனிதமானதாக கருதப்படுகிறது. அதனால் இடது புறம் தும்பிக்கை திரும்பிய பிள்ளையாரைப் பார்த்து வாங்குங்கள்.

கொழுக்கட்டை ஏந்திய எலி: பிள்ளையாரின் வாகனம் எலி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பிள்ளையார் சிலை வாங்கும்போது இந்த எலியை வாங்க மறந்து விடுகிறோம். அப்படி எலியையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால், எலி கொழுக்கட்டையை கையில் வைத்திருக்கும்படி வாங்குங்கள்.

எதில் செய்யப்பட்டது:

பிள்ளையார் நல்ல களிமண்ணால் செய்தது என்றால் மிகச்சிறப்பு. இப்போது நிறைய மெட்டீரியல்களில் செய்யப்படுகின்றன. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், கெமிக்கல்கள் கலந்ததாக இல்லாமல் இருக்க வேண்டும். அதனால்தான் களிமண் பிள்ளையார் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மரக்கட்டையால் செய்யப்பட்ட எந்த பிள்ளையாரையும் பூஜையில் எப்போதும் வைக்கக்கூடாது. ஏன் நம் வீட்டு பூஜை அறையிலேயே அதை வைத்திருக்கக்கூடாது!

பிள்ளையார் நிறம்: பிள்ளையாரைப் பொறுத்தவரை ஏராளமான மின்னும் வண்ணங்களில் தயார் செய்யப்பட்டு மார்க்கெட்டுகளில் விற்கப்படுகின்றன.

ஆனால், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது மண்ணின் இயல்பான கருப்பு நிறத்திலோ இருக்கும் பிள்ளையாரை வாங்குங்கள். அது உங்கள் வீட்டுக்கு மிகுந்த அமைதியையும் நேர்மறை சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கும். ஆண்டுதோறும் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி, தமிழகம் மட்டும் மின்றி இந்தியா முழுவதும் இந்த பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சிவனின் முதல் மகனான விநாயகர் மூல முதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். எந்த கோயிலுக்குள் சென்றாலும் விநாயகரை வழிபட்ட பின்னரே அனைவரையும் வழிபடும் வழக்கம் உண்டு. அந்த அளவிற்கு விநாயகர் ஒரு சக்தி வாய்ந்த கடவுள் ஆவார். அவரின் பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடுகிறோம். அந்த நாளில் அவரின் சிலையை வைத்து வணங்கினால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

விநாயகர் சதுர்த்தி எப்போது?

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதியும், வட மாநிலங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி செவ்வாய் கிழமையும் கொண்டாடப்படுகிறது.

பூஜைக்கான நேரம்:

இந்து நாட்காட்டியின்படி, விநாயகர் சதுர்தசி 2023 செப்டம்பர் 18, திங்கட்கிழமை பிற்பகல் 12:39 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 19 செவ்வாய்கிழமை இரவு 8:43 மணிக்கு முடிவடையும். மேலும், நீங்கள் மத்யாஹன விநாயகர் பூஜை முஹுரத்தைப் பார்த்தால், இது காலை 11:01 மணிக்கு தொடங்கி பிற்பகல் 01:28 வரை நீடிக்கும். இதன் கால அளவு 02 மணிநேரம் 27 நிமிடங்களாக இருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு ஒரு நாள் முன்னதாக சந்திரனை பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது. அனைவரும் அவர்களது வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைப்பது நல்லது.

விநாயகர் என்ற சொல்லில், ‘வி’ எனும் எழுத்துக்கு இல்லாமை எனப் பொருள். ‘நாயகன்’ எனும் சொல்லுக்கு தலைவன் என அர்த்தம். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லை என்பதே விநாயகர் என்பதன் பொருள். அதேபோல், கணங்களுக்கு எல்லாம் பதி, அதாவது தலைவர் என்பதால் இவர் கணபதி என்று அழைக்கப்படுகிறார்.
யானை தலை, கழுத்துக்குக் கீழே தேவ உடல், மிகப்பெரிய தொந்தி, நான்கு கைகள், வளைந்த துதிக்கை, கையில் மோதகம், பாசம், அங்குசம், இந்தப் பெரிய உருவத்தை தாங்கும் சிறிய வாகனமாக மூஞ்சுறு – இப்படியான ஒரு கலவைதான் விநாயகப்பெருமான் திருவுருவம்.

இந்த உடலமைப்பு உலகின் அனைத்து உயிர்களிலும் தாம் கலந்து இருக்கும் தத்துவத்தைக் குறிக்கிறது. படைத்தல் தொழிலை பாசம் ஏந்திய திருக்கரமும், அழித்தலை அங்குசம் ஏந்திய திருக்கரமும், அருளை மோதகம் ஏந்திய திருக்கரமும், மறைத்தலை தும்பிக்கையும் குறிக்கின்றன. மொத்தத்தில், ‘ஓம்’ எனும் தத்துவப்பொருளின் அடையாளமாகவே விநாயகப்பெருமான் விளங்குகிறார். ஆகவேதான், ‘ஓம் பிரணவானன தேவாய நம’ என்பது கணபதியின் மந்திரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை கணநாதன் கணபதியின் மூன்று கண்களாகத் திகழ்கின்றன. பக்தர்களின் குறைகள் ஒன்று விடாமல் விரிவாகக் கேட்டு நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காகவே அகண்ட பெரிய செவிகள். அண்டங்களை எல்லாம் தம்முள் அடக்கியவர் விநாயகப்பெருமான் என்பதை இவரது பெருத்த வயிறு குறிக்கிறது. இவரது திருப்பாதங்கள் பக்தர்கள் வாழ்வுக்கு நல்வழி காட்டும் என்பதை விளக்கும் தத்துவப் பொருளாகவே கணபதியின் திருவுருவம் விளங்குகிறது.