சிவ பெருமானுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா?
படைத்தல், காத்தல், மற்றும் அழித்தல் என்ற மூன்று செயல்களில் அழித்தலுக்கான செயலைப் செய்பவர் சிவபெருமான் ஆவார். பிரம்மர் உயிரைப் படைப்பதும், விஷ்ணு படைக்கப்பட்ட உயிரை காக்கவும் இருக்கும்போது அந்த உயிருக்கு முக்தி அளிக்கக்கூடிய இறப்பை வழங்கும் இறைவனாக திகழ்பவர் சிவபெருமான்.
ஈசனின் நெற்றிக்கண்:
சிவனின் கோபத்தை நினைத்து பார்க்கும்போது நமக்கு தோன்றுவது அவரின் நெற்றிக்கண் எனப்படும் மூன்றாவது கண் நினைவில் வரும். இந்த நெற்றிக்கண் பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று நமக்கு அறிந்து கொள்ளும் ஆவல் தானாகவே வருவதுண்டு. இந்து மதத்தின் எல்லா நூல்களும் சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையிலும் இந்த கண் பற்றிய ரகசியம் வெவ்வேறாக உள்ளன.
இறைவன் சிவன் இந்த உலகத்தை அழிவிலிருந்து பல முறை காப்பாற்றியுள்ளார். அவருடைய நெற்றிக்கண் திறக்கும் போதெல்லாம் அது ஒரு சிக்கலான மற்றும் அவசர நேரங்களைக் குறிப்பதாக அறியப்படுகிறது. துன்பங்களுக்கு அழிவைக் கொடுக்கும் நேரமாகவும் இருக்கிறது.
ஒருமுறை காமதேவன் சிவனை தியானத்திலிருந்து கலைக்க முயற்சிக்கும்போது சிவபெருமான் கோபமடைந்து தன் நெற்றிக்கண்ணை திறந்தார். அவரது நெற்றிக்கண் காமதேவனை அழித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பாக உருவகப்படுத்தப்படுகிறது. எந்த ஒரு பொருள் சார்ந்த உணர்வும் ஆன்மீக பாதையில் தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என்பது இதன் மூலம் அறியப்படுவதாகும்.
ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டுக்காக சிவனின் கண்களை மூடியதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக ஒரு கதை உண்டு. சிவபெருமானின் இரண்டு கண்கள் சூரியன் மற்றும் சந்திரன் என்று கூறப்படுகிறது. ஆகவே பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடியவுடன் இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. ஆகவே பிரபஞ்சத்திற்கு ஒளியை கொடுக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை திறந்ததாக கூறப்படுகிறது.
ஞானத்தின் கண்:
சிவனின் நெற்றிக்கண் ஞான ஒளி மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும். எல்லாவற்றையும் அறிந்த யோகியாக சிவபெருமான் அறியப்படுகிறார். அவருக்கு பின்னால் வந்த யோகிகள் மற்றும் துறவிகளுக்கு அவர் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறார். சிவபெருமான் ஒரு யோகியாக இருந்து பல ஆண்டுகள் கடுமையான தவத்திற்கு பிறகு ஞான ஒளியைப் பெற்றார். இந்த மூன்றாவது கண் என்பது ஞானம் மற்றும் நீதியின் கண்ணாகும். அவருக்கு பின்னால் வரும் துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் விளங்குகிறார்.
உண்மையான எழுச்சி மற்றும் விழிப்புணர்வு இவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். சிவபெருமானின் மூன்றாவது கண் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை அவர் பார்க்க உதவுகிறது. அவரைப் பின்தொடர்ந்து வரும் துறவிகளும் எதிர்காலத்தைப் பற்றிய ஞானத்தை அறிந்து கொள்ளும் நிலையை அடைய வேண்டும். அதிகரித்த ஞானம் மற்று சித்தியை குறிப்பதாக இந்த மூன்றாவது கண் அமைகிறது.
