பைரவ மூர்த்தியை ஏன் வணங்க வேண்டும்?

69

பைரவ மூர்த்தியை ஏன் வணங்க வேண்டும்?

எதிரிகளிடமிருந்தும், தீய எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்தும், மந்திர தந்திரங்களால் ஏற்படும் தீமைகளிலிருந்தும் நம்மை பாதுகாப்பவர் பைவர் மூர்த்தி. செல்வத்தை இழந்தாலும், வீண் விரையம் ஏற்படாமல் இருக்கவும் பைரவ மூர்த்தி துணை நிற்கிறார். மேலும் அவர் வழக்குகளில் வெற்றி தருவார். தீய வழியில் சென்று விடாமல் தடுத்தாட்கொள்வார்.

பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும். பைரவ மூர்த்தி சனி பகவானின் குரு. ஆகவே ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச் சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் பைரவ வழிபாட்டால் குறையும் என்பது ஐதீகம்.

பைரவ தியானம்

ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம் |
டக்கா சூல கபால பாசகதரம்
ரக்ஷாகராம் பைரவம் ||
நிர்வாணம் ஸுநவாஹனம்
த்ரிநயனஜ் சாநந்த கோலாஹலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||

சந்திர பகவானை முடியில் கொண்டவரும், சிவந்த ஜூவாலைகளைக் கொண்ட சடையை கொண்டவரும், ஒளிமயமாக விளங்குபவரும், சிவந்த மேனியராக திகழ்பவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக் கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும், பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக் கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

சிவாலயங்களுக்குச் சென்று பைரவரை தரிசிப்பதும், வழிபடுவதும், மனதால் தியானிப்பதும் விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும். தலை மீது ஜுவாலா முடி, மூன்று கண்கள், மணிகளால் கோக்கப்பட்ட ஆபரணங்கள், பின்னிரு கரங்களில் டமருகம், பாசக்கயிறு, முன்னிரு கரங்களில் சூலம், கபாலம் கொண்டவர் பைரவ மூர்த்தி. பிறந்த குழந்தையின் அரைஞாண் கயிற்றில் நாய்க் காசு கட்டும் வழக்கம் உள்ளது. இந்த காசு பைரவரையே குறிக்கும். இது குழந்தைகளை பயம், தோஷம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுகிறது என்பது நம்பிக்கை.

பைரவரது வாகனம் நாய். காவல் தெய்வம் என்பதால், காவலுக்கு உகந்த நாய் வாகனமாக உள்ளது. சில கோயில்களில் நாய், குறுக்காகவும், சில கோயில்களில் நேராகவும், சில கோயில்களில் 4 நாய்களுடனும் பைரவர் காட்சி தருவார்ர். இவ்வளவு ஏன், கும்பகோணம் திருவாரூர் வழியில் உள்ள சிவபுரம் சிவகுருநாதன் கோயிலில் பைரவரது வாகமான நாய் இடது புறம் திரும்பி பைரவரது முகத்தை பார்த்தவாறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.