சிவபுண்ணியத்தின் மகத்துவத்தை அத்தனை எளிதில் யாரும் விளக்கிவிடமுடியாது. அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ‘இப்படியெல்லாம் நடக்குமா? இவர்களுக்கெல்லாம் நற்கதியா?’ என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், கடலில் மூழ்கி தத்தளிப்பவன் எப்படி ஏதோ ஒன்று பிடித்துக்கொள்ள கிடைத்தால் கரையேற முயற்சிப்பானோ அதையே போல, பிறவிக்கடலில் தத்தளிப்பவர்கள் இந்த சிவபுண்ணியத் தொடரில் இடம்பெறும் ஏதாவது ஒரு நீதியையாவது உணர்ந்து அதை பற்றிக்கொண்டு கரையேற முயற்சிக்கவேண்டும்.
அறியாமல் செய்யும் சிவபுண்ணியமே இப்படி என்றால், அனுதினமும் பக்தியோடும் உள்ளன்போடும் சிவபெருமானை துதிப்பவர்கள் அடையக்கூடிய நற்பலன்களை சொல்லவேண்டுமா என்ன ?
Ⓜ *தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்!* Ⓜ
சௌராஷ்டிர தேசத்தில் (இன்றைய குஜராத்) தீவ்விரதன் என்கிற செல்வ செழிப்பு மிக்க அந்தணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு பாபங்களே உருவமாய் அமைந்த கௌசிகன் என்கிற மகன் இருந்தான். மது, சூது, மாது என தீய பழக்கங்கள் அனைத்தும் கௌசிகனுக்கு இருந்தது. ஒரு நாள் அந்த ஊரில் இருந்த சண்டாளப் பெண் ஒருத்தியை பார்த்து அவள் மீது மையல் கொண்டு அவளை அடைந்தே தீருவது என அவள் பின்னாலேயே சுற்றித் திரிந்தான்.
அவளும் இவனிடம் உள்ள பணத்திற்கு ஆசைப்பட்டு இவன் இச்சைக்கு உடன்பட்டாள். இருவரும் கூடிக் களித்திருந்த தருணம் அந்த பெண்ணின் கணவன் அதை பார்த்துவிட்டான். இருவரையும் நையப்புடைத்தவன், *“இனி மாற்றான் மனைவி மீது ஆசைப்படாதே”* என்று கூறி அவனது பிறப்புறுப்பை அறுத்துபோட்டுவிட்டான்.
சில காலம் வாழ்ந்த கௌசிகன், பின்னர் மாண்டுபோனான். அப்போது அங்கே தோன்றிய எமகிங்கரர்கள் அவனை பாசத்தால் கட்டியிழுத்துச் சென்றார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அங்கே விரைந்த சிவகணங்கள், யமதூதர்களை அடித்து விரட்டிவிட்டு கௌசிகனை ஒரு அழகிய புஷ்பக விமானத்தில் ஏற்றிக்கொண்டு கயிலைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இங்கே சிவகணங்களால் அடித்து விரட்டப்பட்ட யமதூதர்கள் தங்கள் தலைவன் எமதர்மனிடம் நடந்த அனைத்தையும் சொன்னார்கள். உடனே எமன், *“கவலைப்படவேண்டாம். நான் போய் என்ன ஏதென்று விசாரித்து வருகிறேன்”* என்று கூறி கயிலைக்கு புறப்பட்டான்.
கயிலையில் பூத கணங்களின் தலைவரான மஹா காளரை சந்தித்து நடந்த விஷயங்களை கூறி, விளக்கம் கேட்க முற்பட்டான்.
*“யமனே… இந்த கௌசிகன் மகா புண்ணியசாலி. இவன் பால்ய காலத்தில் ஜம்பு என்கிற அந்தணச் சிறுவனோடு நட்பு கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனும் இவனை ‘திரியம்பகன்’ என்கிற ஈஸ்வர நாமங்களில் ஒன்றை குறிப்பிட்டு அழைத்து வந்தான். மிக புண்ணியம் வாய்ந்த ‘திரியம்பகன்’ என்கிற பெயரை இவன் கொண்டிருந்தமையால் இவனுக்கு கயிலையில் இடம் கிடைத்துவிட்டது!”* என்றார்.
அதைக் கேட்ட எமனுக்கு *“இந்தப் பெயரை வைத்துக்கொண்டிருந்த ஒரே காரணத்திற்க்காக இவனுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது என்பது நம்பும்படியாக இல்லையே மஹா காளரே”* என்றான் சந்தேகத்தோடு. (நம்மில் சிலரைப் போல!). சொல்லிவிட்டு உடனே ஈசனின் திருமாளிகையை நோக்கி செல்ல முற்பட்டான்.
எமன் கூறியதைக் கேட்டு கோபமடைந்த மஹா காளர், *“ஏ… மூடனே… என் வார்த்தைகளை சந்தேகித்ததோடு அவற்றை உதாசீனப்படுத்தினாய் அல்லவா… இந்தா வாங்கிக்கொள்”* என்று கூறி தனது தண்டத்தால் ஓங்கி எமனின் மார்பில் அடித்தார்.
மஹா காளரின் அடியை தாங்கமுடியாமல், “ஓ…” என்று அலறியபடி எமன் கீழே சாய்ந்தான். இருப்பினும் சிவகணங்கள் தலைவரான மஹா காளரின் தண்டம் பட்டமையால் அவனுக்கு ஞானம் துளிர்த்தது.
அவனுக்கு நினைவு திரும்ப சில நிமிடங்கள் ஆனது. அவன் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, அங்கே பிரம்மதேவர் சிவபெருமானை தரிசித்துவிட்டு வந்துகொண்டிருந்தார். அவரிடம் நடந்த அனைத்தையும் கூறி நியாயம் கேட்டான்.
பிரம்மதேவரும் மஹாகாளரை சென்று வணங்கி, *“யமனை நீங்கள் பெரிய மனம் கொண்டு மன்னிக்கவேண்டும்”* என்று பலவாறு துதித்து கேட்டார். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவே கேட்பதால் யமனை மன்னித்தார் மஹா காளர்.
பிரம்மா புன்னகைத்தபடி எமனை நோக்கி, *“கூற்றுவனே… நான் தற்போது தான் சர்வேஸ்வரனை அவரது சன்னதியில் தரிசித்துவிட்டு வருகிறேன். புண்ணியாத்மா கௌசிகன் அங்கு தான் இருக்கிறான். பரமேஸ்வரனின் திவ்ய நாமங்கள் சிறப்பை யாரால் அறுதியிட்டு கூறமுடியும் ? இனி நீ இந்த விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையுடன் இருப்பது உனக்கு நல்லது”* என்று புத்திக்கூறிவிட்டு புறப்பட்டார்.
அதன் பிறகு மஹா காளரை பலவாறு சேவித்துவிட்டு எமன் தன்னுடைய எமலோகம் சென்றான். செல்லுகையில் அவனுடன், கௌசிகனை இழுத்து வரச் சென்றபோது சிவகணங்களிடம் அடி வாங்கி ஓடிவந்த கிங்கரர் படைத்தலைவனை பார்த்து, *“சிவகணங்களை பார்த்த மாத்திரத்தில் நீ ஏன் கௌசிகனை விடுவிக்கவில்லை ? அவர்களிடம் உதை வாங்கும் வரை காத்திருக்கவேண்டுமா ? அவன் புண்ணியாத்மாவோ பாபியோ யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும். சிவகணங்களை பார்த்த மாத்திரத்தில் நீ வராமல் அவர்களோடு ஏன் வாக்குவாதம் செய்தாய் ? உடனே வந்திருக்கவேண்டியது தானே ? நான் பார்த்துக் கொள்ளமாட்டேனா ? இது உனக்கு மட்டுமல்ல… எனக்கும் நேர்ந்திருக்கிறது. நான் அதிகாரத்திற்கு வந்த புதிதில் இதே போல உமாபதியின் நாமங்கள் பெருமை தெரியாமல் நடந்துகொண்டேன்….”* என்கிறார் பெருமூச்சு விட்டபடி.
*“அது என்ன பிரபோ? சற்று விளக்கமாக கூறுங்களேன்…”*
“கந்துகம் என்கிற நாட்டை நந்தகன் என்கிற ஷத்ரிய அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு துர்க்குணங்கள் நிரம்பிய காமதை என்கிற மனைவி இருந்தாள். பேரழகு நிரம்பிய அவள் காமவெறி பிடித்தவள். தன் கணவனைத் தவிர அழகு வாய்ந்த ஆடவர்கள் யாரைக்கண்டாலும், அவர்கள் எந்த வர்ணத்தை சார்ந்தவராக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவர்களோடு கூடிக்குலாவி சம்போகம் செய்துவந்தாள்.
இப்படி இருக்கும் போது ‘துர்புத்தி’ என்கிற பெயருடைய ஒரு நீசனின் நட்பு அவளுக்கு கிடைத்தது. அவனோடு அவள் கூடிக் களித்திருந்தாள். இதன்விளைவாக கருத்தரித்தாள். பின்னர் அவனை விட்டு பிரிந்து ‘வஸுவதி’ என்கிற பெயர் கொண்ட அந்தணனோடு பழக்கம் ஏற்பட்டு அவனோடு சேர்ந்து வாழ்ந்தாள். இதனிடையே பிள்ளையும் பெற்றாள். வஸுவதி எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தான். ஆதரிப்பார் யாருமில்லாத காரணத்தால் தான் பெற்ற குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு முன்பு தான் கூடிக்குலாவிய ‘துர்புத்தி’யிடமே மீண்டும் சென்றாள். அவனும் இவள் அழகிற்காக ஏற்றுக்கொண்டான்.
இருவரும் ஒரு முறை கப்பல் பிரயாணம் செல்லுகையில் நடுக்கடலில் புயல் வீசி கப்பல் கவிழ்ந்துவிட்டது. இருவரும் உயிர் துறந்தார்கள்.
உடனே அடுத்த வினாடி அவர்களை பாசத்தால் கட்டியிழுத்து நரகிற்கு கொண்டு வந்த யமதூதர்கள், இருவரையும் பலவிதங்களில் சித்தரவதை செய்யலானார்கள். ஆனால், அங்கே திடீரென பிரவேசித்த சிவகணங்கள் இருவர், எமதூதர்களை விரட்டிவிட்டு இருவரையும் மீட்டுக்கொண்டு கயிலைக்கு சென்றுவிட்டார்கள்.
இதைப் பார்த்த எனக்கு கோபம் தலைக்கேறியது. *“சிவகணங்களே, பாபமே உருவான இவர்களை ஏன் நீங்கள் காப்பாற்றி அழைத்துச் செல்கிறீர்கள்?”* என்று கேட்டேன்.
உடனே அவர்கள் என் மீது கோபம் கொண்டு, என்னை என் பாசத்தாலேயே கட்டி தூக்கிக் கொண்டு போய் சக்ரவாள மலையின் அடிவாரத்தில் ஒரு குகையில் தலைகீழாக தொங்கவிட்டுவிட்டு, காவலுக்கு ஒரு பூத கணத்தையும் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
நான் இந்த பதவிக்கு வந்த புதிதில் நடந்தது இது.
இதற்கிடையே எனக்கு நேர்ந்த கதியை அறிந்த சித்திரகுப்தன், மகா விஷ்ணுவிடமும் பிரம்மதேவரிடமும் ஓடிச்சென்று நடந்ததை கூறி என்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டான். அவர்களும் தாங்கள் சிவபெருமானிடம் பேசி ஆவன செய்வதாக கூறிவிட்டு சென்றனர். அங்கே கயிலையில் விநாயகப் பெருமான் எதிர்பட்டார். அவரிடம் நடந்தை கூறி என்னை மீட்க உதவும்படி கேட்டுக்கொண்டனர்.
*வரலாற்று தகவல் 😘 மஹாமேரு, உதயகிரி, ஹஸ்திகிரி, சக்ரவாள மலை, நிஷாதம், விந்திய மலை, நரசிம்மகிரி, அத்திகிரி ஆகிய மலைகள் விளங்கும் இந்த உலகினை எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக் கஜங்களான புஷ்பதந்தம், ஐராவதம், புண்டரீகம், குமுதம், சார்வபௌமம், சுப்ரதீபம், அஞ்சனம், வாமனம் ஆகிய எட்டு யானைகள் தாங்கி நிற்கின்றன.
விநாயகருக்கும் அளவு கடந்த கோபம் ஏற்பட்டது. *“அந்த யமனுக்கு என்ன துணிச்சல் இருந்தால் சிவகணங்களோடு மோதுவான் ? வாக்குவாதம் செய்வான் ? அவனுக்கு அந்த தண்டனை தேவை தான்!”* என்றார்.
*“ஆனைமுகத்து அண்ணலே… கோபம் கொள்ளவேண்டாம். சாந்தியடையுங்கள். புதிதாக பதவிக்கு வந்திருக்கும் அந்த எமன் விபரம் அறியாமல் ஏதோ தவறு செய்த்து விட்டான். அவனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்”* என்று நமஸ்கரித்து கேட்டுக்கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து கோபம் தணிந்த ஆனைமுகன், உடனே ஒரு பூதத்தை அனுப்பி என்னை விடுவித்து அழைத்து வருமாறு கட்டளையிட்டார். அந்த பூதமும் சக்கரவாள மலைக்கு விரைந்து வந்து என்னை விடுவித்தது அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தியது.
*“யமனே… இவ்விருவரும் பாபாத்மாக்கள் என்று நினைத்துவிட்டாய். இவ்விருவரும் செய்த சிவபுண்ணியம் நீ அரியமாட்டாய். அதனால் தான் உனக்கு இவ்வளவு துன்பம்….”*
உடனே நான் *“மன்னிக்க வேண்டும் விநாயகப் பெருமானே… அவர்கள் எத்தகைய சிவபுண்ணியம் செய்தவர்கள் என்பதை அடியேனுக்கு எடுத்துரைக்கவேண்டும்”* என்று கேட்டுக் கொண்டேன்.
“காமதை துர்புத்தியோடு கூடி கருத்தரித்த பிறகு, வஸுவதி என்கிற அந்தணனிடம் சென்று அங்கு குழந்தை பெற்றாள். வஸுவதி எதிர்பாராதவிதமாக மாண்டதும், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் துர்புத்தியிடம் சென்றுவிட்டாள். வஸுவதியின் நல்லொழுக்கம் மிக்க மனைவி, அந்தக் குழந்தை மீது இரக்கங்கொண்டு ‘சங்கரன்’ என்கிற பெயரைச் சூட்டி அந்த மகவை வளர்த்து வந்தாள். அக்குழந்தையை ‘சங்கரா’ என்று அடிக்கடி அழைத்து வந்தாள். அந்தக் குழந்தையும் அந்த அந்தணன் வீட்டில் பலவித பணிவிடைகள் செய்தபடி வளர்ந்து வந்தது.
தன் சக்களத்திக்கு பிறந்த குழந்தையாக இருந்தாலும், தன் கணவன் கூடிக்குலாவிய பெண்ணுக்கு பிறந்த குழந்தை என்பதால் அக்குழந்தைக்கு ‘சங்கரன்’ என்ற பெயரை சூட்டினாள் அவள்.
பரமேஸ்வரனின் திவ்விய ஸ்வரூப திருநாமங்களில் ஒன்றான ‘சங்கரன்’ என்கிற பெயரை அக்குழந்தை பெற்றதால், அந்த சிவபுண்ணியத்தின் மகிமையால் அதன் பெற்றோர்களுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது.
அந்த சர்வேஸ்வரனின் திருநாமங்களின் மகத்துவத்தை உணர்ந்து யார் அவர்களின் பிள்ளைகளுக்கு முறைப்படி அப்பெயர்களை சூட்டி அழைக்கிறார்களோ அவர்கள் அடையக்கூடிய புண்ணியத்தை அநேக கோடி வருஷங்கள் ஆனாலும் யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது. என்னால் மட்டும் எப்படி கூறமுடியும்?” என்றார் விக்னேஸ்வர பெருமான்.
நான் உடனே அவரது கால்களில் வீழ்ந்து *“ஆனைமுகத்து கடவுளே… நான் செய்த பிழையை பொறுக்கவேண்டும்.”* என்று வேண்டிக் கொண்டு விடை பெற்றேன்.
உடனே விநாயகப் பெருமான் என்னை நோக்கி, “காலதூதர்களின் தலைவனே, இனியாவது சர்வேஸ்வரரின் திருநாமங்களின் மகத்துவத்தை உணர்ந்து நீயும் உன் தூதர்களும் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் உன்னை காப்பாற்ற முடியாது!” என்றார்.
Ⓜ *இந்த புராணக்கதையை ஒட்டிய தேவாரப் பாடல் இதோ…!*Ⓜ
ஈசனின் பெயரைக் கூறினாலே நல்வினையை அடையலாம் என்று கூறுகிறார் சம்பந்தர்.
*நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்*
*சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே*
*பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப*
*நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே*
– திருஞானசம்பந்தர்
*விளக்கம் நல்ல நெஞ்சமே! நாள்தோறும் நினைந்து எம்பெருமான் ஈசனை வணங்குவாயாக. இறக்கின்ற நாளும், உலகினிலே வாழ்கின்ற நாளையும் கணக்கிட்டுக் கூற முடியாது. சாய்க்காட்டில் அமர்ந்திருக்கும் எம்பெருமானுக்கு நாள்தோறும் பூக்களைச் சுமந்து சென்றும், அப்பெருமானது திரு நாமங்களைக் காதுகள் நன்கு கேட்குமாறும் செய்வாயாக. நாவானது நாள்தோறும் அச்சிவனது திருநாமங்களை சொல்லி ஏத்தி வழிபட, நல் வினையைப் பெறலாம்.
சிவ ! சிவ !
தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன் ஏன் எதற்கு?
RELATED ARTICLES
