எம்பெருமானுடன் விவாதம்

262

நம் எல்லோருடைய பலவீனமே, நம் செயல் எல்லாவற்றிக்கும் நாம் தான் அதிகாரி என்ற இறுமாப்பு. அப்படியே அவனை நாம் அறிய முயன்றாலும், நம்முடைய அறிவு அவனை முழுவதுமாய் நம்பிட மறுத்து தனக்குள்ளேயே விவாதம் செய்யத் தொடங்குகின்றது.

நமக்குள்ளே ஒருவன். நம்மோடு நெருங்கிய சம்பந்தப் பட்டவன் என்ற பிரஞை இல்லாமல் வாழ்வது தான், நமது துயரங்களின் அடிப்படைக் காரணம்.

எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும், எம்பிரான் நம்முடைய வழி காட்டி, நம்முடைய மிக நெருங்கிய உறவினன் என்ற எண்ணம் எப்போது ஏற்படுகிறதோ, அப்போதே நம்முடைய இன்னல்கள் சிறிது சிறிதாக மறையத் துவங்குகின்றன.

நெஞ்சத்துக்குள் அகம்பாவ அழுக்கை வைத்துக் கொண்டு ஆலயங்களுக்கு மட்டும் செல்வது, ஒரு பாத்திரத்தில் உள்ளே உள்ள அழுக்கினை சுத்தம் செய்யாமல், வெளியில் மட்டும் பள பள என்று துலக்கி வைத்தானாம் ஒருவன், அது போன்றது தான்.

நெருங்கிய உறவினர் ஒருவர் போன மாதம் முதல் வாரத்தில் சொன்னார், ‘அண்ணா, அடுத்த மாஸம் வட இந்திய திவ்ய தேச யாத்திரை போகணும்னு முடிவெடுத்து எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. சின்ன சின்ன ஏற்பாடுகளைக் கூட விடாமல் ஒவ்வொண்ணா யோசிச்சு பண்ணியாச்சு. திட்டப் படி எல்லாம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு’

அடியேன் சொன்னேன் ‘எம்பெருமானை வேண்டிக்கொண்டு மஞ்சள் தோய்த்த துணியில் ஒரு ரூபாயாவது முடிஞ்சு வைச்சு தானே ஏற்பாடுகளை ஆரம்பித்தாய்?’ என்று எப்போதும் எந்த நல்ல காரியத்திற்கும் முன்னதாகச் செய்யும் எங்கள் குடும்ப வழக்கத்தைப் பற்றி கேட்டேன்.

சற்றே துடுக்கான அந்த உறவினர் சிரித்துக் கொண்டே சொன்னார் ‘ போறதே புண்ய க்ஷேத்ர யாத்திரை என்னும் போது, இது தேவை தானா அண்ணா’ என்றார். பதிலேதும் நான் சொல்லவில்லை.

வீட்டு வாசல் படியைத் தாண்டினாலே, வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளியில் போவதைச் சொல்லி விட்டுப் போகும் நாம்,

பெரிய யாத்திரைக்குப் புறப்படும் சமயம் நமக்குள்ளேயே வாழும் எம்பிரானுக்குக் குறைந்த பட்சம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு பிரயாண ஏற்பாடு செய்வதன் சமிஞை தானே,

அவனிடம் நம்முடைய பிரயாணத்தை ஒப்படைத்து மஞ்சள் துணியில் காசு முடிந்து வைப்பது போன்ற சிறு நேர்த்திச் செய்கைகள். ஏன் இதைக் கூட இவர் செய்யவில்லை என்று மனதின் ஓரத்தில் பட்டது.

மாதக் கடைசியில் அவரை மறுபடியும் பார்க்கும் போது, ‘ விஷக் கருமி ஆபத்தால், யாத்திரை, ட்ரெயின் எல்லாம் தள்ளுபடி ஆயிடுச்சு. இன்னும் செஞ்ச பல ஏற்பாடுகளை என்ன பண்ணறதுன்னு தான் தெரியலே அண்ணா ‘ என்றார்.

வருத்தத்தில் இருந்த அவருக்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை. ‘கவலைப் படாதே அடுத்த மாசம் எல்லாம் சரியாகி விடும். எம்பெருமானை நம்பிடு’ என்று கண்ணனை வேண்டிக் கொண்டு நம்பிக்கை தந்தேன்.

நம்பிள்ளை என்ற வைணவ ஆச்சார்யன், ஈடு முப்பத்தாறாயிரம் படி என்னும் வியாக்கியானத்தில் ஒரு கதையை காட்டி அருளினார்.

ஒரு வணிகன் வெளி நாட்டிற்கு சரக்கு அனுப்பிட சரக்குடன் தானும் கூடச் சென்றான். அச்சமயம் அவனுடைய மனைவி கருவுற்றிருந்தாள்.

அவன் சென்ற நாட்டில், வணிகனுக்குத் தெரிந்த பல வகைத் தொழில்களுக்கான வாய்ப்பு இருந்ததால், தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பாமல், செல்வம் ஈட்டிட பல காலம் அங்கேயே தங்கி விட்டான். சொந்த ஊரில் அவனுடைய மனைவி ஒரு மகனை ஈன்றாள்.

மகன் பெரியவனாகி தன்னுடைய குலத்திற்கான வணிகத் தொழிலை மேற்கொண்டான். தன்னுடைய தந்தை முன்னாளில் செய்தது போல வணிகச் சரக்கோடு வேறொரு நாட்டுக்குக் கப்பலில் புறப்பட்டான்.

மகன் எந்த நாட்டிற்குச் வணிகம் செய்யச் செல்கிறானோ, அவனுடைய தந்தையும் அதே நாட்டில் சென்று வணிகம் செய்திட மகன் சென்ற அதே கப்பலில் பயணித்தான்.

இதற்கு முன் ஒருவரை ஒருவர் கண்டிராத காரணத்தால், தம்முடைய அப்பன் மகன் உறவு முறையை அறியாமலேயே ஒன்றாகப் பயணித்தார்கள்.

கப்பலில் இருந்து சரக்கு இறங்கிட வேண்டிய துறைமுகம் வந்தது. துறை முகத்தில், தந்தை எந்த இடத்தில் தன்னுடைய சரக்கினை இறக்கிட நினைத்தானோ, மகனும் அதே இடத்தில் தான் கொண்டு வந்த சரக்கை இறக்கிட எண்ணம் கொண்டு , தந்தை என்று அறிந்திடாமல், அவருடன் வாதச் சண்டை இட்டான். வாய்ச் சண்டை முற்ற ஆரம்பித்தது.

இருவரும் யார் யார், அவர்கள் உறவு முறை என்ன என்று அறிந்த ஒரு மூன்றாவது நபர், ஒரு கிழவனார், இவர்களுடைய உறவு முறையைப் பற்றி இருவரிடமும் எடுத்துச் சொன்னவுடன்,

இருவரும் அன்புக் கண்ணீர் பெருகிட, தழுவிக் கொண்டு, இருவருடைய சரக்கையும் ஒன்றாகப் பாவித்து, துறை முகத்தில் இறங்கிடச் செய்து, தந்தை ரக்ஷகராகவும் (காப்பாற்றுவார்) , மகன் ரஷ்யராகவும் (காக்கப் படுபவர்) மாறினார்கள்.

நம்முடைய கதையும் இதே தான். நமக்குள்ளேயே இருக்கும் எம்பிரானுடைய நெருங்கிய உறவைப் பற்றி திடமாக அறிய ஆரம்பிக்கும் போதே, தந்தையான அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

கோதா நாச்சியார் பாடிய ‘உன் தன்னோடு உறவேல் நமக்கு ஒழிக்க ஒழியாது. அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே’ –

– எம்பிரானே உன்னுடன் உண்டான உறவு நம்மிருவரில் யார் நினைத்தாலும் அழியாது. நாங்கள் விவரம் இல்லாத சிறு பிள்ளைகள். நீ வசிக்கும் எங்கள் உள்ளத்திலேயே ‘இவன் வந்து எப்படி உதவிடப் போகிறான் என்று உன்னிடம் நம்பிக்கை இல்லாமல் விசாரணை செய்து கொண்டிருந்தோம்.

அதற்காக எங்களைக் கோபித்திடாதே பரந்தாமா!’ என்று தீர்க்கமாக உணரத் தொடங்கிய உடனேயே நம்முடைய மனதின் பாரங்கள் காற்றாகப் பறந்திடும்.