எட்டு பேறுகள் அருளும் எட்டு பைரவர்கள்

105

பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி.

பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். “சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள்’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.

குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.

சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.

குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.

உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.

கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.

பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.

சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.