செவ்வாய் தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!
சிவத்தலமான இங்கு செவ்வாய்க் கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது.
அகத்தீஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலாய மலையில் திருமணம் நடந்தபோது முனிவர்கள், ரிஷிகள் ஒன்று திரண்டதால் வடநாடு தாழ்ந்து, தென்நாடு உயர்ந்தது. இதையடுத்து உலகை சமப்படுத்துவதற்காக அகத்திய முனிவரை தென்திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் உத்தரவிட்டார். இது உங்களுக்கு தெரிந்த கதைதான்.
தென்திசை வந்த அகத்தியர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட ஒரு தலம்தான் வில்லிவாக்கத்தில் உள்ள சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் ஆலயமாகும். அகத்தீஸ்வரர் வழிபட்ட லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.
அந்த கால கட்டத்தில் தற்போதைய வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வ லனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது.
இங்குள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் மகரிஷிகள் கூடினர். அங்காரகன் என்ற கிரகத்தால் உலகுக்கே பல தீமைகள் வருவதை அறிந்து அதை நிவர்த்திக்கப் பெரிய யாகம் ஒன்றைச் செய்தனர். விசுவாமித்திரர் கலந்து கொண்ட இந்த யாகத்தில் தோன்றிய பூதம் அங்காரகன் (அங்கம் +அழகன்) மீது சென்றது. அப்போது அங்காரகன் “தன் பெயரில் தீர்த்தம் ஒன்று அமைத் தால் தனது கொடிய அதிகாரங்களைச் செலுத் தாமல் இருக்கிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்திரன் முதலானோர் சேர்ந்து இத்தலத்தில் “அங்காரகதீர்த்தம்” அமைத்து நீராடி வழிபட்டனர்.
ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திர தோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் செய்து கொள்வர். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவது உறுதி. அமாவாசையில் நீராடுவோர் சத்துரு பயமின்றி வாழ்வர். பவுர்ணமியில் நீராடுவோர் சகல சம்பத்துக்களும் பெற்றுச் சகல யோகம் மிக்க பெருவாழ்வு வாழ்வர்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பொதுவாக சக்தி தலங்களில்தான் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும். பொங்கல் வைப்பதும், நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும், புற்றுக்கு முட்டை, பால் ஊற்றுவதும் கோலாகலமாக இருக்கும். ஆனால் சிவத்தலமான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பக்தைகள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மரத்தடி புற்று மண்டப வழிபாட்டுக்கும் ஆலய வழிபாட்டுக்கும் நீண்ட வரிசைக்காக தடுப்புக் கட்டைகள் கட்டி உள்ளனர். இது தவிர இந்த ஆண்டு சிறப்பு கட்டண தரிசன வரிசையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
என்றாலும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த தலத்தில் திரளும் பக்தைகள் எண்ணிக்கை ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. தன்னை வந்து அடைந்தாருக்கு அருள் கூட்டும் திருத்தலம் இது. தெரிந்து வந்தால்தான் பலன் என்றில்லை. அறிந்தோ அறியாமலோ இந்தத் திருத்தலத்தின் எல்லையில் வந்தாலும் பெரும் பலன் தரும் திருத்தலம்.
பஞ்சமாபாதகன் என்றாலும் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பரம பவித்ரனாகி விடுவான். மார்க் கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சொர்ணாம் பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், முக்தர்களும், யோகிகளும், ஞானிகளும் செவ்வாய்க்கிழமை தோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
அகத்தியரால் அமைக்கப் பெற்ற இந்த லிங்க வடிவத்தைப் பார்த்த மாத்திரத்தில் அறிவும், ஆற்றலும் அருந்தவச் சீலமும் கைவரப் பெறுவர். நாகலோகக் கன்னியர்களும், கந்தர்வர்களும் வழிபட்ட பெருமைக்குரியது இத்திருமூர்த்தமாகும். ஆதியில் திருக்கயிலாயத்தில் உமா மகேசுவரன் வீற்றிருக்கும் காலத்தில் ஒருநாள் திடீரென்று செம்மணிச்சுடர் ஒன்று தோன்றித் தெற்கு திசையை நோக்கிச் சென்றது. அதன் அர்த்தம் என்னவென்று கேட்ட தேவர்களுக்கு நந்தி பெருமான். வில்லி வாக்கத்தில் உள்ள செவ்வாய் ஷேத்திரத்தில் பரமேஸ்வரன் அமர்ந்து திருவிளையாடல் செய்யப் போகும் நிமித்தம்தான் இது என்று விளக்கினார்.
இத்தகைய சிறப்புடைய வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத செவ்வாய்க்கிழமை என்பது சிறப்பு மிக்க வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. ஸ்ரீஅகத்திய மாமுனிவருக்கு அருள் பாலித்து வில்வன், வாதாபி என்ற இரு அரக்கர்களை வதம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலமாகும். இத்திருக் கோவிலின் தல விருட்சம் வில்வ மரம் ஆகும். இத்திருக் கோவிலுக்கு அங்காரக ஷேத்திரம், செவ்வாய்கிழமை கோவில் என்ற சிறப்புப்பெயர்களும் உண்டு.
பெருமை பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர பெருமானை ஆடி மாத செவ்வாய்கிழமை அன்று தரிசித்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக அனைத்துவிதமான தோஷங்களும் விலகி சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வர சுவாமியின் திருவருளைப் பெற்று நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம்.
ஐஸ்வர்ய வீரபத்திரர்
அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என் பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்து வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, “ஐஸ்வர்ய வீரபத்திரர்’ என்று அழைக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை அதிக கூட்டம் ஏன்?
நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். “செவ்வாய்க்கிழமை கோயில்’ என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம் பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.